தேடுதல்

திருஅவையில் 14 புதிய புனிதர்கள்

அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஓர் அருள்பணியாளர். 8 ஆண் துறவறத்தார், 2 அருள்சகோதரிகள் உட்பட மூன்று பொதுநிலையினர் என மொத்தம் 14 பேர் புனிதர்களாக உயர்த்தப்பட்ட கூட்டுத் திருப்பலியானது நடைபெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 20 பொதுக்காலத்தின் 29ஆம் ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் புனிதர் பட்ட கூட்டுத் திருப்பலியில் பங்கேற்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.

Manuel Ruiz López மற்றும் அவரது 7 உடன் சகோதரர்கள் Francesco, Mooti, Raffaele Massabki என்னும் பொதுநிலையினர் மூவர் என மறைசாட்சிகளாக இறந்த 11பேருடன், கொன்சோலாத்தா மறைப்பணியாளர்கள் சபையின் நிறுவனர் அருள்பணி Giuseppe Allamano, திருக்குடும்பத்தின் சிறிய சகோதரிகள் சபையின் நிறுவனர் அருள்சகோதரி Marie-Léonie Paradis, தூய ஷீதா சபை என அழைக்கப்படும் ஒப்லாத்தே தூய ஆவியார் சபையை நிறுவியவரான அருள்சகோதரி Elena Guerra என 14 அருளாளர்கள் இத்திருப்பலியின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக உயர்த்தப்பட்டனர்.

தூய பேதுரு பெருங்கோவிலின் உள்புறத்தில் இருந்து பீடப்பணியாளர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள், கர்தினால்கள் பவனி வர வருகைப் பாடலானது பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. வத்திக்கான் வளாகத்தின் பீடப்பகுதியை முன்னதாகவே வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலிக்குரிய ஆடை அணிந்து தயாராக இருந்தார், ஏறக்குறைய 35000 மக்கள் கூடியிருந்த வத்திக்கான் வளாகத்தில் புனிதர் பட்டக் கூட்டுத்திருப்பலியினை சிலுவை அடையாளம் வரைந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கி வைத்தார். அதன் பின் புனிதர் பட்ட நிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ அவர்கள், திருத்தந்தையிடம் 14 அருளாளர்கள் புனிதராக அறிவிக்கப்படுவதற்கான பரிந்துரையை முன்வைத்தார். புதிய புனிதர்களின் வாழ்க்கை குறிப்பானது திருப்பயணிகள் அனைவருக்கும் வாசிக்கப்பட்டது.

அருளாளர் Manuel Ruiz López, அவரது 7 உடன்சகோதரர்கள் மற்றும் 3 பொதுநிலையினர்

1860 ஆம் ஆண்டுகளில் லெபனோன் முதல் சிரியா வரை கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட வேதகலாபனைகளில் மறைசாட்சிகளாக இந்த 11 பேரும் தங்களது வாழ்வைக் கிறிஸ்துவிற்காகவும் கிறிஸ்தவத்திற்காகவும் கொடுத்தவர்கள். 1860 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று தாமஸ்கஸ் பகுதியில் இருந்த 3800 வீடுகள் Shiite Druze என்னும் குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாகின. அன்று இரவு நடந்த கொடிய  தாக்குதல்களில் பிரான்சிஸ்கன் சபையாரின் தூய பவுல் இல்லம் குறிவைத்து தாக்கப்பட்டது. மூடப்பட்ட கதவுகளைத் துளைத்துக் கொண்டு சென்ற வன்முறையாளர்கள், அத்துறவற இல்லத்தில் இருந்த ஸ்பானிய நாட்டைச்சார்ந்த ஏழு துறவறத்தார், ஆஸ்திரியாவைச் சார்ந்த ஒருவர், மாரனைட் வழிபாட்டுமுறைக் கிறிஸ்தவர்களான பொதுநிலையினர் மூவர் என 11 பேரை கொலைசெய்தனர். கிறிஸ்தவத்தை விட்டுவிட்டு இஸ்லாம் மதத்தைத் தழுவும்படிக் கட்டாயப்படுத்தப்பட்ட இம்மறைசாட்சிகள் 11 பேரும் அதற்கு இணங்காததால் மறைசாட்சிகளாக மரித்தனர்.

மறைசாட்சிகளாக இறந்த 11 பேரில் முதலாமவர் 1. மானுவல் ரூயிஸ் லோபஸ்,

ஸ்பெயினின் பர்கோஸ் பகுதியில் உள்ள தூய மார்ட்டின் டி லாஸ் ஒல்லாஸில் 1804ஆம் ஆண்டு பிறந்தவர். 1825 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற இல்லம் (Friars Minor) சேர்ந்த இவர், 1830 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவுபெற்றார். அடுத்த ஆண்டே புனித பூமிக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்ட இவர், உள்ளூர் மொழிகளைக் கற்றுக்கொண்டு தனது மறைப்பணியினை நன்முறையில் ஆற்றினார். சில உடல்நலக் குறைவு காரணமாக 1847ஆம் ஆண்டு மீண்டும் ஐரோப்பாவிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட அதன்பின் 1858 ஆம் ஆண்டில் மீண்டும் புனித பூமிக்குத் திரும்பினார். மறைசாட்சியாக கொல்லப்பட்ட அந்த இரவில், வன்முறையாளர்கள் துறவற இல்லத்திற்குள் நுழைந்ததை அறிந்தவுடன் திருநற்கருணை பேழை அருகில் சென்று அங்குள்ள திருநன்மைகளை எடுத்து உண்ணத் தொடங்கினார். ஏனெனில் வன்முறையாளர்களால் திருநற்கருணைக்கு எந்தவிதமான அவமரியாதையும் ஏற்பட்டு விடக்கூடாது எனக் கருதினார். எனவே பீடத்தில் அடியில் அதன் அருகிலேயே கொலை செய்யப்பட்டார்.

இவருடன் மறைசாட்சிகளாக இறந்தவர்கள் 2. கார்மெலோ போல்டா பானுல்ஸ்,

3. ஏங்கல்பெர்ட் கொலண்ட்,

4. நிக்கானோர் அஸ்கானியோ சோரியா,

5. Nicolás María Alberca Torres,

6. Pedro Nolasco Soler Méndez,

7. பிரான்சிஸ்கோ பினாசோ பெனால்வர்,

8. ஜுவான் ஜேக்கப் பெர்னாண்டஸ் மற்றும்

மூன்று மரோனைட் பொதுநிலையினரான 9. பிரான்சிஸ் மசாப்கி, திருமணமானவர் மற்றும் எட்டு குழந்தைகளின் தந்தை,

10. மூட்டி மசாப்கி, தினமும் தூய பவுல் துறவற இல்லத்தில் செபிப்பதற்காகவும் அங்குள்ள உள்ளூர் ஆண்கள் பள்ளியில் கற்பிப்பதற்காகவும் சென்றவர்.

11. ரபேல் என்பவர், பிரான்சிஸ் மற்றும் மூட்டியின் இளைய சகோதரர்.

அருள்பணியாளர் Giuseppe Allamano

ஜனவரி 21 அன்று இத்தாலியில் உள்ள காஸ்டெல்னுவோ டான் போஸ்கோவில் பிறந்தார். 1873 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாள் தூரின் உயர்மறைமாவட்ட பேராயர் லோரென்சோ கஸ்டால்டியால் குருவாக அருள்பொழிவு பெற்றார். மறைமாவட்ட குருமட இல்ல உதவியாளராகவும், தனது 25 வயதில் குருக்களின் ஆன்மிக இயக்குநராகவும் பணியாற்றினார். 1880 ஆம் ஆண்டில், தூரின் பேராயர் கொன்சோலாத்த திருத்தலத்திற்கு அதிபரைத் தேடினார். ஆனால் மிகவும் பழங்கால கட்டிடம் இடிந்து விழுந்தது மற்றும் இளம் குருக்களை உருவாக்கும் உறைவிடப் பள்ளி மூடப்பட்டது என கடினமான சூழ்நிலை காரணமாக யாரும் இந்த பதவியை ஏற்க விரும்பவில்லை. இப்பணி அல்மனோவிடம் ஒப்படைக்கப்பட, அவர் அதனை மிகவும் கீழ்ப்படிதலுடன் ஏற்றுக்கொண்டு ஏறக்குறைய 46 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பேராயர் அகோஸ்டினோ ரிச்செல்மி மற்றும் சபால்பைன் ஆயர் மாநாட்டின் ஒப்புதலுடன்1901, ஜனவரி 29 அன்று கொன்சோலாத்தா மறைப்பணியாளர்கள் சபையை நிறுவினார்.

அருளாளர் அருள்சகோதரி மேரி-லியோனி

1840 ஆம் ஆண்டு மே 12 அன்று கனடாவின், அகாடியா பகுதியில், மாண்ட்ரீல் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியில் பிறந்தார் வெர்ஜினி அலோடி பாரடிஸ் என்னும் இயற்பெயர் கொண்ட அருள்சகோதரி மேரி-லியோனி தனது பெற்றோருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவது பிள்ளை. சிறுவயதிலேயே கல்வியிலும் கிறிஸ்தவ மதிப்பீடுகளிலும் வளர்ந்தார். தனது ஒன்பது வயதில், லாப்ரேரியில் உள்ள நோத்ரே-டேம் சபை சகோதரிகளின் பள்ளியில் பயின்றார். 1854ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல், தனது பதின்மூன்றாவது வயதில், விர்ஜினி அலோடி, தூய லாரன்டில் உள்ள மரியானைட் சகோதரிகளின் துறவற இல்லத்தில் சேர்ந்து 1857 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 22, துறவற வார்த்தைப்பாடுகள் ஏற்று மேரி லியோனி என்னும் பெயரை பெற்றார். திருக்குடும்ப சிறிய சகோதரிகள் என்னும் சபையை உருவாக்கினார்.

அருளாளர் அருள்சகோதரி ஏலெனா குவெர்ரா

ஏலேனா குவேரா, இத்தாலியின் லூக்கா நகரில் 23 ஜூன் 1835 இல் உள்ளூர் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே அவர் தனது இரண்டு சகோதரர்களுடன் சேர்ந்து நல்ல கல்வியைப் பெற்றார். எட்டாவது வயதில் தூயஆவியின் மீது மிகவும் அளவுக்கதிகமான பக்தியை உணர்ந்தார். கடவுளின் அன்பால் ஈர்க்கப்பட்ட இவர், இலத்தீன் மொழியையும் கற்று தனது கல்வியை முடித்தார். லூக்கா நகரில் காலரா பரவியபோது,​​​​அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் நோயாளிகளைப் பார்க்கச் சென்று, அவர்களுக்கு சிகிச்சை அளித்து நம்பிக்கை வார்த்தைகளால் ஆறுதல் கூறினார். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் தூய ஆவி மீதான பக்தியை புறக்கணித்ததைக் கண்டு வருத்தமடைந்த இவர், 1865 ஆம் ஆண்டில் தூய ஆவிக்கு பிரார்த்தனைகளின் பக்தி ஒன்றியம்" என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரத்தை எழுதி அவிசுவாசிகள் மனமாற்றத்தைப் பெற வழிவகை செய்தார்.

1870 ஆம் ஆண்டில், தனது தந்தையுடன் உரோமிலிருந்து திரும்பிய ஏலெனா, புனித ஆஞ்சலா மெர்சியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்த பிறகு, இளமைக் கல்விக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், அவர் தனது பெற்றோரிடம் இருந்து உதவி பெற்று சில ஏழைப் பெண்களைத் தொண்டு இல்லத்தில் படிக்க வைத்தார். பின்னர், லூக்கா கதீட்ரலின் பங்குத்தந்தை உதவியுடன், டிசம்பர் 1872ஆம் ஆண்டில் லூக்கா நகரில் உள்ள முதலாளித்துவ மற்றும் பிரபுக்களின் பெண்குழந்தைகளுக்காக ஒரு தனியார் பள்ளியைத் திறந்தார்; தன்னுடன் இணைந்த தோழர்களின் குழுவுடன், அவர் தூய ஷிதா நிறுவனத்தை நிறுவி, ஆரம்பத்தில் சமூக வாழ்க்கை வாழாமல் தங்களை இறைப் பணிக்கு அர்ப்பணித்த பெண்களை வைத்து பெண்களின் கல்விக்காக இப்பள்ளி வழிநடத்தினார். 1882 ஆம் ஆண்டில், குடும்ப சொத்தைப் பிரித்ததைத் தொடர்ந்து தனது வீட்டை விட்டு வெளியேறிய அவர், பெறப்பட்ட நிதியில் வாங்கிய ஒரு கட்டிடத்தில் ஒப்லாத்தே தூயஆவியின் சபையார் என்று அழைக்கப்பட்டவர்களுடன் வாழத் தொடங்கினார்.

புனிதர்களின் வாழ்க்கைக் குறிப்பானது வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து புனிதர்களின் பரிந்துரையைக் கேட்கும் மன்றாட்டு இடம்பெற்றது. அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 14 அருளாளர்களையும் புனிதர்களாக அறிவித்தார். மக்கள் அனைவரும் இணைந்து வானவர் கீதத்தை மகிழ்வுடன் பாடிய பின்னர் கர்தினல் செமராரோ திருத்தந்தைக்கு நன்றி கூறினார். அதன்பின் புனித புனிதர்கள் 14 பேரின் புனிதப்பொருள்களுக்கு இடும் தூபப்பொருட்களை அப்புனிதர்களின் சபையை சார்ந்தவர்கள் பீடத்திற்கு பவனியாக எடுத்து வந்து அன்னை மரியா திரு உருவச்சிலைக்கு முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து திருப்பலியின் இறைவார்த்தை வழிபாட்டு பகுதிகள் தொடர்ந்து நடைபெற்றன. முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் பதிலுரைப்பாடல் பாடப்பட்டது. இரண்டாம் வாசகமானது பிரெஞ்சு மொழியில் வாசிக்கப்பட நற்செய்தி வாசகமானது இலத்தீன் மற்றும் சிரிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்தைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் மறையுரையினை வழங்கினார். திருத்தந்தையின் மறையுரைச் சுருக்கத்திற்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவானிடம் “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று இயேசு கேட்கிறார். மேலும் அவர் அவர்களை நோக்கி நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்கிறார். இயேசுவின் இக்கேள்விகள் நாம் தேர்ந்து தெளிவடையவும், நமக்குள் இருப்பதைக் கண்டறியவும் நம்மை அறியாமல் நம் இதயத்தில் நாம் சுமக்கின்ற ஒளிவீசுகின்றவற்றைக் கண்டறியவும் உதவுகின்றன.  

இந்த இரண்டு கேள்விகள் வழியாக சீடர்கள் தம்மிடம் கொண்டுள்ள பிணைப்பையும் எதிர்பார்ப்புகளையும், ஒவ்வொரு உறவிற்கும் இடையே உள்ள வெளிச்சங்கள் மற்றும் நிழல்களை இயேசு வெளிப்படுத்துகின்றார். யாக்கோபுவும் யோவானும் இயேசுவுடன் நெருக்கமாக இருக்க முயல்கின்றனர். ஆனால் அந்த நெருக்கம் மரியாதைக்குரிய இடமாகவும், முக்கியமான இடமாகவும் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். இயேசுவை மெசியாவாகக் கண்ட அவர்கள் அவரது வலப்பக்கத்தில் அமர ஆசை கொள்கின்றார்கள்.

“நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்ற முதல் கேள்வியின் வழியாக, சீடர்களது இதய விருப்பங்களையும், மறைந்து வைக்கப்ப்ட்ட எண்ணங்களையும், அவரது மாட்சிமை பற்றி அவர்கள் இரகசியமாக வைத்திருந்த கனவுகளையும் வெளிப்படுத்துகின்றார். ஒரு சக்திவாய்ந்த மெசியாவாக வெற்றிகரமான மெசியாவாக அவர்களுக்கு மரியாதைக்குரிய இடத்தைக் கொடுக்க எண்ணுவதை கண்டுகொள்கின்றார். சில நேரங்களில் இந்த எண்ணம் திருஅவைக்குள்ளும் வருகிறது: மரியாதை, ஆற்றல் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக நாம் மாறுகின்றோம்..

இயேசு தனது இரண்டாவது கேள்வி வழியாக சீடர்கள் எண்ணும் மெசியா உருவத்தை மறுத்து, அவர்களின் பார்வையை மாற்றுவதற்காக நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா?” என்று கேட்கிறார். இதன் வழியாக சீடர்கள் நினைக்கும் மெசியா அப்படிப்பட்டவர் அல்ல என்பதை எடுத்துரைக்கின்றார்.

கடவுள் அன்பானவர், கடைநிலையில் இருப்பவர்களுக்காக தன்னைத் தாழ்த்துபவர். போரை அல்ல அமைதிக்கான வழிகளை உருவாக்குபவர். பணி பெறுவதற்காக அல்ல பணிபுரிவதற்காக வந்தவர். அன்பிற்காக அவரது வாழ்வு அர்ப்பணிக்கப்பட்டது என்பதை பாடுகள் பட்டு இறந்து உயிர்த்ததன் வழியாக எடுத்துரைக்கின்றார்.

எனவே அவரது வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரு கள்வர்கள் இருக்கின்றனர். அரியணையில் அல்ல சிலுவையில், மகிழ்வுடன் அல்ல துன்பத்தில் இருக்கின்றனர். சிலுவையில் அறையப்பட்ட நம் அரசர் இயேசு நீதிமான். தீயவர்களால் தண்டிக்கப்படுகிறார், அனைவருக்கும் அடிமையாகிறார்: அவர் உண்மையிலேயே கடவுளின் மகன். ஆதிக்கம் செலுத்துபவர் அல்ல, வெற்றி பெறுபவர் அன்புடன் பனியாற்றுபவர். ஆம் நமது அரசர் ஆதிக்கம் செலுத்துபவர் அல்ல வெற்றி பெறுபவர். அன்புப் பணியாற்றுபவர். எபிரேயருக்கு எழுதிய கடிதமும் இதை நமக்கு நினைவூட்டுகிறது: ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். (எபி. 4:15).

இயேசு தனது சீடர்களை, அவர்களின் மனநிலையை மாற்ற உதவுகின்றார். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், “பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்  என்று எடுத்துரைக்கின்றார். மேலும் ஆனால், உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்று கூறினார்.

அவரைப் பின்பற்றி, அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதன் வழியாகவும், அவருடைய அன்பின் பரிசை வரவேற்பதன் வழியாகவும், நம் சிந்தனை முறையை மாற்றியமைப்பதன் வழியாகவும்,நாமும் கடவுளின் செயலைக் கற்றுக்கொள்ளலாம்: கடவுளின் செயல், பணியாற்றுவது. பணியாற்றுவதற்கான கடவுளின் செயல் மூன்று வார்த்தைகளை உள்ளடக்கியது. அவை நெருக்கம், இரக்கம் மற்றும் மென்மை. கடவுள் பணியாற்ற நம்மை நெருங்கி வருகிறார்; இரக்கமுள்ளவராக மாறுகிறார்; அன்பாக மாறுகின்றார். இத்தகைய அன்பால் புதுப்பிக்கப்பட்ட இதயம் கொண்டு வாழ முயற்சிப்போம். நாம் பிறருக்காகப் பணியாற்றக் கற்றுக்கொண்டால், நமது ஒவ்வொரு கவனமும் அக்கறையும், மென்மையின் ஒவ்வொரு வெளிப்பாடும், கருணையின் ஒவ்வொரு செயலும் கடவுளின் அன்பின் பிரதிபலிப்பாக மாறும்.

நாமும் கிறிஸ்துவை அவரதுப் பணியைப் பின்பற்றவும், உலகத்தின் நம்பிக்கையின் சாட்சிகளாகவும் இருக்க புதிய புனிதர்களின் பரிந்துரையை நாம் நம்பிக்கையுடன் கேட்போம்.

திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து நம்பிக்கையாளர் மன்றாட்டுக்கள் இத்தாலியம், ஆங்கில, அரபு, போர்த்துக்கீசியம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. மறைசாட்சியாக மரித்து புனிதராக உயர்த்தப்பட்ட மசாப்கி குடும்பத்தார், அருள்பணியாளர் மற்றும் அருள்சகோதரிகள் திருநற்கருணை வழிபாட்டுக்குத் தேவையான காணிக்கைப் பொருள்களை திருத்தந்தையிடம் அளித்தனர்.

திருநற்கருணை வழிபாட்டைத் தொடர்ந்து திருப்பலியின் நிறைவில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கன்னி மரியாவைப் போலவும், புனிதர்களைப் போலவும், நற்செய்தியின் துணிவான மற்றும் மகிழ்ச்சியான சாட்சிகளாக இருக்க  முயல்வோம் என்று கூறிய திருத்தந்தை கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். இறுதிப்பாடலுடன் கூட்டுத் திருப்பலியானது நிறைவிற்கு வந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2024, 16:03

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >