புதன் மறைக்கல்வி உரை – தூய ஆவியும் கிறிஸ்தவ எதிர்நோக்கும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
டிசம்பர் 11 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியாரும் கிறிஸ்தவ எதிர்நோக்கும் என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்காகக் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தியபடி புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் திருவெளிப்பாட்டு நூலிருந்து இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
திருவெளிப்பாடு 22: 17,20
தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக! வருக!” என்கிறார்கள். இதைக் கேட்போரும், “வருக! வருக!” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும். இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும்.
அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆவியாரும் மணமகளும் நமது எதிர்நோக்காம் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் என்ற தலைப்பின் இறுதிப் பகுதியும் 17ஆவது பகுதியுமாகிய தூய ஆவியாரும் கிறிஸ்தவ எதிர்நோக்கும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை. திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
தூய ஆவியாரும் திருஅவையும் என்ற நமது தொடர் மறைக்கல்வியின் இறுதிப்பாகத்தை இன்று நாம் எட்டியுள்ளோம். தூய ஆவியாரும் மணமளும் நமது எதிர்நோக்காம் இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் என்ற தலைப்பில் சிந்தித்து வரும் நாம் இந்த வரிகள் திருவிவிலியத்தின் இறுதிப் புத்தகமான திருவெளிப்பாட்டின் வரிகள் என்பதை நாம் நன்கறிவோம். தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக! வருக!” என்று உயிர்த்த இயேசு கிறிஸ்துவை அழைக்கின்றனர். புனித பவுலின் திருமடல்கள் மற்றும் திருத்தூதர் காலத்திலிருந்து எழுதப்பட்ட டிடாச்சே ஆகிய இரண்டும் ஆரம்பகால கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக் கூட்டங்களில், அரமேய மொழியில், "மாரனாதா!" என்ற கூக்குரல் எதிரொலித்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. அதாவது "வாரும் ஆண்டவரே!" என்ற பொருளில் அழைத்தனர்.
இந்த ஆரம்பகால அழைப்பு ஒரு பின்னணியைக் கொண்டிருந்தது, அதை இன்று நாம் eschatological என்று அழைக்கிறோம். அது உண்மையில், இறைவனின் மகிமையான வருகையின் தீவிர எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியது. அழுகையும் அது வெளிப்படுத்தும் எதிர்பார்ப்பும் திருஅவையில் என்றும் மறைந்ததில்லை. இன்றும் கூட, திருப்பலியில் எழுந்தேற்றத்திற்குப் பின் ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம் என்று கூறுகின்றோம். ஏனெனில் திருஅவை இறைவனின் வருகைக்காக எப்போதும் காத்திருக்கிறது.
ஆனால் கிறிஸ்துவின் இறுதி வருகை பற்றிய இந்த எதிர்பார்ப்பு ஒரே முறை மட்டும் என்று இருக்கவில்லை. திருஅவையின் நிகழ்கால மற்றும் பயணச் சூழ்நிலையில் அவர் தொடர்ந்து வருவார் என்ற எதிர்பார்ப்பும் நம்மிடம் சேர்ந்துள்ளது. தூயஆவியாரால் உயிரூட்டப்பட்ட திருஅவை "வாரும் ஆண்டவரே!" என்று இயேசுவை நோக்கிக் கூக்குரலிடுவதன் வழியாக எல்லாவற்றிற்கும் அவரின் வருகையை எதிர்நோக்குகின்றது என்பதை எடுத்துரைக்கின்றது.
“வாரும்!” என்ற கூக்குரலில் ஒரு மாற்றத்தையும் சிறந்த ஒரு வளர்ச்சியையும் அர்த்தத்தையும் நாம் காண்கின்றோம். கிறிஸ்துவை மட்டுமன்று தூயஆவியாரையும் இப்போது நாம் அழைக்கின்றோம். திருஅவையின் அனைத்துப் பாடல்களும், தூய ஆவியாரை நோக்கிய செபங்களும் வாரும் தூய ஆவியே என்றும், படைப்பின் தூய ஆவியே என்றும் பாடப்படுகின்றன. இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் தூய ஆவியார் மறுகிறிஸ்துவாக செயல்படுகின்றார். உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். என்று யோவான் நற்செய்தியில் இவ்வாறு எடுத்துரைக்கின்றார். எனவே மீட்புத்திட்டத்தில் கிறிஸ்துவும் தூய ஆவியாரும் பிரிக்க முடியாதவர்கள்.
தூயஆவியார் எப்போதும் கிறிஸ்தவ எதிர்நோக்கின் ஊற்றாக இருக்கின்றார். “எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக “என்று திருத்தூதர் பவுலும் விலைமதிப்பற்ற வார்த்தைகளாக தனது மடல்களில் எடுத்துரைக்கின்றார். திருஅவை ஒரு படகு என்றால், தூய ஆவியார் அதை முன்னெடுத்துச் சென்று வரலாற்றுக் கடலில் கடந்த காலத்தைப் போலவே இன்றும் நம்மை முன்னோக்கி நகர்த்திச் செல்பவராவார்.
எதிர்நோக்கு என்பது ஒரு வெற்று வார்த்தை அல்ல, அல்லது விஷயங்கள் சிறந்ததாக மாறும் என்ற நமது தெளிவற்ற விருப்பமும் அல்ல: அது உறுதியானது நிச்சயமானது, கடவுளுக்கும் அவருடைய வாக்குறுதிகளுக்கும் நம்பிக்கையாக இருப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் இது இறையியல் அறம் என்று அழைக்கப்படுகிறது: ஏனெனில் இது கடவுளால் வலியுறுத்தப்பட்டு அவரை அதன் அடித்தளமாகக் கொண்டுள்ளது. ஒரு செயல் நடக்கும் வரைக் காத்திருக்கும் செயலற்ற நல்லொழுக்கமல்ல, மாறாக அவற்றைச் செய்ய உதவும் ஒரு செயலுள்ள நல்லொழுக்கமாகும். ஏழைகளின் விடுதலைக்காகப் போராடிய ஒருவர் “தூய ஆவியார் ஏழைகளின் அழுகையின் தொடக்கத்தில் இருக்கிறார். பலம் இல்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்ட பலம் அவர். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை மற்றும் முழு உணர்தலுக்கான போராட்டத்தை அவரே வழிநடத்துகிறார்” என்று எழுதுகின்றார்.
கிறிஸ்தவர் எதிர்நோக்கு உடையவராக மட்டும் இருப்பதால் மட்டும் திருப்தியடைய முடியாது; அவர் அந்த எதிர்நோக்கை வெளிப்படுத்துபவராகவும், அதனைப் பிறரிடத்தில் விதைப்பவராக இருக்க வேண்டும். திருஅவை அனைத்து மனிதகுலத்திற்கும் கொடுக்கக்கூடிய மிக அழகான பரிசு இதுவாகும்.
திருத்தூதர் பேதுரு, ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு, உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள் என்று அறிவுரை கூறினார். எவ்வளவு பலம் நிறைந்த விவாதங்களை வைத்து மக்களை மாற்றுகின்றோம் என்பதல்ல, மாறாக எவ்வளவு அன்புடன் அதனைச் செய்கிறோம் என்பதே முக்கியம். அன்பான சகோதர சகோதரிகளே, தூய ஆவியின் நல்லொழுக்கத்தில் நமது எதிர்நோக்கு பெருக அவர் நமக்கு உதவுவாராக. அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். சிரியாவில் நிலவி வரும் போர்ச்சூழல் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாட்டில் அமைதி நிலவவும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வாழவும் அன்னை மரியிடம் செபிப்பதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை. அதன்பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்