தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை – பிறரன்பு என்னும் நற்பண்பு

மேலெழும்பிச் செல்வதல்ல, கீழிறங்கிவருவது, மற்றவர்களிடமிருந்து பெறுவதல்ல, மாறாக கொடுப்பது, வெளிப்படையாக தோற்றமளிக்கும் ஒன்றல்ல, மாறாக மறைந்திருந்து செயலாற்றுவது அன்பு.
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை தமிழில்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே மாதம் 15ஆம் தேதி புதன்கிழமையன்று, அதாவது அனைத்துலக குடும்ப தினத்தன்று,  பிறரன்பு என்னும் நற்பண்பு குறித்து தன் கருத்துக்களை திருப்பயணிகளிடம் பகிர்ந்தார்.

உரோம் நகரில் ஓரளவு வெப்பம் இருந்தாலும், திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வியுரை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே இடம்பெற்றது. முதலில், திறந்த காரில் வலம்வந்தபடி கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தியபின் தூய பேதுரு பேராலய முகப்பில் போடப்பட்டிருந்த மேடையை அணுகி அதில் அமர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.  அமர்ந்ததும், தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் இருந்து ஒரு பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் (1 கொரி 13,4-7).

இப்பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தை தன் புதன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

அன்பான சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்!

இன்று நாம் மூன்றாவது இறையியல் நற்பண்பு குறித்து நோக்குவோம். அதுதான் பிறரன்பு. நற்பண்புகள் குறித்து நாம் நடத்திவரும் மறைக்கல்வி தொடரின் மணிமகுடமாக இன்றைய மறைபோதகத் தலைப்பு உள்ளது. பிறரன்பு என்பது குறித்து நினைத்தாலே நம் இதயம் விரிவடைகிறது, நம் மனம் தூய பவுலின் கொரிந்தியருக்கான முதல் திருமடல் நோக்கிச் செல்கிறது. மூன்று விதமான நற்பண்புகள் பற்றி எடுத்துரைத்து, ‘ நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது’ (1 கொரி 13:13) என முடிக்கிறார் தூய பவுல்.

உடன்பிறந்த உறவுநிலை அன்பில் குறைவுபட்டவர்களாக இருந்த கொரிந்து சமூகத்திற்கு இக்கடிதத்தை எழுதுகிறார் தூய பவுல். எப்போதும் சண்டையிட்டவர்களாக, உள்ளுக்குள் பிரிவினைகளைக் கொண்டவர்களாக, தங்களையே உயர்வாக எண்ணியவர்களையும், மற்றவர்களுக்கு செவி மடுக்காமல் மற்றவர்கள் தங்களைவிட தாழ்ந்தவர்கள் என எண்ணியவர்களையும் கொண்டதாக கொரிந்து கிறிஸ்தவ சமுதாயம் இருந்தது. தூய பவுல் அவர்களிடம், “இவ்வறிவு இறுமாப்படையச் செய்யும்; ஆனால், அன்பு உறவை வளர்க்கும்” (1 கொரி 8:1) என்பதை தெளிவாக நினைவூட்டுகிறார். கிறிஸ்தவ சமூகத்தின் மேன்மைமிகு ஒன்றிப்பின் தருணமாக இருக்கும் திருப்பலியின் போதும், இருப்பவர்கள் உண்டு குடிப்பதும், இல்லாதவர்கள் ஒதுக்கப்படுவதும் என்ற அவதூறான செயல் இடம்பெற்றுள்ளது. இதைப்பற்றி எழுதும் தூய பவுல், “நீங்கள் சபையாகக் கூடி வரும்போது உங்களிடையே பிளவுகள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன்…….…… நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல. ஏனெனில், நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது?” (1 கொரி 11:18-22) எனத் தெளிவாகக் கேள்வி கேட்கிறார். இத்தகைய ஒரு பின்னணியில் தூய பவுல் தரும் தீர்ப்பு இதுதான்: ‘நீங்கள் ஒன்றாகக் கூடி வந்து உண்பது ஆண்டவரின் திருவிருந்து அல்ல’(20).

யாருக்குத் தெரியும், ஒருவேளை கொரிந்து சமூகம் தாங்கள் செய்வது பாவம் என்பதை தெரியாதிருந்து, தூய பவுலின் வார்த்தை அவர்களுக்கு புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகக்கூட இருந்திருக்கலாம். அவர்கள் நல்லவர்கள் என்றே உறுதியாகத் தெரிந்து அவர்கள் செயல்பட்டிருக்கலாம். அன்பைப் பற்றிய கேள்வி அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தால், அதனை ஓர் உயரிய மதிப்பீடாக, அதாவது நட்புணவு அல்லது குடும்பத்திற்கு இணையானதாக அவர்கள் தெரிவித்திருக்கலாம். இன்றைய நவீன காலத்திலும் அன்பு என்பது உதட்டளவிலேயே ஊக்குவிக்கப்படுவதாகவும், பாடல்களில் புறக்கணிக்கப்படுவதாகவும் காட்டப்படுகிறது.

ஆனால் இன்னொரு அன்பைப் பற்றியே தூய பவுல் கொரிந்தியரிடம் கேட்கிறார். மேலெழும்பிச் செல்வதல்ல, கீழிறங்கிவருவது, மற்றவர்களிடமிருந்து பெறுவதல்ல, மாறாக கொடுப்பது, வெளிப்படையாக தோற்றமளிக்கும் ஒன்றல்ல, மாறாக மறைந்திருந்து செயலாற்றும் அன்பு. கொரிந்து மக்களிடையே இந்த சிறந்த பண்பு, அதாவது இறைவனிடமிருந்து வரும் பண்பு காணாமல்போயிருந்ததைக் குறித்து தூய பவுல் கவலை கொண்டிருந்தார். இன்று நம் நடுவிலும் அத்தகைய ஒரு நிலை காணக்கிடக்கிறது. பலர் தங்களை நல்லவர்கள் என்று உறுதிபடக் கூறி, தங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் அன்புகூர்வதாக எடுத்துரைத்தாலும், நடைமுறையில் பார்த்தோமானால், அவர்களுக்கு இறையன்பு குறித்து மிகக் குறைவாகவே தெரிந்திருக்கிறது.

ஆதிகாலக் கிறிஸ்தவர்களுக்கு அன்பை விவரிக்கும் பல கிரேக்க வார்த்தைகள் இருந்தன. இறுதியில் “agape” என்ற வார்த்தை நிலைபெற்றது, அதற்கு பிறரன்பு என்று அர்த்தம். உலகில் காணப்படும் அனைத்துவிதமான அன்புகளுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல, மற்றவர்களைப்போல் அவர்களும் காதலில் விழுகிறார்கள். அவர்களும் நட்புணர்வில் கிட்டும் நன்மைத்தனத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களும் தங்கள் தேசத்தை அன்புகூர்வதோடு, மனிதகுலமனைத்திற்குமான அன்பிலும் பங்குபெறுகிறார்கள். ஆனால் இதையெல்லாம் விட உயர்வான அன்பு உள்ளது. அது கடவுளிடமிருந்து வரும் அன்பு. அவ்வன்பு கடவுளை நோக்கி நம்மைத் திருப்பி, கடவுளை அன்புகூர்ந்து அவரின் நண்பர்களாக மாற்றி, கடவுள் நம் அயலாரை அன்புகூர்வதுபோல் நாமும் அவர்களை அன்பு கூர நமக்கு உதவி, கடவுளின் நட்புணர்வில் நாம் பங்குபெறுபவர்களாக நம்மை மாற்றுகிறது. இந்த அன்பானது, கிறிஸ்துவின் காரணமாக, நாம் ஒரு சாதாரண மனிதராக செல்ல முடியாத இடத்திற்கும் நம்மை ஏழைகளை நோக்கிச் செல்ல வைக்கிறது. அன்புகூரத் தகுதியற்றோர், நம்மைப் பற்றி அக்கறையற்றோர், நமக்கு நன்றியில்லாதவர்கள் என அனைவரையும் நோக்கி அன்புகூர இது அழைத்துச் செல்கிறது. இது கடவுளிடமிருந்து வரும் அன்பு, இது நம்முள் இடம்பெறும் தூய ஆவியாரின் செயல்பாடு.

தன் மலைப்பிரசங்கத்தில் இயேசு, உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன? பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே (லூக் 6:32) என்று கேட்கிறார். அதன் இறுதியில் இயேசு, நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில், அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார் (லூக் 6:35) என மேலும் உரைக்கிறார். இந்த வார்த்தைகளில் அன்பு என்பது இறையியல் நற்பண்பாக தன்னை வெளிப்படுத்தி, பிறரன்பு என்ற பெயரை எடுத்துக்கொள்கிறது. நாம் கடவுளில் வாழவில்லையெனில், இந்த அன்பு செயல்முறைப்படுத்தப்பட முடியாதது என்பதை நாம் உடனேயே புரிந்துகொள்கிறோம். நமது மனித இயல்பானது, எது நல்லதோ எது அழகானதோ அவைகளை மட்டுமே அன்புகூர்கிறது. ஒரு கொள்கைக்காகவோ, அல்லது உயரிய பாசத்திற்காகவோ நம்மால் தாராளமான, வீரத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலலாம். ஆனால், கடவுளின் அன்பு இந்த விதிமுறைகளையெல்லாம் தாண்டிச் செல்கிறது. கிறிஸ்தவ அன்பு, அன்புகூரத் தகுதியற்றவைகளையும் அன்புகூர்கிறது, மன்னிப்பையும் வழங்குகிறது, தன்னை சபிப்பவர்களுக்கும் ஆசீரையும் அளிக்கிறது.  எளிதில் பற்றியெரியவல்ல இந்த அன்பு இயலக்கூடியதல்ல எனத் தோன்றினாலும், இது ஒன்றுதான் நம்முள் நிலைத்திருப்பது. இது ஒரு குறுகலான வாசல், இதன் வழியாகத்தான் நாம் இறையரசை சென்றடைய முடியும்.  வாழ்வின் அந்தியொளியின்போது நம் பொதுவான அன்பு குறித்தல்ல, மாறாக நம் பிறரன்பு குறித்தே நாம் தீர்ப்பிடப்படுவோம். இயேசுவே கூறினார், “மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத் 25:40) என்று.

இவ்வாறு தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருமழையாலும், வெள்ளப்பெருக்காலும் பாதிக்கப்பட்டிருக்கும் ஆப்கான் நாட்டு மக்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இந்த வெள்ளப்பெருக்கில் குழந்தைகள் உட்பட, எண்ணற்றோர் பலியாகியுள்ளதைப் பற்றியும், இன்னும் வீடுகள் தொடர்ந்து சேதமாகி வருவது குறித்தும்  வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். ஆப்கானில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும், குறிப்பாக இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக இறைவேண்டல் செய்வதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை ஆற்றுமாறு அனைத்துலக சமுதாயத்தை இறைஞ்சுவதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2024, 14:43

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >