திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை - எதிர்நோக்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உரோம் நகரில் ஓரளவு வெப்பம் இருந்தாலும், திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகத்திற்கு செவிமடுக்க வந்திருந்த கூட்டத்தை கணக்கில் கொண்டு மக்களை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்திலேயே சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். முதலில், திறந்த காரில் வலம்வந்தபடி கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார். தூய பேதுரு பேராலய முகப்பில் போடப்பட்டிருந்த எளிமையான மேடையை அணுகி திருத்தந்தை அமர்ந்ததும், தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் இருந்து ஒரு பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட்டது.
இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். […] முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது (உரோ 8,18.23-24).
நல்லொழுக்கம் மற்றும் தீயொழுக்கம் என்னும் தலைப்பில் தொடர் மறைக்கல்வி உரையினை வழங்கி வரும் திருத்தந்தை அவர்கள், மே மாதம் 8ஆம் தேதி புதன்கிழமையன்று எதிர் நோக்கு என்னும் நற்பண்பு குறித்து தன் கருத்துக்களை திருப்பயணிகளிடம் பகிர்ந்தார்.
அன்பான சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்!
இன்று நாம் நம்பிக்கை என்னும், அதாவது எதிர்நோக்கு என்னும் நற்பண்புப் பற்றி சிந்திப்போம். கத்தோலிக்க திருஅவையின் மறைக்கல்வி இதை இவ்வாறு வரையறுக்கிறது: “நம்பிக்கை என்பது இறையியல் நற்பண்பு ஆகும், இதன் வழியாக நாம் வான்வீட்டையும் முடிவற்ற வாழ்வையும் நமது மகிழ்ச்சியாக்க விரும்புகிறோம். கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து, அதாவது நம்முடைய சொந்த பலத்தின் மீது அல்ல, மாறாக தூய ஆவியாரின் அருள் வழங்கும் உதவியின் மீது நம்பிக்கை வைத்து இதனைப் பெறுகிறோம்(1817). மேலும், இந்த வார்த்தைகள், “எனக்கு என்ன ஆகப்போகிறது? பயணத்தின் நோக்கம் என்ன? உலகத்தின் நிர்ணயிக்கப்பட்ட எதிர்காலம் என்ன?” என்பன போன்ற முழு நிறைவான கேள்விகள் எழும்போது, முதலில் நாம் கூறிய மறைக்கல்வியின் வார்த்தைகள் நம்பிக்கையை ஒரு பதிலாக நம் இதயங்களுக்கு வழங்குகின்றன.
இந்தக் கேள்விகளுக்கு எதிர்மறையான பதில் சோகத்தை வழங்கவல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கைப் பயணத்திற்கு அர்த்தமில்லை என்றால், ஆரம்பத்திலும் முடிவிலும் எதுவும் இல்லை என்றால், நாம் ஏன் முன்னோக்கி நடக்க வேண்டும் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்கிறோம். எனவே இங்கு மனிதனுக்குள் விரக்தி, எல்லாவற்றையும் குறித்த அர்த்தமற்ற ஓர் உணர்வு பிறக்கிறது. மேலும், “நான் நல்லொழுக்கமுள்ளவனாகவும், விவேகமுள்ளவனாகவும், நீதி தவறாதவனாகவும், வலிமையானவனாகவும், மிதமானவனாகவும் இருக்க முயற்சித்தேன். நானும் விசுவாசமுள்ள நபராகவே இருந்திருக்கிறேன், என் போராட்டத்தால் என்ன பயன்?”. என்ற கேள்விகள் பலரில் எழலாம். நம்பிக்கை இல்லாவிட்டால், மற்ற அனைத்து நற்குணங்களும் சிதைந்து சாம்பலாகிவிடும் ஆபத்து உள்ளது. நாளை என்பது குறித்த நம்பிக்கை இல்லை என்றால், உதயம் தரும் அடிவானம் இல்லை என்றால், நற்பண்பு என்பது எல்லாம் ஒரு பயனற்ற, பலனற்ற முயற்சி என்று மட்டுமே முடிவு செய்ய வேண்டியிருக்கும். "எதிர்காலம் ஒரு நேர்மறையான யதார்த்தமாக இருந்தால் மட்டுமே, நிகழ்காலத்தையும் வாழ்வது சாத்தியமாகும்" (ஸ்பெ சால்வி திருமடலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்).
கிறிஸ்தவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பது அவர்களின் சொந்த தகுதியால் அல்ல. கிறிஸ்தவர்கள் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குகின்றார்கள் என்றால், கிறிஸ்து இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து தூய ஆவியை நமக்குக் கொடுத்ததால்தான். திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் தனது Spe salvi திருமடலில் குறிப்பிடுவது போல், "நம்முடைய நிகழ்காலத்தை நாம் எதிர்கொள்ளக்கூடிய நம்பிக்கை, நம்பத்தகுந்த நம்பிக்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற பொருளில் மீட்பு நமக்கு வழங்கப்படுகிறது". இந்த அர்த்தத்தில்தான், மீண்டும் ஒருமுறை, நம்பிக்கை ஓர் இறையியல் நற்பண்பு என்று சொல்கிறோம். அது நம்மிடமிருந்து வெளிப்படுவதில்லை, அது நம்மை நாமே நம்பிக் கொள்ள விரும்பும் ஒரு பிடிவாதம் அல்ல, மாறாக, அது கடவுளிடமிருந்து நேரடியாக வரும் கொடை.
நம்பிக்கையில் முற்றிலுமாக புதுப்பிறப்பு எடுக்காத, சந்தேகமுடைய பல கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்தவ அனுபவத்தின் புதிய வாதமாக தூய பவுல் அவர்கள் முன் வைப்பது என்னவென்றால்: “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள். அப்படியானால், கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு இறந்தவர்களும் அழிவுக்குள்ளாவார்கள். கிறிஸ்துவிடம் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கு இவ்வுலக வாழ்வை மட்டும் சார்ந்திருந்தால் எல்லா மக்களையும்விட இரங்குதற்கு உரியவராய் இருப்போம்" (1 கொரி 15:17-19) என்பதாகும். இதன் வழி அவர் கூறவருவது என்னவெனில், நீங்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்பினால், தோல்வியும் மரணமும் என்றென்றும் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்துகொள்வீர்கள் என்பதையொத்ததாக இருக்கிறது. ஆனால், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நீங்கள் நம்பவில்லை என்றால், திருத்தூதர்களின் போதனைகள் உட்பட அனைத்தும் வெறுமையானதாக,, காலியானதாக மாறிவிடும்.
நம்பிக்கை அல்லது எதிர்நோக்கு என்ற நற்பண்புக்கு எதிராக நாம் அடிக்கடி பாவம் செய்கிறோம். ஆம், நமது மோசமான ஏக்க நினைவில், துக்க மனச்சோர்வில், கடந்த கால மகிழ்ச்சி என்றென்றும் புதைக்கப்பட்டதாக நாம் எண்ணும்போது இந்த பாவத்தைச் செய்கிறோம். கடவுள் இரக்கமுள்ளவர், நம் இதயங்களை விட பெரியவர் என்பதை மறந்து, நம் பாவங்களுக்காக நாம் விரக்தியடையும்போது, நம்பிக்கைக்கு எதிராகப் பாவம் செய்கிறோம். நமக்குள் இருக்கும் இலையுதிர் காலம் வசந்தத்தை நம்மிடமிருந்து அகற்றும்போது, அதாவது, கடவுளின் அன்பு, என்றும் நிலைத்திருக்கும் ஒரு முடிவற்ற நெருப்பாக நோக்கப்பட்டாமல் இருந்து, நம் வாழ்நாள் முழுவதற்குமான முடிவை எடுக்கவல்ல மனதைரியத்தை கொள்ளாதிருக்கும்போதும் நம்பிக்கை என்னும் எதிர்நோக்கிற்கு எதிராகப் பாவம் செய்கிறோம்.
இந்த கிறிஸ்தவ நற்பண்பு இன்று உலகிற்கு மிகவும் தேவை! இதற்கு பொறுமை தேவை என்பது போல, நம்பிக்கையுடன் நெருங்கிய தொடர்பில் நடைபோடும் நற்பண்பு இது. பொறுமையுடன் செயல்படும் மனிதர்கள் நன்மைத்தனத்தின் நெசவாளர்கள். அவர்கள் பிடிவாதமாக அமைதியை விரும்புகிறவர்கள். அவர்களில் சிலர் அவசரப்பட்டு, எல்லாவற்றையும் நோக்கித் திரும்பினாலும், நேரடியாகச் சொல்வதென்றால், பொறுமை என்பது காத்திருக்கும் திறன் கொண்டது. நம்மைச் சுற்றி பலர் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருந்தாலும், நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு பொறுமையாக இருப்பவர்கள் இருண்ட இரவுகளைக் கடக்க இயலும் சக்தியைப் பெற்றிருப்பர்.
நம்பிக்கை, இதயத்தில் இளமையாக இருப்பவர்களின் நற்பண்பு; இங்கே வயது கணக்கிடப்படுவதில்லை. ஏனெனில், எதிர்காலத்தை நோக்கிய ஒளி நிறைந்த கண்களுடன், தொடர்ந்து உழைத்துவரும் முதியவர்களும் இருக்கிறார்கள். நற்செய்தியின் இரண்டு பெரிய முதியவர்களான சிமியோன் மற்றும் அன்னாவைப் பற்றி சிந்தியுங்கள். அவர்கள் காத்திருந்ததில் சோர்வடையவில்லை, அவர்கள் இயேசுவின் பெற்றோரால் கோவிலுக்குக் கொணரப்பட்ட குழந்தையில் மெசியாவைக் கண்டுகொண்டு, தங்கள் முதுமைக்காலத்தில் தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தனர். நமக்கும் இப்படியொரு பாக்கியம் கிடைத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? நீண்ட புனிதப் பயணத்திற்குப் பிறகு, நம் சேணப் பைகள் மற்றும் தடிகளை கீழே வைக்கும்போது,நம் இதயம் ஒருபோதும் உணராத மகிழ்ச்சியால் நிரம்பியிருந்தால், நாமும் கூக்குரலிட்டு, “ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில், மக்கள் அனைவரும் காணுமாறு, நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” (லூக்கா 2:29-32) என உரைப்போம்.
அன்பு சகோதரர் சகோதரிகளே, நாம் முன்னோக்கிச் சென்று எதிர்நோக்கை, பொறுமையுடன்கூடிய எதிர்நோக்கு என்னும் அருளை வழங்குமாறு இறைவனிடம் வேண்டுவோம். எப்போதும் இறைவனுடனான சந்திப்பை நோக்கி நம் பார்வையைத் திருப்புவோம், அப்போது, கிறிஸ்து நம் அருகில் இருக்கும்போது மரணம் தன் வெற்றியைக் கொள்ள முடியாது. பொறுமையுடன் இணைந்த எதிர்நோக்கு என்னும் நற்பண்பை வழங்குமாறு இறைவனை நோக்கி இறைஞ்சுவோம்.
இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்