அருளையும் உண்மையையும் கொண்டு வரும் விண்ணக அரசு
மெரினா ராஜ் – வத்திக்கான்
இயேசு அரசர் என்பதற்கு அவரே சான்றாக இருக்கின்றார். உண்மையைப் பேசுகின்றார் என்றும், அவரது ஆற்றலுள்ள அரசு, அருளையும் உண்மையையும் கொண்டு வரும் விண்ணக அரசு என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்துஅ அரசர் பெருவிழாவன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலாத்து முன் இயேசு கொண்டு வரப்பட்ட நற்செய்திப் பகுதியில் இடம்பெற்றுள்ள அரசன், உலகம் என்னும் இரண்டு வார்த்தைகள் புதிய வகையில் அர்த்தம் பெறுவதைக்குறித்து எடுத்துரைத்த்தார்.
பிலாத்தின் உலகம் பலவீனமானவர்கள் மீது வெற்றி கொள்கின்ற அதாவது பணக்காரர்கள் ஏழைகள் மீதும், வன்முறையாளர்கள் அமைதியானவர்களிடமும் வெற்றி கொள்கின்ற உலகம் போன்றது என்றும், வார்த்தை மனுஉருவான அவரின் பிறப்பிலும் அவரது உண்மையான மற்றும் உலகை மாற்றும் பயனுள்ள வார்த்தையிலும் வெளிப்படுகின்ற இயேசுவின் அரசு இவ்வுலக அவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை
நிலையான, புதிய உலகிற்காகவும், நமது மீட்பிற்காகவும் தனது உயிரைக் கொடுப்பதன் வழியாக இறைவன் அத்தகைய உலகிற்கு நம்மைத் தயார்படுத்துகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அருளையும் உண்மையையும் இந்த விண்ணக அரசிற்கு இயேசு கொண்டு வருகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
இயேசுவை அரசராகக் கொண்ட உலகத்தில், தீமையால் அழிக்கப்பட்ட இப்படைப்பை இறை அன்பின் ஆற்றல் மீட்டெடுக்கின்றது. ஏனெனில் இயேசு படைப்பைக் காக்கின்றார், விடுதலை அளிக்கின்றார், மன்னிக்கின்றார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அமைதியையும் நீதியையும் நமக்கு தருபவர் இயேசுவே என்றும் கூறினார்.
நமது ஆன்மா எப்படி இருக்கின்றது? கடினமானவற்றை நாம் சுமந்து கொண்டிருக்கின்றோமா? ஏதேனும் பழைய பாவ குற்ற உணர்வுகள் நம்மிடம் இருக்கின்றதா? எனில் இயேசுவிடம் மன்னிப்பு கேட்போம். அவர் நமது பாவங்களை மன்னிக்க ஒருபோதும் சோர்வடைவதில்லை என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
எப்போதும் மன்னிக்க தயாராக இருப்பவர் இயேசு, இதுவே அவரது அரசு என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு என்னும் உண்மையை தனக்கு எதிரில் கொண்டிருந்தாலும் பிலாத்து அதனை உணர்ந்து கொள்ளவில்லை, இருப்பினும் யூதர்களின் அரசன் என்று எழுதக் கட்டளையிடுகின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
உண்மையை எடுத்துரைப்பதே அவரது பணி. அதற்காகவே பிறந்து இவ்வுலகிற்கு வந்தார். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் அவர் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர் என்ற இறைவார்த்தைகளை மேற்கோள்காட்டி தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவின் அரசுக்கு ஏற்ற வாழ்க்கை வாழவும் அவரை நமது வாழ்வின் அரசராகக் கொண்டு சிறக்கவும் வலியுறுத்தினார்.
கடவுளுக்கு செவிசாய்ப்பதால் நமது உள்ளத்திலும் வாழ்விலும் ஒளி வீசுகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசு எனது அரசர் என்று நம்மால் சொல்லமுடிகின்றதா அல்லது வேறு அரசர்கள் நம் இதயத்தில் இருக்கின்றார்களா என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், அவரது வார்த்தையை வழிகாட்டியாக கொண்டிருக்கின்றோமா அவரின் இரக்கமுள்ள முகத்தைக் காண்கின்றோமா என எண்ணவும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்