தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை – தன்னடக்கம் என்னும் நல்லொழுக்கம்

ஏப்ரல் 17 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயனிகளுக்கு தன்னடக்கம் என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 17 புதன்கிழமை இம்மாதத்தின் மூன்றாவது புதன் மறைக்கல்வி உரையினை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலைகளை உதிர்த்த மரங்கள் வண்ண இளம் தளிர்களால் தன்னை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த வசந்த காலத்தில் இளஞ்சூரியனின் இதமான வெயிலை உடலிலும், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் ஆர்வத்தினை உள்ளத்திலும் பெற்றவர்களாய் ஏறக்குறைய 20000 திருப்பயணிகள் வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்தனர். உலகெங்கிலும் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் கரமசைத்து வாழ்த்தியும் சிறுகுழந்தைகளை தொட்டு ஆசீரளித்தும் மக்கள் நடுவில் திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் சீராக்கின் ஞானநூலில் உள்ள இறைவார்த்தைகள் இத்தாலியம், ஆங்கிலம், அரபு, போர்த்துக்கீசியம், பிரெஞ்சு, இஸ்பானியம் போன்ற பல்வேறு மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

சீராக் ஞானநூல் 5:2, 6:4, 14:14 

உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே; உன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே. தீய நாட்டங்களுக்கு ஒருவர் இடம் கொடுத்தால் அவையே அவரை அழித்துவிடும்; அவர் பகைவரின் நகைப்புக்கும் ஆளாவார். ஒவ்வொரு நாளும் உனக்குக் கிடைக்கும் நன்மைகளை நன்கு பயன்படுத்து; உன் வாழ்வின் இன்பங்களைத் துய்க்காமல் விட்டுவிடாதே.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தொடர் மறைக்கல்வி உரையின்  15ஆம் பகுதியாக தன்னடக்கம் என்னும் நல்லொழுக்கம் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்தார், திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம். 

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நீதி, உளத்துணிவு, விவேகம் என்னும் தலையாய நல்லொழுக்கங்களில் தன்னடக்கம் என்னும் நல்லொழுக்கத்தைப் பற்றி இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கின்றோம். மற்ற மூன்று நல்லொழுக்கங்களுடன் இணைந்து நீண்ட ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கிறது தன்னடக்கம். இது கிறிஸ்தவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதையும் எடுத்துரைக்கின்றது. கிரேக்கர்களைப் பொறுத்தவரை நல்லொழுக்கங்களின் பயிற்சியானது மகிழ்ச்சியைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. தத்துவமேதை அரிஸ்டாட்டில் நெறிமுறைகள் குறித்த மிக முக்கியமான கட்டுரையை தனது மகன் நிகோமாக்கோஸுக்கு எழுதி, வாழ்க்கைக் கலையை அவருக்கு அறிவுறுத்தினார். ஒரு சிலர் மட்டுமே அடையும் மகிழ்ச்சியை எதற்காக நாம் அனைவரும் தேடுகிறோம்? இக்கேள்விக்கு பதிலளிக்க, அரிஸ்டாட்டில் நல்லொழுக்கங்களின் கருப்பொருளைக் குறிப்பிடுகிறார், அவற்றில் தன்னடக்கம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. Enkráteia என்க்ரதேயா என்ற இந்த கிரேக்க வார்த்தையின் அர்த்தம் "தன் மீதுள்ள அதிகாரம் என்பதாகும்". தன்னடக்கத்திறன், கிளர்ச்சி உணர்ச்சிகளால் மூழ்கடிக்கப்படாத கலை மற்றும் மன்சோனி அழைக்கும் "மனித இதயத்தின் குழப்பத்தை ஒழுங்கிற்குக் கொண்டுவருதல் தன்னடக்கமாகும்.

தார்மீக நல்லொழுக்கமான தன்னடக்கம் நமது நல்ல விருப்பங்களை ஈர்க்கின்றது, படைக்கப்பட்ட நன்மைப் பொருள்களின் பயன்பாட்டில் சமநிலையை ஏற்படுத்துகின்றது என கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி எடுத்துரைக்கின்றது. மேலும், உள்ளுணர்வுகளின் மீது விருப்பத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது, நேர்மையின் எல்லைகளுக்குள் நமது விருப்பங்களை வைத்திருக்கிறது என்றும் கூறுகின்றது. தன்னடக்கமுள்ள மனிதர் தனது உணர்திறனுக்கான ஆர்வத்தை நல்லதை நோக்கிச் செலுத்துகிறார், ஆரோக்கியமான விவேகத்தைப் பேணுகிறார். தனது இதயத்தின் ஆசைகளுக்கு ஏற்றவாறு தனது சொந்த உள்ளுணர்வையும் ஆற்றலையும் அவர் பின்பற்றுவதில்லை.

தன்னடக்கம் என்பது இத்தாலிய வார்த்தை கூறுவது போல், சரியான அளவினைக் கொண்ட நல்லொழுக்கமாகும். தன்னடக்கமுள்ளவர் ஒவ்வொரு சூழ்நிலையிலும், ஞானத்துடன் நடந்துகொள்கிறார், ஏனென்றால் எப்போதும் உந்துதல் அல்லது உற்சாகத்துடன் செயல்படும் நபர்கள் இறுதியில் நம்பமுடியாதவர்களாக மாற்றிவிடுகின்றனர். தாங்கள் நினைப்பதைச் சொல்வதில் பெருமிதம் கொள்ளும் பலர் வாழும் இவ்வுலகில், தன்னடக்கமுள்ள நபர் தான் சொல்வதைச் சிந்திக்க விரும்புகிறார். அவர் வீணான வாக்குறுதிகளை வழங்குவதில்லை, மாறாக அவர் நிறைவளிக்கும் வகையில் தனது செயல்களை அளிக்கின்றார்.

தனது சொந்த விருப்புக்களில் கூட தன்னடக்கமுள்ளவர் நீதியுடன் செயல்படுகின்றார். விவேகத்துடன் செயல்படுகின்றார். ஏனெனில் நமது சொந்த விருப்பங்களுக்கான தூண்டுதல்களின் பாதை, அதற்கான உரிமம் போன்றவை நமக்கு எதிராக மாறி, நம்மை சலிப்பு நிலையில் சில நேரங்களில் ஆழ்த்துகின்றன என்பதை நன்கு அவர் அறிந்துள்ளார். எல்லாவற்றையும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட எத்தனை பேர் எல்லாவற்றிலும் தங்களது இரசனையை இழக்கிறார்கள்! எப்போதும் சரியான அளவைத் தேடுவது நல்லது: எடுத்துக்காட்டாக, ஒரு நல்ல திராட்சை இரசத்தை சுவைத்துப் பருக வேண்டும் என்றால் அதை ஒரே மூச்சில் விழுங்குவதை விட சிறிது சிறிதாக சுவைப்பதே நல்லது.

தன்னடக்கமுள்ள நபர் வார்த்தைகளை நன்றாக எடைபோடவும் அளவிடவும் தெரிந்தவர். உறவுகளையும் நட்புகளையும் அழிக்கும் ஒரு கணநேர கோபத்திற்கு ஒருபோதும் இடம் கொடாதவர். ஏனெனில் கோபத்தினால் அழிக்கப்படும் நட்பு மற்றும் உறவுகள் மீண்டும் கட்டியெழுப்பப்பட கடினமானது என்பதை அறிந்தவர். குறிப்பாக குடும்ப வாழ்க்கையில், கட்டுப்பாடுகள் குறையும் போது, ​​நாம் அனைவரும் பதற்றம், எரிச்சல் மற்றும் கோபத்தை கட்டுக்குள் வைத்திருக்காத ஆபத்தான ஓட்டத்தை தொடர்கின்றோம். பேசுவதற்கு ஒரு நேரம் மற்றும் அமைதியாக இருக்க ஒரு நேரம் உள்ளது, இரண்டுக்கும் சரியான அளவு தேவை. உதாரணமாக மற்றவர்களுடன் இருக்கும் போது, தனியாக இருக்கும்போது என பலநிலைகளில் இந்த அளவானது தேவைப்படுகின்றது.

தன்னடக்கமுள்ள நபர் தனது கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நன்கு தெரிந்து வைத்துள்ளார். நாம் அவர்களை எப்போதும் அமைதியான மற்றும் சிரித்த முகத்துடன் பார்ப்பதால் மட்டுமல்ல. உண்மையில், சில நேரங்களில் கோபம் கூட சரியான வழியில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அமிலம் போன்ற கோபமான அமைதியை விட பழிச்சொல் சில நேரங்களில் ஆரோக்கியமானது. தன்னடக்கமுள்ள நபர் மற்றொருவரைத் திருத்துவதை விட கடினமானது எதுவும் இல்லை என்பதையும், ஆனால் அது அவசியம் என்பதையும் நன்கு அறிவார்: இதை அறியாவிடில் அவர் தீமைக்குத் தன்னை இழக்கின்றார். சில நேரங்களில் தன்னடக்கமுள்ள நபர் முழுமையான கொள்கைகளை உறுதிப்படுத்துகிறார், நிர்வகிக்கின்றார், பேரம் பேச முடியாத மதிப்புகளை நாடுகின்றார். அதே நேரத்தில் மக்களைப் புரிந்துகொள்கின்றார். அவர்களுக்காகத் தனது அனுதாபத்தை வெளிப்படுத்துகிறார்.

தன்னடக்கத்தின் கொடை சமநிலையானது, அரிதானது, விலைமதிப்பற்றது. உண்மையில், நம் உலகில் உள்ள அனைத்தும் நம்மை அதிகப்படியான நிலைக்குத் தள்ளுகின்றன. ஆனால் அதற்கு மாறாக தன்னடக்கமானது தாழ்ச்சி, உளத்தேர்வு, மறைந்த வாழ்வு, சாந்தம் போன்ற நற்செய்தி அணுகுமுறைகளுடன் நன்றாக இணைந்து செல்ல உதவுகிறது. தன்னடக்கத்துடன் இருப்பவர்கள் மற்றவர்களின் உயர்வை மதிக்கிறார்கள். ஆனால் அதையே ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு வார்த்தைக்குமான ஒரே அளவுகோலாக அவர்கள் கருதுவதில்லை. உணர்திறன் உடையவராக அழுவது எப்படி என்று அறிந்தவராக அதற்காக வெட்கப்படாதவராக இருக்கின்றார். தன்னைப் பற்றி அவர் வருத்தப்படுவதில்லை. தோற்கடிக்கப்பட்டாலும் மீண்டும் எழுகிறார்; வெற்றியடைந்து, தனது வழக்கமான மறைந்த வாழ்க்கைக்குத் திரும்புகின்றார். அவர் கைதட்டல்களைத் தேடுவதில்லை, மாறாக மற்றவர்கள் அவருக்குத் தேவை என்பதை நன்கு அறிகின்றார்.

தன்னடக்கம் என்பது நம்மை மகிழ்ச்சியற்றவர்களாக, ஒன்றுமில்லாத சாம்பல் போன்றவர்களாக்கும் என்பது உண்மையல்ல. உண்மையில், தன்னடக்கம் வாழ்க்கையின் நன்மைகளை சிறப்பாக மகிழ்வாக அனுபவிக்க வைக்கிறது: ஒரே மேசையில் ஒன்றாக இருத்தல், நட்புறவுகளின் மென்மை, அறிவாற்றலுள்ள மக்கள் மீதான நம்பிக்கை, படைப்பின் அழகைக் கண்டு வியப்படைதல் போன்றவற்றை தன்னடக்கம் நமக்குத் தருகின்றது. தன்னடக்கத்துடன் கூடிய மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதை உணர்ந்து, மதிக்கிறவர்களின் இதயங்களில் செழிக்கும் மகிழ்ச்சியாகும். இறைவன் நமக்கு முதிர்ச்சி என்னும் கொடையைத் தர செபிப்போம். வயதில் உணர்வில் சமூகத்தில் முதிர்ச்சியான மனநிலையைத் தர செபிப்போம். தன்னடக்கம் என்னும் கடவுளின் கொடைக்காக செபிப்போம்.

இவ்வாறு தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வரவேற்றார். இளையோர், நோயாளிகள், புதுமணத்தம்பதிகள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் மக்களுக்காக செபிக்கக் கேட்டுக்கொண்டார்.  

இத்தாலிய மொழி திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், குருத்துவ ஆண்டினை நினைவுகூரும் ஜுசெப்பினி முரியால்தோ துறவறத்தார், மிலான் மற்றும் ஆன்திரியா மறைமாவட்ட அருள்பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்தினார். மேலும், கிறிஸ்துவைக் கடைப்பிடிப்பதிலும், தங்கள் உடன்சகோதரர்களுக்குப் பணியாற்றுவதிலும், சிறப்புடன் செயல்பட அவர்களை ஊக்குவித்தார்.

ட்ரெவினானோ, அஜெரோலா, ட்ரிக்கியானோ மற்றும் டரான்டோ திருப்பயணிகளை வரவேற்ற திருத்தந்தை அவர்கள், அவெலினோவின் ANSPI குழுவினர், அரேஸ்ஸோவின் கிராமப்புற நிலப்பரப்பு சங்கத்தினர் ஆகியோரை அன்புடன் வரவேற்றார். நன்மை மற்றும் நற்செய்தியை வரவேற்பதில் தாராளமானவர்களாக இருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இறுதியாக, நோயாளிகள், முதியவர்கள், புதுமணத் தம்பதிகள், இளைஞர்கள், குறிப்பாக கூடியிருந்த பல மாணவர்களின் இருப்பு அனைவரையும் உற்சாகப்படுத்துகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஒளியை உலகில் சுடர்விடச் செய்வதற்கும், நம்பிக்கையின் உறுதிப்பாட்டிற்கு சான்றுகளாக வாழ்க்கைச் சூழலில் திகழவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

போரினால் பாதிக்கப்படும் புனித பூமி, பாலஸ்தீனம், இஸ்ரயேல் மற்றும் உக்ரைன் மக்களுக்காக இந்நேரத்தில் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், சிறைக்கைதிகளை நினைத்துப் பார்ப்போம் என்றும், அவர்கள் விரைவில் விடுவிக்கப்பட இறைவன் அருள் புரியட்டும் என்றும் கூறினார்.

சிறைக்கைதிகள் என்று கூறும்போது அவர்கள் அனுபவிக்கும் துன்புறுத்தல்கள் நினைவிற்கு வருகின்றன என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கைதிகளைத் துன்புறுத்துவது என்பது மிகவும் மோசமான செயல், அது மனிதாபிமானச் செயல் அல்ல என்றும் கூறினார்.

மனிதனின் மாண்பைக் கெடுக்கும் பல துன்புறுத்தல்களையும், துன்புறுத்தல்களை அனுபவித்த பலரையும் நினைத்துப் பார்ப்போம், இறைவன் அனைவருக்கும் உதவி செய்து அனைவரையும் ஆசீர்வதிப்பாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 April 2024, 08:42

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >