திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - தூய ஆவியாருக்கேற்ற அருள்வாழ்வு
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஏப்ரல் 24 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர் மறைக்கல்வி உரையின் 16 ஆம் பகுதியாக தூய ஆவியாருக்கேற்ற அருள்வாழ்வு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் மாதத்தின் இறுதி புதன்கிழமையும் பாஸ்கா காலத்தின் நான்காம் வாரமுமாகிய இப்புதனன்று அதிகாலை முதலே உரோம் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து மகிழ்வித்தது. மழைக்காற்றின் குளிரும், உதயமாகும் சூரியனின் இளம் வெப்பமும் சேர்ந்து காலைப்பொழுதை இனிமையாக்க வத்திக்கான் வளாகத்தில் ஏராளமான திருப்பயணிகள் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்க ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.
திறந்த வாகனத்தில் திருப்பயணிகள் நடுவே வலம்வந்தபடி வத்திக்கான் வளாகத்திற்குள் நுழைந்த திருத்தந்தையை, மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி மகிழ்வுடன் வரவேற்றனர். திருப்பயணிகளை மகிழ்வுடன் வரவேற்றும் சிறு குழந்தைகளுக்கு ஆசீர்அளித்தும் மகிழ்ந்தார் திருத்தந்தை. வழக்கமாக புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும் சிலுவை அடையாளம் வரைந்துக் கூட்டத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் திருத்தூதர் பவுல் கொலோசேயருக்கு எழுதிய திருமடலில் உள்ள நன்றியும் மன்றாட்டும் என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
கொலோசேயர் 1: 3-5
உங்களுக்காக நாங்கள் வேண்டும் பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர்நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்கு பற்றி அறிந்து கொண்டீர்கள்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூயஆவியாருக்கேற்ற அருள்வாழ்வு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
கடந்த வாரங்களில் நாம் தலையாய நல்லொழுக்கங்களாகிய விவேகம், நீதி, உளத்துணிவு, தன்னடக்கம் என்பது பற்றி அறிந்துகொண்டோம். இந்த நான்கு நற்பண்புகளும் கிறிஸ்தவத்திற்கு முந்தைய மிகப் பழமையான ஞானத்தைக் கொண்டது. கிறிஸ்துவுக்கு முன்பே, நீதி என்பது சமூகக் கடமையாகவும், ஞானம் செயல்களை நெறிப்படுத்துவதாகவும், துணிவு நன்மையை நோக்கிச் செல்லும் வாழ்க்கைக்கு அடிப்படைப் பொருளாகவும் கற்பிக்கப்பட்டது. மனிதகுலத்தின் இந்த பாரம்பரியமானது கிறிஸ்தவத்தால் மாற்றப்படவில்லை, மாறாக அதன் மீதான கூர்மையான கவனம், மேம்படுத்தப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் இதயத்திலும் நன்மையைத் தேடும் திறன் உள்ளது. தூய ஆவியார் இதனைக் கொடையாகக் கொடுக்கிறார், அதனால் அதைப் பெறுபவர்கள் நன்மையிலிருந்து தீமையை தெளிவாக வேறுபடுத்தவும், தீமையைத் தவிர்ப்பதன் வழியாக நன்மையைக் கடைபிடிக்கும் வலிமையையும் பெறுகின்றார்கள், அவ்வாறு செய்வதன் வழியாக, முழு சுய-உணர்தலை அவர்கள் அடைகின்றார்கள்.
முழுமையின் நிறைவை நோக்கிய வாழ்க்கைப் பயணத்தில் கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் தூய ஆவியின் ஆற்றலை அனுபவிக்கின்றார்கள். இது புதிய ஏற்பாட்டில் அடிக்கடி வலியுறுத்தப்படும் மூன்று நல்லொழுக்கங்களுடன் இணைந்து செயல்படுகின்றது. கிறிஸ்தவ வாழ்க்கையின் சிறப்பியல்புகளான இந்த அடிப்படை மனப்பான்மைகள் நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு ஆகியவைகளாகும். இறையியலாளர்கள் என பின்னாளில் அழைக்கப்பட்ட கிறிஸ்தவ எழுத்தாளர்கள் கடவுளுடனான உறவைப் பெற்றனர், கடவுளோடு வாழ்ந்தனர். பிறரிடமிருந்து வேறுபட்டு, தலையானவர்களாகவும், நல்ல வாழ்க்கைக்கானப் பற்றுக்கோள் கொண்டவர்களாகவும் வாழ்ந்தனர். இந்த மூன்று நல்லொழுக்கங்களும் ஒன்று மற்றொன்றுடன் இணைந்து பல சிந்தனைகளையும், ஏழு கொடிய பாவங்களுக்கு எதிரான உணர்வுகளையும் நமக்குத் தருகின்றன.
கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வியானது இறையியல் நற்பண்புகளின் செயல்பாட்டை இவ்வாறு வரையறுக்கின்றது: “நல்லொழுக்கங்கள் கிறிஸ்தவரின் தார்மீக செயல்பாடுகளுக்கு அடித்தளமிடுகின்றன, உயிரூட்டுகின்றன மற்றும் வகைப்படுத்துகின்றன. எல்லா அறநெறிகளையும் எடுத்துரைக்கின்றன, உயிர்ப்பிக்கின்றன. அவர்கள் கடவுளுடைய பிள்ளைகளாகச் செயல்படவும், நிலைவாழ்வைப் பெறவும் உதவுகின்றன. தூய ஆவியின் உடன்இருப்பு மற்றும் செயல்பாட்டிற்கான உறுதிமொழியாக நல்லொழுக்கங்கள் மனிதனின் திறன்களில் திகழ்கின்றன.
தலையாய நற்பண்புகள், தூய ஆவியாரின் கொடையால் வழங்கப்பட்ட இறையியல் நற்பண்புகளின் அடிப்படையில் நல்லதைச் செய்வதில் துணிவு மிக்க ஆண்களையும் பெண்களையும் உருவாக்குகின்றன. கிறிஸ்தவர் ஒருபோதும் தனியாக இல்லை. தனது தனிப்பட்ட அர்ப்பணிப்பின் தீவிர முயற்சியால் அல்ல, மாறாக, ஒரு தாழ்மையான சீடராக, தலைவராம் இயேசுவின் பின்னால் நடப்பதால் அவர் நல்லதைச் சாதிக்கிறார். இறையியல் நற்பண்புகள் தன்னிறைவுக்குப் மிகப்பெரும் மருந்தாகும். தங்களை நன்கு அறிந்த மற்றவர்களின் பார்வையில் தங்களை பெருமிதம் மற்றும் கோபம் கொண்டவர்களாக வெளிப்படுத்தும் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர். இத்தகைய ஆபத்திலிருந்து நம்மை எச்சரிக்கும் விதமாகவே இயேசு தனது சீடர்களுக்கு இவ்வாறு பரிந்துரைக்கின்றார். நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” என்று வலியுறுத்துகின்றார்.
தற்பெருமை ஒரு சக்திவாய்ந்த கொடிய நச்சு. நன்மையால் நிறைந்த முழு வாழ்க்கையையும் கெடுக்க அதன் ஒரு துளி போதும். ஒருவன் மலையளவு நற்செயல்களைச் செய்திருந்தாலும், பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், அவை அனைத்தையும் தனக்காகவும், தன்னை உயர்த்திக் கொள்வதற்காகவும் மட்டுமே செய்திருந்தால், அவன் தன்னை நல்லொழுக்கமுள்ளவன் என்று சொல்ல முடியுமா? முடியாது
நல்லது என்பது ஒரு முடிவு மட்டுமல்ல, ஒரு வழியும் கூட. நன்மையானவற்றைச் செய்ய அதிகமான விவேகமும், இரக்கமும் தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக, தான் என்று சில நேரங்களில் நினைக்கும் மிகவும் சிக்கலான சூழலை, மனநிலையை நாம் அகற்ற வேண்டும். நமது வாழ்வில் தான் என்ற உணர்வு மேலோங்கும்போதும், நினைக்கும் போது, அது நமது வாழ்க்கையை முற்றிலும் அழித்து விடுகின்றது. வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தான் என்ற உணர்வோடு மட்டுமே செய்ய வேண்டும் என்ற உந்துதல் உண்மையில் அவ்வளவு முக்கியமானதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.
சில சமயங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் இத்தகைய எல்லாச் சூழ்நிலைகளையும் சரி செய்ய, இறையியல் நற்பண்புகள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. நல்ல நோக்கங்களைக் கொண்டவர்கள் கூட சில நேரங்களில் வாழ்வில் கீழே விழுவார்கள் என்பதால், தாங்கள் விழும் காலங்களில் கவனமாக இருக்க நல்லொழுக்கங்கள் உதவுகின்றன. ஏனென்றால் தினமும் நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் கூட சில நேரங்களில் தவறு செய்கிறார்கள். நாம் அனைவரும் பாவிகள் தவறு செய்யக்கூடியவர்கள். நமது அறிவாற்றல் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை, விருப்பம் எப்போதும் உறுதியாக இருப்பதில்லை, உணர்ச்சிகள் எப்போதும் நம்மை ஆள்வதில்லை, துணிவு எப்போதும் பயத்தை வெல்வதில்லை. ஆனால் நாம் நம் இதயங்களை தூயஆவியாருக்குத் திறக்கும்போது, அவர் நம்மில் உள்ள இறையியல் நற்பண்புகளை உயிர்ப்பிக்கிறார். நாம் நம்பிக்கையை இழந்திருக்கும்போது கடவுள் நம் நம்பிக்கையை தூய ஆவியின் ஆற்றலுடன் மீண்டும் திறக்கிறார்; நாம் ஊக்கம் இழந்திருக்கும்போது, கடவுள் நம்மில் நம்பிக்கையை எழுப்புகிறார்; நம்முடைய இதயம் கடினமாக இருக்கும்போது, கடவுள் தம்முடைய அன்பினால் அதை மென்மையாக்குகிறார்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். குறிப்பாக, இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், பொதுப் பேரவையை சிறப்பிக்கும் குழந்தை இயேசுவின் பிரான்சிஸ்கன் மறைப்பணி அருள்சகோதரிகள் மற்றும் மாரிஸ்ட் சகோதரர்களையும் வாழ்த்தினார்.
Borgo Faiti di Latina, Mondragone மற்றும் Gragnano திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொருவரையும் அவரவரின் பாதுகாவலரான கன்னி மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைப்பதாகவும் எடுத்துரைத்தார். மேலும், சிசிலியின் தூய கலோஜெரோ திருப்பயணிகள், நேபிள்ஸின் "நுன்சியாடெல்லா" இராணுவப் பள்ளி மாணாவர்கள், கலாட்டி மாமெர்டினோ இசைக்குழுவினர் ஆகியோரையும் வாழ்த்தினார்.
இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், நாசரேத்து இயேசுவின் வாழ்க்கை மறைபொருளை தெளிவாகவும், கூர்மையாகவும் விவரித்த நற்செய்தியாளர் புனித மாற்குவின் திருவிழாவை நாளைய தினம் கொண்டாட இருக்கின்றதை எடுத்துரைத்தார்.
நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவால் கவரப்படவும், கடவுளுடைய அரசைக் கட்டியெழுப்புவதில் உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம், மியான்மார் நாட்டு மக்களுக்காக செபிக்க வலியுறுத்தினார்.
போர் எப்போதும் தோல்வி தான், ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே அதனால் பலனடைகின்றார்கள், அமைதிக்காக செபிப்போம், போரினால் அதிகமாக துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிப்போம். இளம் போர்வீரர்கள் பலர் மரணமடைகின்றனர் அவர்களுக்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மத்திய கிழக்குப் பகுதி, காசா பகுதி மக்களுக்காக செபிப்போம். இஸ்ரயேல், பாலஸ்தீனம், இரண்டு பகுதி மக்களும், நல்லுறவும், விடுதலையும் பெற்றவர்களாய் வாழ அவர்களுக்காக செபிப்போம். அமைதிக்காக செபிப்போம் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்
இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்