புதன் மறைக்கல்வியுரை - இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
அன்பு நெஞ்சங்களே, நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் பற்றிய தன் மறைக்கல்வித் தொடரின் 20ஆம் பகுதியாக மனத்தாழ்மை குறித்து கடந்த வார மறைப்போதகத்தில் தன் கருத்துக்களைப் பகிர்ந்து, அத்தொடரை நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், “தூய ஆவியாரும் மணப்பெண்ணும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்திச் செல்பவர் தூய ஆவி” என்ற தலைப்பில் புதிய தொடர் ஒன்றை மே 29ஆம் தேதி புதன்கிழமையன்று துவக்கினார்.
ஐரோப்பாவில் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் சிறிதளவு அதிகமாகிக்கொண்டேச் சென்றாலும், திருத்தந்தையின் மறைக்கல்வி போதனையில் வந்திருந்து பங்குபெற விரும்பும் திருப்பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் மறைபோதக உரை இடம்பெற்றது.
முதலில் தொடக்க நூலின் முதல் இரண்டு வரிகள் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.
“தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” (தொநூ 1,1-2).
இந்த விவிலிய வரிகளுக்குப்பின் “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” என்ற தலைப்பில் தன் கருத்துக்களை திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, காலை வணக்கம்.
“தூய ஆவியாரும் மணப்பெண்ணும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்திச் செல்பவர் தூய ஆவி” என்ற நம் புதிய தொடரின் பயணம் மீட்பு வரலாற்றின் மூன்று பகுதிகளாக இடம்பெற உள்ளது. அதாவது, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு மற்றும் திருஅவையின் காலம் என மூன்று பகுதிகள். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி நம் பார்வையை பதித்தவர்களாக நம் மறைக்கல்விப் பயணத்தைத் தொடர்வோம். பழைய ஏற்பாட்டில் தூய ஆவியார் குறித்த நம் முதல் தொடரில் விவிலிய தொல்பொருள் ஆராய்ச்சியை நாம் மேற்கொள்ளப் போவதில்லை. மாறாக, பழைய ஏற்பாட்டில் வாக்குறுதியாக வழங்கப்பட்டது, எவ்வாறு இயேசு கிறிஸ்துவில் நிறைவேறியது என்பது குறித்து காண உள்ளோம். இது, காலையில் உதயத்திலிருந்து நண்பகல் வரை சூரியனின் பாதையை பின்தொடர்வதை ஒத்ததாகும்.
விவிலியம் முழுமைக்கும் துவக்க வார்த்தைகளாக இருக்கும் இரு வரிகளை இப்போது நோக்குவோம். தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும், மண்ணுலகையும் படைத்தபொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவியிருந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது (தொநூ 1,1-2) என வாசிக்கிறோம்.
உருவமற்று, வெறுமையாக, இருள் பரவியிருந்த இவ்வுலகை ஓர் ஒழுங்கமைவு கொண்ட, இணக்கவாழ்வுடன் கூடிய இடமாக மாற்றுபவராக இறைவனின் ஆவி இங்கு செயல்படுவதைக் காண்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், ஒழுங்கற்றத் துவக்க நிலையிலிருந்து பிரபஞ்ச நிலை நோக்கியும், குழப்ப நிலையிலிருந்து அழகிய ஒழுங்கமைவு நோக்கியும் அவரே அழைத்துச் செல்கிறார். அதனால்தான், உலகைக் குறிக்கும் கிரேக்க வார்த்தையான kosmos என்பதும், இலத்தீன் வார்த்தையான mundus என்பதும், அழகிய, ஒழுங்கமைவுடன் கூடிய, சுத்தமான ஒன்றைக் குறிப்பதாக உள்ளது.
படைப்பில் தூய ஆவியாரின் செயல்பாடு இங்கு தெளிவில்லாத ஒன்றாகத் தோன்றினாலும், இதற்குப்பின் வரும் விவிலிய வரிகளில் இதனைத் தெளிவாகக் காணலாம். திருப்பாடலில், ‘ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின; அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின’ (திபா. 33:6) எனவும், மேலும், ‘உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப் பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்’ (திபா. 104:30) எனவும் வாசிக்கின்றோம். புதிய படைப்பில் தூய ஆவியாரின் தலையீட்டை தெளிவாக புதிய ஏற்பாட்டில் காணலாம். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் கண்டார் (மத் 3:16) என யோர்தான் நதியில் இயேசு திருமுழுக்கு பெற்றபோது நடந்ததை, படைப்பின்போது தூய ஆவியார் அசைந்தாடிக் கொண்டிருந்ததோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். உயிர்த்தபின் தோன்றிய இயேசு தன் சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று சொல்வது (Jn 20:22), ஆதாமின் நாசிகளில் உயிர் மூச்சை ஊதி உயிர் கொடுத்ததை ஒத்துள்ளது (தொநூ 2:7).
தூய பவுல் தூய ஆவியாருக்கும் படைப்புக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து ஒரு புதிய கூற்றை முன்வைக்கிறார். இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது (உரோ 8:22) என்கிறார். படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும், அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது. (உரோ 8, 20-21) என்பதையும் தூய பவுலே குறிப்பிடுகிறார். இந்த உண்மை நிலையே நம் நெருங்கிய அக்கறைக்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது. படைப்பின் துன்ப துயரத்திற்கு காரணம், பயனற்ற நிலைக்கு அது உட்படுத்தப்பட்டதும், மனிதகுலத்தின் பாவமும் ஆகும். இவையே இறைவனிலிருந்து படைப்பு தூர விலகிச் செல்வதற்கான காரணம். அன்றுபோல் இன்றும் அது உண்மையாக இருக்கின்றது. படைப்பின் மீது மனித குலம் ஏறப்டுத்தியுள்ள அழிவை நாம் பார்க்கிறோம், குறிப்பாக, இயற்கையின் வளங்கள் பெருமளவில் சுரண்டப்படுவதில். புனித பிரான்சிஸ் அசிசி, படைப்பாளராம் தூய ஆவியாரில் நாம் இணக்கத்துடன் வாழ நமக்கு வழிதனைக் காட்டுகிறார். ஆழ்ந்து தியானித்தல் மற்றும் இறைப்புகழ் என்னும் பாதையே அது. படைப்புகளிடமிருந்து இறைவனை நோக்கி எழும், ‘இறைவா உமக்கேப் புகழ்’ என்னும் புகழ்மாலையே அது. ‘வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; (19:1) என திருப்பாடல் உரைத்தாலும், வானங்களின் மௌனமொழிக்கு மனிதர்களின் குரல் தேவைப்படுகின்றது. திருப்பலியில் நாம் தினமும் வானமும் பூமியும் உமது மகிமையால் நிறைந்துள்ளன என கூறுகிறோம். புகழ்தலுக்குரிய வார்த்தைகளால் அவைகள் கர்ப்பம் தரித்திருந்தாலும், அவற்றை வெளியேக் கொண்டுவர உதவ ஒரு தாதியரின் கைகள் தேவைப்படுகின்றன. இறைவனின் மகிமையைப் பாடுவதே நம் பணி என புனித பவுலும் எடுத்துரைக்கிறார் (எபே 1:12). உடைமைகளைக் கொண்டிருப்பதில் கிட்டும் மகிழ்ச்சியைவிட, ஆழ்ந்த சிந்தனையில் கிட்டும் மகிழ்ச்சிக்கு முதலிடம் கொடுப்போம். படைப்பில் எதையும் தன் உடமையாக்கிக் கொள்ள விரும்பாத புனித பிரான்சிஸ் அசிசியைப்போல் எவரும் படைப்பு குறித்து பேருவுவகை அடைந்ததில்லை.
சகோதரர் சகோதரிகளே, ஒழுங்கற்ற ஒரு நிலையிலிருந்து ஒழுங்கைக் கட்டியெழுப்பிய தூய ஆவியார் இன்றும் ஒவ்வொரு மனிதரிலும் மாற்றத்தைக் கொணர முயன்று வருகிறார். ‘நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன். ....என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்’ (எச 36:26-27) என எசக்கியேல் வழி இறைவன் கூறுகிறார். உலகின் துவக்கத்தில் வெறுமையாய் இருள் நிரம்பியிருந்ததைப்போல், நமது இதயங்களும் உள்ளன. எதிரெதிரான எண்ணங்களும் ஆசைகளும், அதாவது உடலின் ஆசைகளும், ஆவியைச் சேர்ந்தவைகளும் ஒன்றுக்கொன்று எதிராக, இயேசு விவிலியத்தில் கூறுவதுபோல் (மாற் 3:24), நமக்குள்ளேயே ஓர் அரசு தனக்குத்தானே பிரிந்து மோதிக்கொண்டிருப்பதுபோல் உள்ளுக்குள் இருக்கிறோம். வெளியே சமூக பொருளாதார குழப்பநிலைகளையும், நமக்குள்ளேயே உள்மன குழப்ப நிலைகளையும் காண்கிறோம். உள்மன குழப்ப நிலைகளைச் சரிச் செய்யும்போதுதான் வெளியுலகின் குழப்ப நிலைகளும் சரியாகும். இன்றைய நம் சிந்தனைகள் படைப்பவராம் தூய ஆவியார் குறித்த அனுபவத்திற்கான ஆவலை நம்மில் தூண்டியெழுப்பட்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருஅவை, நம் நாவுகளில்,”தூய ஆவியாரே வாரும். எம் மனங்களை வந்து சந்தியும். நீர் உருவாக்கிய எம் இதயங்களை வானகக் கொடைகளால் நிரப்பியருளும்”, என்ற வார்த்தைகளை இட்டு நிரப்பியுள்ளது.
இவ்வாறு தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்