தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை – கிறிஸ்துவின் குழந்தைப்பருவம்

டிசம்பர் 18 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நமது எதிர்நோக்கு இயேசு கிறிஸ்து என்னும் புதிய மறைக்கல்வி தொடரின் முதல் பகுதியாக இயேசுவின் குழந்தைப்பருவம் என்ற தலைப்பில் தனது. மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடந்த 18 வாரங்களாக நமது எதிர்நோக்காம் கிறிஸ்து இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வரவிருக்கும் யூபிலி ஆண்டு 2025ஐ முன்னிட்டு வரலாற்றில் இறைமைந்தனின் வருகை கிறிஸ்துவின் குழந்தைப்பருவம் என்ற தலைப்பில் தனது புதிய மறைக்கல்வி தொடரினை ஆரம்பித்தார்.

அரங்கத்தின் மேடைப்பகுதியை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், மேடைப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த உரோம் நகரின் பாதுகாவலியான சவுலிஸ் ரோமானோ என்னும் அன்னை மரியின் திருஉருவச்சிலைக்கு மலர்க்கொத்து அர்ப்பணித்து வணக்கம் செலுத்தினார். அதன்பின் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் திருத்தந்தை அவர்கள் துவக்கி வைத்ததும் மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும், இயேசுவின் மூதாதையர் பட்டியல் என்ற தலைப்பில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மத்தேயு 1: 1-3,15,16

தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நமது எதிர்நோக்கு இயேசு கிறிஸ்து என்னும் புதிய மறைக்கல்வி தொடரின் முதல் பகுதியாக இயேசுவின் குழந்தைப்பருவம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.  

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

வருகின்ற யூபிலி ஆண்டு முழுவதும் காண இருக்கும் தொடர் மறைக்கல்வியின் புதிய பகுதியை இன்று, நாம் தொடங்க இருக்கின்றோம். "இயேசு கிறிஸ்துவே நமது எதிர்நோக்கு என்ற தலைப்பில் நாம் சிந்திக்க இருக்கின்றோம். நமது திருப்பயணத்தின் இலக்கு அவரே, நமது பாதையும் அவரே நமது தொடர் பயணமும் அவரே.

இயேசுவின் குழந்தைப் பருவத்தை நற்செய்தியாளர்களான லூக்காவும் மத்தேயுவும் நமக்கு விவரிக்கின்றார்கள். கன்னி மரியின் வயிற்றில் இயேசு கருவாக உருவாகி, மாடடைக் குடிலில் சிறுகுழந்தையாகப் பிறந்ததை எடுத்துரைக்கின்றனர். அவர் வழியாக நிறைவேறிய மெசியாவின் வருகை பற்றிய இறைவாக்குகளையும், தாவீதின் வழிமரபைச் சார்ந்த யோசேப்பின் மகனாக வந்துதித்த இயேசுவினது பிறப்பின் நிகழ்வுகளையும் எடுத்துரைக்கின்றனர். இயேசுவை பச்சிளம் குழந்தையாகவும், பாலனாகவும், வாலிபராகவும், அவருடைய பெற்றோருக்கு அடிபணிந்தவராகவும், அதே சமயம், அவர் தந்தைக்கும் அவருடைய இறையரசுக்கும் அர்ப்பணிக்கப்பட்டவராகவும் நமக்கு அடையாளப்படுத்தப்படுகின்றார். இரண்டு நற்செய்திகளுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்றால், லூக்கா அன்னை மரியின் பார்வையில் நிகழ்வுகளை விவரிக்கையில், மத்தேயு யோசேப்பின் பார்வையில் நிகழ்வுகளை விவரித்து முன்னோடியில்லாத தந்தைமைத்துவத்தை வலியுறுத்துகிறார்.

மத்தேயு தனது நற்செய்தியின் தொடக்கத்திலும், முழு புதிய ஏற்பாட்டு நிகழ்வுகளின் ஆரம்பத்திலும், "தாவீதின் மகன், ஆபிரகாமின் மகன் இயேசு கிறிஸ்து என்ற வார்த்தைகளுடன் வழிமரபுப்பட்டியலுடன் ஆரம்பிக்கின்றார். வரலாற்றின் உண்மையையும் மனித வாழ்க்கையின் உண்மையையும் காட்ட எபிரேய மொழி விவிலியத்தில் ஏற்கனவே காணப்படும் பெயர்களின் பட்டியலை வெளியிடுகின்றார். உண்மையில், "கடவுளுடைய வழிமரபின் வரலாறு உண்மைக் கதையைக் கொண்டுள்ளது, இதில் சில பிரச்சனைக்குரிய பெயர்களும் உள்ளன. தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன் என்று தாவீது அரசரின் பாவம் சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறாயினும், மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு என  எல்லாமே மரியாவிலும் கிறிஸ்துவிலும் முடிவடைந்து செழித்து வளர்கிறது. ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு செல்லும் மனித வாழ்க்கையின் உண்மை மூன்று விடயங்களை வழங்குகிறது. ஒரு தனித்துவமான அடையாளத்தையும் பணியையும் கொண்ட ஒரு பெயர்; ஒரு குடும்பம் மற்றும் மக்களில் உறுப்பினர்; இறுதியாக இஸ்ரயேலின் கடவுளில் நம்பிக்கையைக் கடைபிடிப்பது.

ஒரு இலக்கிய வகையான வழிமரபியல் என்பது, ஒரு மிக முக்கியமான செய்தியை தெரிவிப்பதற்கான பொருத்தமான வடிவமாகும்: யாரும் தங்களுக்குத் தாங்களே உயிரைக் கொடுத்துக்கொள்வதில்லை, மாறாக அதை மற்றவர்களிடமிருந்து பரிசாகப் பெறுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களோ, தங்கள் இறைத்தந்தையிடமிருந்து நம்பிக்கையை பெறுகின்றார்கள்.

பழைய ஏற்பாட்டின் வழிமரபில் ஆண்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெறும். இஸ்ரயேலில் தந்தையே தனது மகனுக்குப் பெயரை வழிமரபைத் தருகின்றார். மத்தேயு எடுத்துரைக்கும் இயேசுவின் மூதாதையர்களின் பட்டியலில் பெண்களும் உள்ளனர். அவர்களில் ஐந்து பேரை நாம் காணலாம். 1. யூதாவின் மருமகளான தாமார், கணவனை இழந்தவர். தன் கணவனுக்கு ஒரு சந்ததியை உறுதி செய்வதற்காக ஒரு விலைமாதினைப் போல நடிக்கிறார். 2. எரிக்கோவைச் சார்ந்த விலைமாதுவான ராகாப், எபிரேயர்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்குள் நுழைந்து அதைக் கைப்பற்ற உதவிசெய்கின்றார். 3. மோவாபியப் பெண்ணான ரூத், தன் மாமியாருக்கு உண்மையாக இருந்து, அவளைக் கவனித்து, தாவீது அரசரின் கொள்ளுப் பாட்டியாக மாறுகின்றார்; 4. தாவீதுடன் முறையற்ற உறவு கொண்ட பத்சேபா தனது கணவன் கொலை செய்யப்பட்ட பிறகு, சாலமோனைப் பெற்றெடுக்கிறார். 5. இறுதியாக தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பின் மனைவியான நாசரேத்தூர் மரியா. அவரிடமிருந்து மெசியா என்னும் இயேசு பிறந்தார்.

முதல் நான்கு பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்டு பாவம் செய்தவர்கள் என்பதால் மட்டுமல்ல, மாறாக இஸ்ரயேல் மக்களுக்கு அந்நியர்களாக இருப்பதன் வழியாக ஒன்றுபட்டுள்ளனர். நற்செய்தியாளர் மத்தேயு வெளிப்படுத்துவதை, திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட், "அவர்கள் வழியாக புறவினத்தாரின் உலகம் இயேசுவின் வழிமரபில் இணைகின்றது. யூதர்கள் மற்றும் புறவினத்தார்க்கான அவரது பணி புலப்படுகிறது என்று எழுதுகின்றார்.

முந்தைய நான்கு பெண்களும் அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைகள் அல்லது அக்குழந்தைகள் பிறக்கக் காரணமான ஆணுடன் குறிப்பிடப்பட்டாலும், கன்னி மரியா, சிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்தவராக குறிப்பிடப்படுகின்றார். மரியா ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறார், அவரே ஒரு புதிய தொடக்கமாகவும் இருக்கிறார். ஏனென்றால் அவருடைய கதையில் தலைமுறையின் கதாநாயகன் மனித உயிரினம் அல்ல, மாறாகக் கடவுள். மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு என்ற வினைச்சொல்லில் இருந்து இது தெளிவாகக் காணப்படுகிறது: "யாக்கோபு மரியாவின் கணவரான யோசேப்பைப் பெற்றார், மரியாவிடமிருந்து கிறிஸ்து என்று அழைக்கப்படும் இயேசு பிறந்தார்". இயேசு தாவீதின் மகன், இஸ்ரவேலின் மெசியாவாக இருக்க விதிக்கப்பட்டவர், ஆபிரகாமின் மகனும் புற இனத்துப் பெண்களின் மகனுமான இயேசு புறவினத்தாருக்கு ஒளியாகப் பிறந்தவர்.  

இறைத்தந்தையால் அருள்பொழிவு செய்யப்பட்ட கடவுளின் மகன், தனது பணியால் இறைத்தந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் பணிக்கு அனுப்பப்படுகின்றார். நாசரேத்தில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போலவே உலகில் நுழைகிறார். "யோசேப்பின் மகன்,  தச்சனின் மகன்  என்று  அழைக்கப்படுகின்றார். உண்மையான கடவுளாகவும் உண்மையான மனிதனாகவும் திகழ்ந்தார்.

சகோதர சகோதரிகளே, நம் முன்னோர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக, தாயாம் திருஅவை வழியாக, நிலைவாழ்வையும், நமது எதிர்நோக்காம் இயேசுவின் வாழ்வையும் பெற்றுக்கொண்டதற்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் நாள் நெருங்கிவிட்டது. வீடுகளில் கிறிஸ்து பிறப்பு குடில்கள் தயாரிக்கப்பட்டிருக்கும். நமது ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தின் இந்த முக்கியமான வழிமுறையானது "நம்மிடையே வாழ" வந்த இயேசுவை நினைவுகூரத் தூண்டும் ஒரு வழியாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். அமைதிக்காக செபிப்போம். போரினால் பாதிக்கப்படும் மக்களை மறந்து விடக்கூடாது: பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், மியான்மர் என் போரினால் பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் செபிப்போம். போர்கள் முடிவுக்கு வர செபிக்க மறக்க வேண்டாம். அமைதியின் இளவரசராம் ஆண்டவரிடம் அந்த அருளை வழங்குமாறு கேட்போம். உலகில் அமைதி நிலவ செபிப்போம். போர் எப்போதும் தோல்விதான்! போர் எப்போதும் தோல்விதான் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை. அதன்பின் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 December 2024, 09:19

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >