தேடுதல்

மறைக்கல்வியுரை - மணமகளுக்கு செபிக்கக் கற்பிக்கும் தூய ஆவி

திருஅவையில் ஏற்கனவே ஜெபத்தின் ஒத்திசைவு இன்னிசை உள்ளது, அதன் ஆசிரியர் தூய ஆவியார், அந்த ஒத்திசையின் பெயரே திருப்பாடல்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜூன் 19 புதன்கிழமையன்று வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகத்தைக் கேட்க திருப்பயணிகள் குழுமியிருக்க, உள்ளூர் நேரம் காலை 8 மணிக்கு, அதாவது இந்திய நேரம் காலை 11.30 மணிக்கு கீழை வழிபாட்டுமுறை திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் கிளவுதியோ குகரோத்தி (Claudio Gugerotti) அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏறக்குறைய 8.50 மணிக்கு திறந்த காரில் மூன்று சிறார்கள் உடனிருக்க திருப்பயணிகளிடையே ஒரு வலம் வந்தார். ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பில், ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கி வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் நான்காவது பகுதியாக இவ்வாரம் புதன்கிழமையன்று, ‘தூய ஆவியார் மணமகளுக்கு செபிக்கக் கற்பிக்கிறார். விவிலியத்தில் ஜெபத்தின் ஒத்திசையாக விளங்குவது திருப்பாடல்கள்’ என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். முதலில், புனித பவுல் கொலோசியருக்கு எழுதிய திருமடலில் இருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி உங்களுக்குள் நிறைவாகக் குடிகொள்வதாக! முழு ஞானத்தோடு ஒருவருக்கு ஒருவர் கற்பித்து அறிவுரை கூறுங்கள். திருப்பாடல்களையும் புகழ்ப்பாக்களையும் ஆவிக்குரிய பாடல்களையும் நன்றியோடு உளமாரப் பாடிக் கடவுளைப் போற்றுங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். (கொலோ 3,16-17)

என்ற பகுதி வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் இடம்பெறத் துவங்கின.

அன்பு சகோதரர் சகோதரிகளே, காலை வணக்கம்.

வரும் யூபிலி ஆண்டுக்கு தயாரிக்கும்விதமாக, நான் 2024ஆம் ஆண்டை பெரும் ஒத்திசையான இறைவேண்டல் பக்தி முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கவேண்டும் என அழைப்புவிடுத்தேன். இன்றைய மறைக்கல்வி போதனையில் நாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவது என்னவெனில், திருஅவையில் ஏற்கனவே ஜெபத்தின் ஒத்திசைவு இன்னிசை உள்ளது எனவும், அதன் ஆசிரியர் தூய ஆவியார் எனவும், அந்த ஒத்திசையின் பெயரே திருப்பாடல்கள் ஆகும் என்பதாகும். சிம்பொனி என்னும் ஒத்திசையில் பல்வேறு அசைவுகள் இருப்பதுபோல், புகழ்பாடல், நன்றியுரைத்தல், விண்ணப்பம், புலம்பல், எடுத்துரைத்தல், அறிவுப்பண்புடைய தியானம், மற்றும் பல என்னும் ஜெபத்தின் பல்வேறு வகைகள் உள்ளன. இவை தனிப்பட்ட செபங்களாகவும், இறைமக்களின் ஒன்றிணைந்த செபமாகவும் உள்ளன. இவை மணமகளாம் திருஅவையின் உதடுகளில் தூய ஆவியார் அமர வைத்த பாடல்களாகும். நான் ஏற்கனவே கடந்த வாரம் கூறியது போல், திருப்பாடல்கள் உட்பட,   விவிலியத்தின் அனைத்து நூல்களும் தூய ஆவியாரால் தூண்டுதல் பெற்றவையே. இதில் திருப்பாடல்கள் நூல் முழுவதும் ஒரு கவித்துவமான தூண்டுதலைக் கொண்டுள்ளது. திருப்பாடல்களுக்கு புதிய ஏற்பாட்டில் ஒரு தனித்துவமான சிறப்பிடம் உண்டு. அன்றும் சரி இன்றும் சரி, புதிய ஏற்பாட்டின் சில பதிப்புக்களில் திருப்பாடல்களும் இணைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அனைத்துத் திருப்பாடல்களும் இல்லாமல் இருந்தாலும், ஒவ்வொரு திருப்பாடலின் அனைத்துப் பகுதிகளும் இல்லாமல் இருந்தாலும், கிறிஸ்தவர்களால் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்பட்டு தங்களுடைய உடமையாக அவை ஆக்கப்படமுடியும், அதேவேளை, அதிலும் சிறிய அளவு, நவீன மனிதராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

சிலவேளைகளில் திருப்பாடல்கள் ஒரு வரலாற்றுச் சூழலையும், மத மனப்பான்மையையும் கொண்டுள்ளன, மேலும் அவை தற்காலத்தில் நமக்குரியவைகளாகத் தெரிவதில்லை. ஆனால், இதை வைத்து நாம் அவை தூய ஆவியால் தூண்டுதல் பெற்றவை அல்ல என எண்ணிவிடக் கூடாது.  சில கூறுகள் ஒரு குறிப்பிட்ட காலத்தோடும், தற்காலிக வெளிப்பாட்டோடும் தொடர்புடையவை, அதாவது, பண்டைய கால பெரும்பகுதி சட்டங்களைப்போல். திருப்பாடல்கள் குறித்து நாம் அதிகக் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் என்னவெனில், இயேசுவுக்கும், அன்னை மரியாவுக்கும், திருத்தூதர்களுக்கும், நமக்கு முந்தைய கிறிஸ்தவ தலைமுறையினருக்கும் செபமாக இருந்தவை இவை. நாம் திருப்பாடல்கள் உதவியுடன் செபமாக ஒப்புவிக்கும்போது, இறைவனும் புனிதர்கள் குழுமம் என்ற மாபெரும் இன்னிசைக்கு செவிமடுக்கிறார். புனித பவுல் எபிரேயர்களுக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல், கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ‘என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’ (எபி 10:7; திபா 40:7,8), என்ற திருப்பாடல் வார்த்தைகளை தன் உள்ளத்தில் வைத்திருந்தார். புனித லூக்கா நற்செய்தியின்படி, இயேசு இவ்வுலகை விட்டுச்செல்லும்போது இன்னொரு திருப்பாடல் வார்த்தைகளை தன் உதடுகளால் உச்சரிக்கிறார். அதாவது, “தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” (லூக் 23:46, திபா 31:5) என்பதை. புதிய ஏற்பாட்டில் திருப்பாடலின் பயன்பாடு, பின்னர் திருஅவைத்தந்தையர்களால் திருஅவை முழுவதும் பயன்படுத்தப்பட்டு, திருப்பலி, மற்றும் திருப்புகழ் மாலையின் முக்கியக் கூறாக மாறியது. திருவிவிலியம் முழுவதும் இறைவனின் நன்மைத்தனத்தை சுவாசிக்கிறது என எழுதும் புனித அம்புறோஸ் அவர்கள், ஆனால், இது சிறப்பான விதத்தில் இனிமையான திருப்பாடல் நூலில் காணக்கிடக்கிறது என மேலும் கூறுகிறார்.

அதேவேளை, நாம் பழங்காலப் பாரம்பரியத்தில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்க முடியாது, திருப்பாடல்களை நம் செபமாக்குவதும் அத்தியாவசியம். ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தால், நாம் திருப்பாடலின் ஆசிரியர்களாக மாறி அவைகளை நமதாக்கி, அவைகளின் உதவியுடன் இறைவேண்டல் செய்ய வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. திருப்பாடலோ, அல்லது அவைகளின் சில வரிகளோ நம் இதயத்தை தொடுமானால், அவைகளை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி அதன் துணையுடன் பகல் வேளையில் செபிப்பது நல்லது. திருப்பாடல் என்பவை எல்லா காலத்திற்கும் உரிய செபம். எந்த மனநிலையிலும் திருப்பாடல்களில் வார்த்தைகளைத்தேடி நாம் அவைகளை செபமாக மாற்றமுடியும். ஏனைய இறைவேண்டல்கள்போல் திருப்பாடல் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கப்படுவதால் அதன் தீவிரத்தன்மையை சிறிதளவு கூட இழப்பதில்லை, மாறாக அதன் பயனுறு திறன் அதிகரிக்கவேச் செய்கிறது.  ஏனெனில், அவை ஒவ்வொரு முறை விசுவாசத்துடன் வாசிக்கப்படும்போதும், கடவுளால் தூண்டப்பட்டு, கடவுளையே சுவாசிப்பவைகளாக உள்ளன.

நம் தீச்செயல்கள் குறித்தோ, நாம் ஆற்றிய குற்றங்கள் குறித்தோ மனம் வருந்தும்போது தாவீதோடு இணந்து நாமும், “கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்” (திபா 51:1) என இறைஞ்சுவோம். இறைவனுடன் கூடிய உறுதியான தனிப்பட்ட அன்பு பிணைப்பை வெளிப்படுத்த விரும்பினால், “கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது (திபா 63:1) என்ற திருப்பாடல் வரிகளை உரைப்போம். இந்த வார்த்தைகள் ஞாயிறு மற்றும் பெருவிழா நாட்களில் திருப்புகழ் மாலையில் இணைக்கப்பட்டிருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் இல்லை. அச்சமும் மிகுந்த வேதனையும் நம்மை ஆட்கொள்ளும்போது, “ஆண்டவரே என் ஆயர்....... சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” (திபா 23:1,4) என்ற திருப்பாடல் வார்த்தைகள் நம் பாதுகாப்பிற்கு வரும். எனக்கு அதைத்தாரும், இதைத்தாரும் என்ற வெறும் விண்ணப்பங்களாக செபத்தை மாற்றாமலிருக்க திருப்பாடல்கள் நமக்கு உதவுகின்றன. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும், என்ற விண்ணப்பத்தை நாம் இயேசு கற்பித்த செபத்தில் உரைப்பதற்கு முன்னால், உம்முடைய திருப்பெயர் தூயதென போற்றப்படுக; உமது அரசு வருக, உமது திருவுளம் நிறைவேறுக என உரைக்கிறோம்.

நமக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்கும் ஒரு செபத்திற்கு நம்மைத் திறக்க திருப்பாடல்கள் உதவுகின்றன. இறைவனுக்கு புகழுரைக்கும், ஆசீரை வேண்டும், நன்றியுரைக்கும் செபத்தை அவை வழங்குகின்றன. அதேவேளை, நம் இறைப்புகழில் அனைத்துப் படைப்புகளுக்காக குரல் கொடுக்கவும் உதவுகின்றன.

சகோதரர்களே, சகோதரிகளே, மணமகளாம் திருஅவை தன் மணமகனை நோக்கி செபிக்கும் வார்த்தைகளை வழங்கிய தூய ஆவியார், அவ்வார்த்தைகள் மீண்டும் திருஅவையில் ஒலிக்க நமக்கு உதவுவதுடன், யூபிலி ஆண்டிற்கான தயாரிப்பான இவ்வாண்டை ஒன்றிணைந்த செப இன்னிசையாக மாற்றுவாராக.

இவ்வாறு, தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புகலிடம் தேடுவோர் உலக தினம் ஜூன் 20ஆம் தேதி, அதாவது வியாழனன்று உலகில் சிறப்பிக்கப்படுவதைப் பற்றி எடுத்துரைத்தார். ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படும் இந்நாள், அமைதியையும் பாதுகாப்பையும் வேண்டி தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களைக் குறித்து நம் அக்கறையுடன் கூடிய சகோதரத்துவ பார்வையை திருப்ப உதவட்டும். நம் கதவுகளைத் தட்டுவோரை வரவேற்கவும், அவர்களை முன்னேற்றவும், உடன் செல்லவும், சமுதாயத்தில் ஒன்றிணைக்கவும் நாம் விண்ணப்பிக்கப்படுகிறோம். புகலிடம் தேடுவோரின்  மனிதாபிமான நிலைகள் மேம்படுத்தப்படவும், அவர்கள் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படவும் நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் ஆற்றவேண்டும் என வேண்டுகிறேன். இவ்வாறு புகலிடம் தேடுவோருக்கான தன் விண்ணப்பதை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2024, 12:13

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >