தேடுதல்

புதன் மறைப்போதகம் - தூய ஆவியார் தரும் சுதந்திரம்

நன்மையையோ தீமையையோ செய்வதற்கான சுதந்திரம் அல்ல, மாறாக, நன்மையைச் செய்வதற்கும் அதையே சுதந்திரமாகச் செய்வதற்குமானது. கட்டாயத்தினால் அல்ல, மாறாக, அதன் மீதான ஆர்வத்தினால் ஆற்றுவது.
திருத்தந்தையின் மறைபோதகம் - 050623

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உரோம் நகரில் வெப்பத்தையும் தாண்டி பெருமெண்ணிக்கையில் மக்கள் ஜூன் 6ஆம் தேதி, புதன் மறைபோதகத்தில் கலந்துகொள்ள வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருக்க, தூய ஆவியார் குறித்த மறைக்கல்வி போதனையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” (யோவா 3:6-8) என்ற யோவான் நற்செய்தியில் இயேசு நிக்கதேமுடன் உரையாடிய பகுதி பல மொழிகளில் வாசிக்கப்பட, திருத்தந்தையின் உரை துவங்கியது.

அன்பு சகோதரர்களே சகோதரிகளே, இன்று நான், விவிலியத்தில் தூய ஆவியார் எப்பெயரால் அழைக்கப்படுகிறாரோ அது குறித்து சிந்திக்க விரும்புகிறேன். ஒருவரைப் பற்றி நாம் முதலில் புரிந்து கொள்வது அவரின் பெயரைப் பற்றி. பெயரை வைத்துத்தான் அவரை அழைக்கிறோம், வேறுபடுத்திக் காண்கிறோம், மற்றும் நினைவில் வைத்திருக்கிறோம். தூய மூவொரு கடவுளின் மூன்றாமவருக்கும் ஒரு பெயர் உண்டு, அதுதான் தூய ஆவியார். ஆவியார் என்பது இலத்தீன். மொழியின் வடிவாக்கம். ஆவியாரின் வெளிப்பாட்டை முதலில் அனுபவித்தவர்களான இறைவாக்கினர்கள், திருப்பாடல் ஆசிரியர்கள், அன்னை மரியா, இயேசு மற்றும் திருத்தூதர்கள் அவரை ருவாஹ் (Ruach) என்ற பெயரால், அதாவது உயிர் மூச்சு, காற்று, காற்றால் ஊதுதல் என  அழைத்தனர்.

விவிலியத்தில் இந்த பெயர் மிக முக்கியமானதாக இருந்தது, ஏனெனில், இந்த பெயர் அந்தச் செயலை ஆற்றும் நபரோடு தொடர்புபடுத்தப்பட்டது. கடவுளின் பெயருக்கு புனிதத்தன்மையூட்டுதல் என்பது,  அவரையே உயர் நிலையில் வைத்துப் போற்றுவதாகும். பெயர் என்பது மரபு முறை சார்ந்த வழக்கமான ஒன்றுமட்டுமல்ல, அது அந்த நபரைப் பற்றியும், அவரின் தோற்றம் மற்றும் பணி குறித்து எடுத்துரைப்பதாகும். ருவாஹ் என்ற பெயரும் இதில் அடங்கும். இது தூய ஆவியாரின் அடிப்படையான வெளிப்பாட்டையும் அவரின் செயல்பாட்டையும் உள்ளடக்குகிறது.

காற்றையும் அதன் வெளிப்பாடுகளையும் கூர்ந்து கவனித்த விவிலிய ஆசிரியர்கள், கடவுளால் வழிநடத்தப்பட்டு,  ஒரு வேறுவித தன்மையுடைய காற்று குறித்து அறிந்துகொள்ள உதவப்பட்டனர். கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் (தி.ப. 2:2) வானத்திலிருந்து உண்டாகி திருத்தூதர்கள் மேல் இறங்கிவந்தது குறித்து திருத்தூதர் பணி நூலில் நாம் வாசிக்கிறோம். பெந்தகோஸ்தே நாளில் திருத்தூதர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல, மாறாக அங்குள்ள நிகழ்வுகளில் தன் இருப்பை தூய ஆவியார் வெளிப்படுத்தியது.  

அப்படியெனில், ருவாஹ் என்ற பெயர் தூய ஆவியார் குறித்து நமக்குச் சொல்வதென்ன?.  காற்று என்ற தோற்றுரு நமக்கு முதலில் அந்த தெய்வீக ஆவியாரின் வல்லமையை வெளிப்படுத்துகின்றது. “ஆவியும் வல்லமையும்” அல்லது “ஆவியாரின் வல்லமை” என்பது விவிலியம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒரு வார்த்தை. காற்று என்பது திணறடிக்கின்ற, மூழ்கடிக்கின்ற மற்றும் வெல்லமுடியாத வல்லமையாக உள்ளது. அது பெருங்கடல்களையும் அசைக்கவல்லது. விவிலியத்தின் நிதர்சனமான நிலைகளின் முழு அர்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டுமானால், பழைய ஏற்பாட்டு நூலையும் தாண்டி இயேசுவிடமும் வரவேண்டும். காற்றின் வல்லமையோடு இணைத்து அதன் சுதந்திரம் குறித்தும் எடுத்துரைக்கிறார் இயேசு.

தன்னை இரவில் சந்திக்கவந்த நிக்கதேமிடம் இயேசு, “காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” (யோவா 3:8) என்று கூறுவதைப் பார்க்கிறோம். காற்று மட்டுமே கடிவாளமிட்டு கட்டுப்படுத்த முடியாதது, குப்பிக்குள் அடைக்கமுடியாதது அல்லது பெட்டிக்குள் சிறைப்படுத்த முடியாதது. கருத்துக்கள், விளக்கங்கள், விளக்கக் கட்டுரைகள், ஒப்பந்த  இணக்க உரைகள் என பல்வேறு வழிகளில் தூய ஆவியாரை ஒரு காட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து புரிந்துகொள்ள முயல்வது என்பது அவர் குறித்த அறிவை இழப்பதற்கும், இல்லாமல் ஆக்குவதற்கும், மனித ஆவியையொத்த எளிமையானதாக மாற்றவும் இட்டுச் சென்றுவிடும். இதையொத்த ஒரு மனத் தடுமாற்றம் திருஅவைத் துறைகளிலும் உள்ளது, அதாவது திருஅவைக் கோட்பாடுகளிலும், நிறுவனங்களிலும், விளக்கங்களிலும் தூய ஆவியாரை எழுத்துக்கள் வழி சிறைப்படுத்தி வைக்கும் நிலை. தூய ஆவியார் நிறுவனங்களை உருவாக்கி உயிரூட்டுகிறார், ஆனால், அவரோ நிறுவனமாக்கப்பட முடியாதவர். காற்று தான் விரும்பிய திசையில் வீசுகிறது, அதுபோல் தூய ஆவியாரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் கொடைகளைப் பகிர்ந்தளிக்கிறார் (1 கொரி 12:11). புனித பவுலும் “ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு” (2 கொரி 3:17) என்ற வார்த்தைகள் வழி கிறிஸ்தவ நடவடிக்கையின் அடிப்படைச் சட்டத்தைக் காண்பிக்கிறார். இது நாம் சாதரணமாகப் புரிந்துகொள்வதைவிட வித்தியாசமான ஒரு சிறப்பு விடுதலையைக் குறித்து நிற்கிறது. இது தான் விரும்பியதை ஒருவர் செய்யும் சுதந்திரம் அல்ல, மாறாக இறைவன் விரும்பியதை சுதந்திரமாகச் செய்வதற்கான சுதந்திரம். நன்மையையோ தீமையையோ செய்வதற்கான சுதந்திரம் அல்ல, மாறாக, நன்மையைச் செய்வதற்கும் அதையே சுதந்திரமாகச் செய்வதற்குமானது, அதாவது, கட்டாயத்தினால் அல்ல, மாறாக, அதன் மீதான ஆர்வத்தினால் ஆற்றுவது. வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், இது குழந்தைகளுக்குரிய சுதந்திர உணர்வுடனேயே அன்றி, அடிமைகளுக்குரிய சுதந்திரத்துடன் அல்ல.

இந்த சுதந்திரத்தை தவறாக புரிந்து கொள்ளல் மற்றும் மீறுதல் குறித்து தெளிவாக உணர்ந்திருந்த புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில், “ நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்” (கலா 5:13) என்று கூறுகிறார்.  உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் எப்போது மாறும் என்பது நமக்குத் தெரிந்ததுதான். புனித பவுலும் அது குறித்துப் பேசும்போது,  “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை” (Gal 5:19-21) என்று பட்டியலிடுகிறார். அதேவேளை, ஏழைகளை செல்வந்தர்களும், பலவீனர்களை பலமுடையோரும், இயற்கையை அனைவரும் தண்டனை பயமின்றி சுரண்டுவதை அனுமதிக்கும் சுதந்திரத்தையும் பார்க்கிறோம்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, தன்னலப் போக்கிற்கு சுதந்திரம் வழங்குவதற்கு எதிரான தூய ஆவியாரின் சுதந்திரத்தை நாம் எங்கிருந்துப் பெறுகிறோம்? இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கிக் கூறிய வார்த்தைகளில் அதற்கு விடை கிடைக்கிறது, அதாவது, “மனுமகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள்” (John 8:36) என்றார் இயேசு. தூய ஆவியாரின் வழியாக நம்மை சுதந்திர மனிதர்களாக மாற்றுமாறு இயேசுவை நோக்கி மன்றாடுவோம். அன்பிலும் மகிழ்விலும் பணியாற்ற சுதந்திரம் பெறுவோம்.

இவ்வாறு,  தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் திரு இதயம் முதன்முதலாக புனித மர்க்ரெட் மேரி அலகாக் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதன் 350ஆம் ஆண்டு நிறைவை நாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி சிறப்பித்ததை நினைவுகூரும் விதமாக ஏடு ஒன்றை தயாரித்து வருவதாகவும், அது அடுத்த செப்டம்பரில் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார். அதன் பின் அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2024, 09:28

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >