தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் : இறைநம்பிக்கை அல்லது எதிர்நோக்கு

பிறரன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என்ற மூன்று இறையியல் நற்பண்புகளும் நமது ஒழுக்க நெறி திறனுக்கு கடவுள் கொடுக்கும் உயரிய பரிசுகள்.
மே மாதம் முதல் தேதி திருத்தந்தை வழங்கிய மறைபோதகம் - தமிழ் குரலில்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

மே மாதம் முதல் தேதி, உலகின் பெரும்பகுதி நாடுகள் தொழிலாளர் தினத்தைச் சிறப்பித்து விடுமுறையை அனுபவித்தவரும் இந்நாளில், இத்தாலியின் உரோம் நகரம் காலை கண்விழிக்கும்போது, நகர் முழுவதும் மழை தூறிக்கொண்டேயிருந்ததைக் கண்டது. காலை உள்ளூர் நேரம் 8 மணிக்கெல்லாம் மழை தூறல் முற்றிலுமாக நின்றுவிட்டபோதிலும், மழை பெய்யலாம் என்ற வானிலை முன்னறிவிப்பு இருந்ததால், திருத்தந்தையின் மறைபோதகம் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்றது. அரங்கம் நிரம்பி வழிய, நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்ற தலைப்பிலான மறைக்கல்வித் தொடரின்   இப்புதன் தலைப்பாக இறைநம்பிக்கை, அதாவது விசுவாசம் என்பதை எடுத்துக்கொண்டு, அங்கு கூடியிருந்த திருப்பயணிகளிடம் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், யோவான் நற்செய்தி ஒன்பதாம் பிரிவிலிருந்து ஒருபகுதி இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம், பிரெஞ்ச், போலந்து மொழி, ஆங்கிலம், ஜெர்மானியம் ஆகிய ஐரோப்பிய மொழிகளிலும், ஆசிய மொழியான அரபு மொழியிலும் வாசிக்கப்பட்டது. அப்பகுதியின் தமிழாக்கம் இதோ:

தான் பார்வை வழங்கிய மனிதரை யூதர்கள் வெளியே தள்ளிவிட்டதைப் பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்என்று கூறி அவரை வணங்கினார் (யோவா 9,35-38)

இந்த நற்செய்திப் பகுதி வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் சிந்தனைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

அன்பு சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்.

நாம் இன்று இறைநம்பிக்கை, அல்லது விசுவாசம் என்னும் நற்பண்பு குறித்து உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள ஆவல் கொள்கின்றேன்.

பிறரன்பு மற்றும் நம்பிக்கையுடன் சேர்ந்து, இந்த நற்பண்பானது இறையியலாக விவரிக்கப்பட்டு, நம் வாழ்வின் கூறாகிறது. இந்த கொடைக்காக இறைவனுக்கு நன்றியுரைப்போம். பிறரன்பு, நம்பிக்கை, எதிர்நோக்கு என்ற மூன்று இறையியல் நற்பண்புகளும் நமது ஒழுக்க நெறி திறனுக்கு கடவுள் கொடுக்கும் உயரிய பரிசுகள். இப்பண்புகள் அல்லது கொடைகள் இல்லாமல், நாம் விவேகமுடையவர்களாகவும், நீதியுடனும், வலிமையுடனும், நிதானமாகவும் செயல்பட முடியும், ஆனால் இருளில் கூட பார்க்கும் கண்களும், எவரும் அன்புகூராதபோதும் நேசிக்கும் இதயமும், உறுதியான நம்பிக்கையும் இருக்காது.

எதிர்நோக்கு அல்லது விசுவாசம் என்றால் என்ன? Dei Verbum அமைப்பு விதித்தொகுப்பின் சங்க முதன்மைக் கொள்கையை மேற்கோள்காட்டும் திருஅவையின் மறைக்கல்வி, விசுவாசம் என்பதை மனிதகுலம் சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இன்றி தன்னை முற்றிலுமாக கடவுளிடம் ஒப்படைப்பதை குறிப்பதாகக் காட்டுகின்றது. இந்த விசுவாசத்தில், ஆபிரகாமே நம் அனைவருக்கும் தந்தை. தன் மூதாதையர்களின் நிலத்தை விட்டுவிட்டு, கடவுள் தனக்குக் காட்டவிருக்கும் ஓர் இடத்தை நோக்கி ஆபிரகாம் புறப்பட்டபோது அவர் ஒரு புத்தி பேதலித்தவராக பிறரால் கணிக்கப்பட்டிருக்கலாம். தனக்குத் தெரிந்த ஓர் இடத்தைவிட்டு ஏன் தெரியாத ஓர் இடத்திற்கு ஒருவர் செல்ல வேண்டும்? ஆனால், ஆபிரகாம் துணிந்து இறங்கினார். அது, அவர் கண்ணுக்கு மறைவாய் இருப்பதைக் காண்பதுபோல் இருந்தது. கண்ணுக்கு மறைவாய் இருக்கும் அதுதான், அவரை தன் மகன் ஈசாக்குடன் மலைமேல் ஏற வைத்து, பின்  பலியாக அவர் மகன் கொடுக்கப்படுவதிலிருந்தும் காப்பாற்றியது. இந்த எதிர்நோக்கு அல்லது விசுவாசத்தில்தான், ஆபிரகாம் தனக்குப்பின் வரும் அனைத்து தலைமுறைகளுக்கும் தந்தையாகிறார்.

விசுவாசத்தின் மனிதராக இருந்த மோசே, ஒரு சின்ன சந்தேகம் கூட அவரை வீழ்த்திவிடும் நிலை இருந்தும் இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். அதுமட்டுமல்ல, இறைவனை விசுவசிப்பதில் பலவேளைகளில் தவறிய மக்களுக்காக இறைவனிடம் பரிந்துரைச் செய்தார்.

நம் அன்னையாம் கன்னி மரியாவுக்கு இறைதூதர் வழியாக இயேசுவின் பிறப்பு குறித்த முன்னறிவிப்பு வழங்கப்பட்டபோது, மற்றவர்களைப்போல் இது கடினமானது என ஒதுக்கித் தள்ளாமல், “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக் 1:38) என அன்னை மரியா பதிலளித்தார். கடவுள் மீதான நம்பிக்கையை தன் இதயம் முழுவதும் கொண்டவராக, என்ன ஆபத்து வரும் என்பதும், எந்த திசை நோக்கிய பயணம் தன்னுடையது என்பதும் தெரியாமல் பாதையில் துணிந்து காலடி எடுத்துவைத்தார் அன்னை மரியா.

எதிர்நோக்கு என்னும் நற்பண்பே கிறிஸ்தவனை உருவாக்குகிறது. ஏனெனில், கிறிஸ்தவனாக இருப்பது என்பது முதன்மையாக, அதற்குரிய மதிப்பீடுகளுடன் கூடிய ஒரு கலாச்சாரத்தை ஏற்பது என்பதல்ல, மாறாக, ஒரு பிணைப்பை வரவேற்பதாகும், அதாவது, கடவுளும் நானும், இயேசுவின் முகமும் நானும் என்ற பிணைப்பை வரவேற்பதாகும்.

விசுவாசம் அல்லது எதிர்நோக்கு பற்றிப் பேசும்போது, விவிலியம் கூறும் ஒரு நிகழ்வு என் கண்முன் வருகிறது.  ஒரு நாள் மாலை நேரம் இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்கிறார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் செல்கிறார்கள். அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தது (மாற் 4:35-41). ஆனால் சீடர்களோ, தங்கள் கண்முன்னாலேயே இதற்கான தீர்வு இருப்பதை உணரவில்லை. இயேசு அப்படகிலேயே இருந்தார், அதுவும் அப்புயலின் மத்தியிலும் படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். இறுதியில் சீடர்களோ, “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்புகிறார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தியபின், சீடர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார்.

இங்கு விசுவாசத்தின் எதிரியாக காட்டப்படுவது நுண்ணறிவோ, அல்லது பகுத்தறிவு வாதமோ அல்ல, மாறாக, பயம். ஆகவே, விசுவாசம் என்பது நம் வாழ்வில் வரவேற்கப்பட வேண்டிய முதல் கொடையாக உள்ளது. ஏனெனில், அது தினமும் வரவேற்கப்பட்டு நமக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். இது சிறிய கொடையாகத் தெரியலாம், ஆனால், அவசியமான ஒன்றாக உள்ளது. நாம் திருமுழுக்குத் தொட்டிக்கு கொண்டுவரப்பட்டு, நம் பெற்றோர் நம் பெயரைக் கூறியவுடன்  அருள்பணியாளர் அவர்களை நோக்கி,  “இறைவனின் திருஅவையிடம் நீங்கள் என்ன கேட்கிறீர்கள்” என்ற கேள்வியை முன்வைக்கிறார். அவர்களும் “விசுவாசம், திருமுழுக்கு!” என்று பதிலளிக்கின்றனர்.

தங்களுக்கு வழங்கப்பட்ட விசுவாசம் என்னும் அருள்கொடையை தங்கள் குழந்தைகளுக்கும் கொடையாக கேட்கின்றனர் கிறிஸ்தவப் பெற்றோர். வாழ்வில் எத்தனை சோதனைகள் வந்தாலும் தங்கள் குழந்தைகள் அச்சத்தால் மூழ்கடிக்கப்பட மாட்டார்கள் என்பதை பெற்றோர் உணர்ந்தே உள்ளனர். மேலும், தங்கள் குழந்தை பெற்றோரை இழந்தாலும், வானகத்தந்தை அக்குழந்தையின் பெற்றோராக இருந்து அக்குழந்தையை ஒரு நாளும் கைவிடமாட்டார் என்பது அப்பெற்றோருக்குத் தெரியும். நம் அன்போ நொறுங்கும் தன்மையுடையது, ஆனால் கவுளின் அன்பு மட்டுமே மரணத்தை வெல்லவல்லது.

நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை என தூய பவுல் கூறுவதுபோல், விசுவாசிகளாகிய நாமும் பலவேளைகளில் நமக்கும் விசுவாசம் குறைவுபடுவதை உணர்கிறோம். இயேசு தன் சீடர்களை நோக்கி, குறைந்த விசுவாசம் உள்ளவர்களே என கடிந்ததுபோல், நம்மையும் கடிந்துகொள்கிறார். ஆனால், இந்த விசுவாசம் என்னும் கொடைதான் மகிழ்ச்சியின் கொடை, மற்றும் நம்மை பொறாமைப்பட வைக்கும் ஒரே நற்பண்பு. விசுவாசம் உடையவர்களை ஆட்கொள்ளும் சக்தி நம்மில் அருளைத் தூண்டி, நம் மனங்களை இறைவனின் மறையுண்மை நோக்கித் திறக்கிறது. இயேசு ஒருமுறை, “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” (லூக் 17:6) என்றுரைத்தார். ஆகவே, இயேசுவின் திருத்தூதர்கள் அவரிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” (லூக் 17:5) என்று கேட்டதைப்போல், நாமும் இயேசுவை நோக்கி மறுபடியும் கூறுவோம்.

இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக நாம் செபிக்க மறக்க வேண்டாம் என்பதை மீண்டும் நினைவுறுத்தினார். இன்று உலகில் போரால் பலியாகிவரும் மக்களை நினைவு கூர்வோம். போர் என்பது எப்போதும் தோல்வியே, எப்போதுமே. தொடர்ந்து துன்பங்களை அனுபவித்துவரும் உக்ரைன் நாட்டை நினைவுகூர்வோம். போர் இடம்பெற்றுவரும் இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத்தை நினைவில் கொள்வோம். மியன்மாரின் ரொஹிங்கியா மக்களை நினைத்துப் பார்த்து அமைதிக்காக விண்ணப்பிப்போம். இந்த மக்களுக்கு உண்மை அமைதி வழங்கப்பட வேண்டும் எனவும், உலக அமைதிக்காகவும் இறைவேண்டல் செய்வோம். இன்று ஆயுத தொழிற்சாலைகளில் செய்யப்படும் முதலீடுகளே அதிக வருமானத்தை ஈட்டுகின்றன. இது கொடுமையானது, ஏனெனில் மரணத்தின் வழியாக பணம் ஈட்டப்படுகிறது. நாம் அமைதிக்காக வேண்டுவோம், உலகில் அமைதி நிலவட்டும்.

அமைதிக்கான இந்த விண்ணப்பத்திற்குப்பின், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2024, 09:09

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >