ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறப்பது வாழ்வின் கொடை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளது மீட்பின் மகத்தான அடையாளங்களைப் பற்றி சிந்திப்பது நம்மை ஒருபோதும் அவரிடமிருந்து தொலைதூர உணர்வை ஏற்படுத்தக்கூடாது, மாறாக நம் அருகில் உள்ள அவரது பிரசன்னத்தையும் அன்பையும் அடையாளம் காண உதவவேண்டும் என்றும் ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறப்பது அக்குழந்தைக்கும், அவரது அன்னைக்கும் வாழ்வின் கொடை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு சாந்தா மார்த்தா இல்லக் கோவிலிலிருந்து காணொளி வாயிலாக எடுத்துரைத்த மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். லேசான இருமல் காரணமாக வழக்கமாக மூவேளை செப உரை வழங்கு இடத்தில் அல்லாமல் சாந்தா மார்த்தா இல்லத்தில் இருந்தவாறு காணொளி வாயிலாக தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், குடிலில் வைக்கப்பட இருக்கும் குழந்தை இயேசு திருச்சிலுவையையும் ஆசீர்வதித்தார்.
வானதூதரின் அறிவிப்புக்குப் பின் மரியா முதிர்வயதில் கருவுற்றிருக்கும் தனது உறவினரான எலிசபெத்தை சந்திக்கும் நிகழ்வானது, தாய்மை என்ற சிறப்புக் கொடையைப் பெற்றிருக்கும் பெண்கள் இருவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றது என்றும், மரியா மீட்பரான இயேசுவைக் கருவுற்றிருக்கிறார் எலிசபெத் மீட்பரின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்ய இருக்கும் திருமுழுக்கு யோவானைக் கருவுற்றிருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இம்மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு தவறு அல்ல மாறாக வாழ்வின் கொடை என்றும், எலிசபெத்தைப் போல வயிற்றில் குழந்தையை சுமந்து ஆவலுடன் காத்திருக்கும் கருவுற்ற தாய்மார்களின் அழகை வியந்து போற்றுவோம் இறைவனைக்கு நன்றி கூறுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
அன்னையருக்க்கும், அந்த அன்னையரைக் கொடையாக் கொடுத்த இறைவனுக்கும் நன்றியினையும் எடுத்துரைப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கருவுற்ற பெண்களை மதித்து அவர்களை அன்பு செய்வோம் என்றும், பேருந்தில் அத்தகையவர்களுக்கு இடமளித்து உதவுவது எதிர்நோக்கு மற்றும் மரியாதையின் அடையாளம் என்றும் கூறினார்.
கிறிஸ்து பிறப்பு நாட்களில் விளக்குகள், அலங்காரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் இசையுடன் திருவிழாச் சூழ்நிலையை உருவாக்க விரும்பும் நாம் ஒவ்வொருவரும், குழந்தையை கருவில் சுமக்கின்ற அல்லது கைக்குழந்தையை வைத்திருக்கின்ற அன்னையரைக் காணும்போதெல்லாம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்துபவர்களாக இருப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை.
பெண்களுக்குள் ஆசீர் பெற்றவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர் பெற்றவரே என்று எலிசபெத் மரியாவை வாழ்த்தியது போலவும், என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றுகின்றது என்று மரியா இறைவனைப் போற்றியது போலவும் நாமும் குழந்தைகளுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் கொண்ட அன்னையரையும் வாழ்த்தி போற்றுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை.
பாவத்தைத் தவிர, எல்லாவற்றிலும் நம்முடன் பங்குகொள்ள, நம்மைப் போன்ற மனிதனாகக் கடவுள் மாறியதால் நாம் அவருக்கு நன்றி செலுத்துகின்றோமா? பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் நாம் இறைவனைத் துதித்து போற்றுகின்றோமா? கருவுற்றிருக்கும் அன்னையரைக் கடந்து செல்லும்போது, கருணையுள்ளவர்களாக நடந்து கொள்கின்றோமா? கருவறை முதல் பிறப்பு வரை குழந்தையின் தூயவாழ்வை மதிப்பை நிலைநிறுத்தி பாதுகாக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
இவ்வாறு தனது மூவேளை செப உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்