தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - நீதி எனும் நல்லொழுக்கம்

ஏப்ரல் 3 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நீதி என்னும் நல்லொழுக்கம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பாஸ்கா காலத்தின் எண்கிழமையாகிய ஏப்ரல் 2 இப்புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நீதி என்னும் நல்லொழுக்கம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இளவேனிற்காலத்தின் இதமான காலை வேளையில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏராளமான திருப்பயணிகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஒன்றாகக் கூடி திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கு செவிமடுப்பதற்காகக் கூடிவந்திருந்தனர். திறந்த காரில் வலம் வந்தபடியே, திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை. அதன்பின் வழக்கமாக புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார் திருத்தந்தை. அதன்பின் நீதிமொழிகள் நூலில் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், அரபு, ஆங்கிலம், போர்த்துக்கீசியம், சீனம், பிரெஞ்சு, இஸ்பானியம் போன்ற பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

நீதிமொழிகள் 21: 3,7,21

பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப்பளிக்கும். பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும். நேர்மையையும் இரக்கத்தையும் கடைப்பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர் மறைக்கல்வி உரையின் 13 ஆம் பகுதியாக நீதி என்னும் நல்லொழுக்கம் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிமடுப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள், காலை வணக்கம்! இன்று நாம் இரண்டாவது நல்லொழுக்கமான நீதியைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். இது ஒரு சிறந்த சமூக நீதியாகும். கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வியானது இதை, "கடவுளுக்கும் அண்டை வீட்டாருக்கும் அவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பதற்கான நிலையான மற்றும் உறுதியான விருப்பத்தில் உள்ள தார்மீக நல்லொழுக்கம்" என்று வரையறுக்கிறது:. இதுதான் நீதி. பெரும்பாலும், நீதி குறிப்பிடப்படும்போது, ​​அதைக் குறிக்கும் பொன்மொழியான ஒவ்வொருவருக்கும் சொந்தமான நீதி என்ற மேற்கோளுடன் குறிப்பிடப்படுகிறது. சமத்துவத்துடன் மக்களிடையே உறவுகளை ஒழுங்குபடுத்த முயலும் சட்டத்தின் நல்லொழுக்கமாக நீதி விளங்குகின்றது.

நீதி அளவீடுகளால் உருவகமாக குறிப்பிடப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் மாண்பிற்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்பதே நீதியின் நோக்கம். ஆனால் பண்டையகால தலைவர்கள் நீதி என்னும் நல்லொழுக்கத்திற்குப் பிற நல்லொழுக்கங்களும் தேவை என்று கற்பித்துள்ளனர், அதாவது கொடைக்குணம், மரியாதை, நன்றியுணர்வு, இணக்கம், நேர்மை ஆகிய நல்லொழுக்கங்கள் தேவை என்று வலியுறுத்துகின்றனர்.  நீதி மக்களின் நல்ல சகவாழ்வுக்கு பங்களிக்கும் நற்பண்பாகும்.

சமூகத்தின் அமைதியான சகவாழ்வுக்கு நீதி எவ்வாறு அடிப்படைத்தேவை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்கிறோம். உரிமைகளை மதிக்கும் சட்டங்கள் இல்லாத உலகம் மக்கள் வாழ முடியாத ஒரு உலகமாக, அது ஒரு காட்டைப்போல இருக்கும். நீதி இல்லாமல் அமைதி இல்லை. உண்மையில், நீதி மதிக்கப்படாவிட்டால், மோதல்கள் உருவாகும். வலுவற்றவர்கள் மீது வலிமையானவர்கள் முறைகேடுகளைச் செய்யும் சட்டங்கள்  உருவாக்கப்படுகின்றன, இது சரியானதல்ல.

நீதி என்பது பெரிய மற்றும் சிறிய வழிகளில் செயல்படும் ஒரு நல்லொழுக்கமாகும்: இது நீதிமன்றங்களை மட்டுமல்ல, நமது அன்றாட வாழ்க்கையை வேறுபடுத்தும் நெறிமுறைகளையும் பற்றியது. மற்றவர்களுடன் நேர்மையான உறவுகளை நிறுவ உதவுகின்றது. நற்செய்தியில் கூறப்படுவது போல கிறிஸ்தவர்களாகிய நாம் “பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது” என்பதை உணர்ந்து வாழ வேண்டும். அரைகுறை உண்மைகள், பிறரை ஏமாற்ற நினைக்கும் நுட்பமான பேச்சுக்கள், உண்மையான நோக்கங்களை மறைக்கும் குணம் ஆகியவை நீதிக்கு ஏற்ற அணுகுமுறைகள் அல்ல. மிகச்சரியான மனிதர் நேர்மையானவர், எளிமையானவர் மற்றும் வெளிப்படையானவர், அவர் முகமூடிகளை அணிய மாட்டார், அவர் தான் எப்படி இருக்கின்றாரோ அவ்வாறே தன்னை வெளிப்படுத்துகின்றார். உண்மையாகப் பேசுகின்றார். "நன்றி" என்ற வார்த்தை அவரது உதடுகளில் அடிக்கடி வெளிப்படும். நாம் எவ்வளவு தாராளமானவர்களாக இருக்க முயற்சித்தாலும், நாம் எப்போதும் மற்றவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நன்கு அறிந்தவராகின்றார். நாம் அன்பு செய்கின்றோம் ஏனெனில் நாம் பிறரால் முதலில் அன்பு செய்யப்பட்டவர்கள் என்பதால் தான்.

நமது பண்பாட்டில் நீதியுள்ள மனிதர்கள் பற்றிய எண்ணற்ற விளக்கங்களைக் காணலாம். அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம். நீதியாளர்கள் சட்டங்களை மதித்து ஏற்பவர். ஆணவமுள்ள சக்திபடைத்த மனிதர்களிடமிருந்து பாதுகாப்பற்றவர்களைக் காக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள். நீதியுள்ள மனிதன் தனது சொந்த நலனில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனை விரும்புகின்றார். எனவே, தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்தல், தனது சொந்த விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளுதல், போன்றவற்றினால் தூண்டப்படாமல் வாழ்கின்றார். எல்லோருக்கும் பலனளிக்காத நன்மை, உண்மையான நன்மையாக இருக்க முடியாது.

எனவே, நீதியுள்ள மனிதர் தனது செயல்பாடுகள், நடவடிக்கைகள்  மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காதபடி கவனித்துக்கொள்கிறார். தவறு செய்தால் மன்னிப்பு கேட்கிறார். சில சூழ்நிலைகளில் தனது தனிப்பட்ட நன்மைகளைக் கூட சமூகத்தின் நன்மைக்காகத் தியாகம் செய்கிறார். மக்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களை சரியாக செய்கின்ற ஓர் ஒழுங்கான சமூகத்தை அவர் விரும்புகிறார். அவர் பரிந்துரைகளை வெறுக்கிறார். பொறுப்புக்களை மதிக்கும் மனிதர்களை விரும்புகின்றார். மனிதருக்கு பெருமையை அளிக்கும் பொறுப்புக்களை அல்ல. சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வாழ்வதிலும் அதனை ஊக்குவிப்பதிலும் முன்மாதிரியாக இருக்கிறார். மேலும், அவதூறு, பொய்ச் சாட்சியம், மோசடி, கேலி, நேர்மையின்மை போன்ற தீங்கான நடத்தைகளைத் தவிர்க்கிறார். நீதியுள்ள மனிதர் தான் கூறிய வார்த்தையைக் கடைப்பிடிக்கிறார். கடன் வாங்கியதைத் திருப்பித் தருகிறார். எல்லா தொழிலாளர்களுக்கும் சரியான ஊதியத்தை அங்கீகரித்து வழங்குகின்றார். தொழிலாளர்களுக்கு சரியான ஊதியத்தை அங்கீகரித்து வழங்காத மனிதன் நியாயமற்றவன்: அவன் அநீதியாளன்.

உலகில் நீதியுள்ள மனிதர்கள் ஏராளமானவர்களாகவோ அல்லது விலைமதிப்பற்ற முத்துக்களைப் போல அரிதானவர்களாகவோ இருக்கின்றார்கள். நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவுபெறுவர். இவர்கள் உலகளாவிய சகோதரத்துவத்திற்கான விருப்பத்தை தங்கள் இதயங்களில் வைத்திருக்கும்படிக் கனவு காண்பவர்கள். இந்த கனவின் தேவை இக்காலகட்டத்தில் வாழும் நம் அனைவருக்கும் உள்ளது. நாம் அனைவரும் நீதியுள்ள ஆண்களாகவும் பெண்களாகவும்  இருக்க வேண்டும். இதுவே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரையினை நிறைவு செய்தார். அதன்பின் கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், மத்திய கிழக்கில் இருந்து துயரமான செய்திகள் தொடர்ந்து வருகின்றன என்று கூறி அமைதிக்கான தனது விண்ணப்பத்தைப் புதுப்பித்தார்.

காசா பகுதியில் உடனடி போர் நிறுத்தத்திற்கான தனது உறுதியான கோரிக்கையை புதுப்பிப்பதாகவும், காசாவில் மனிதாபிமான உதவிகளை வழங்கும்போது கொல்லப்பட்ட தன்னார்வலர்களுக்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார் திருத்தந்தை.

இறந்த அவர்களது குடும்பத்தினருக்காக செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மனிதாபிமான உதவிகள் இல்லாமல் துன்புறும் பொதுமக்களுக்கு அடிப்படை மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பிணையக்கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் மோதல்களை விரிவுபடுத்துவதற்கான பொறுப்பற்ற முயற்சியைத் தவிர்ப்போம் என்றும், உலகின் பல பகுதிகளுக்கு மரணத்தையும் துன்பத்தையும் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் போர்கள், கூடிய விரைவில் முடிவுக்கு வருவதை உறுதி செய்வோம் என்றும் கூறி ஆயுதங்கள் நீங்கி, அமைதி மீண்டும் ஆட்சி செய்ய தொடர்ந்து செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல மரணங்களைக் கண்ட துன்புறுத்தப்பட்ட உக்ரைனை மறந்துவிட வேண்டாம் என்று கூறிய திருத்தந்தை போரினால் இறந்த 23 வயது அலெக்சாண்டர் என்னும் வீரரின் செபமாலை, மற்றும் நற்செய்தி நூலைத் திருப்பயணிகளுக்குக் காண்பித்து அமைதியில் அந்த இளைஞருக்காகவும் அவரைப்போல துன்புறும் ஏனையோருக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார். இளைஞர் பயன்படுத்தி வந்த திருவிவிலியத்தில், திருப்பாடல் எண் 129 இல் உள்ள, “ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;” என்ற வரிகள் அடிக்கோடிடப்பட்டிருப்பதாக எடுத்துரைத்தார். அழிவைத்தரும் போர் நிறுத்தப்பட செபிப்போம் என்று கூறி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

அதன்பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட கூடியிருந்த மக்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 April 2024, 09:10

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >