தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை – இயேசுவின் திருமுழுக்கில் தூயஆவியார்

திருமுழுக்கின்போது இயேசு பெற்ற அருள்பொழிவு அவரது பணிக்கான தூயஆவியின் முழுமையானக் கொடையாகக் கருதப்படுகின்ற்து. ஒரு தலைவராக தூய ஆவியைபெற்ற இயேசு தனது உடலாகிய திருஅவைக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஆவியின் ஆற்றலை வழங்குகின்றார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆகஸ்ட் 21 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’  என்ற தொடர் மறைக்கல்வி உரையின் ஆறாம் பகுதியாக “இயேசுவின் திருமுழுக்கில் தூயஆவியார்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள், புதிதாக திருமணமானவர்கள் என அனைவரும் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருக்க அரங்கத்தை வந்தடைந்தார் திருத்தந்தை. அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களது மகிழ்வைத் தெரிவிக்க சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கி வைத்தார் திருத்தந்தை.

அதன்பின் அரங்கத்தில் கூடியிருந்த, புதிதாக திருமணமானவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து வியந்த திருத்தந்தை அவர்கள், அனைவரையும் கரமசைத்து வாழ்த்தி அமர்ந்தார். அதனைத்தொடர்ந்து திருத்தூதர் பணிகள் நூலிருந்து கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுருவின் உரை என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருத்தூதர் பணிகள் 10: 34,37,38

அப்போது பேதுரு பேசத் தொடங்கி, திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். என்றார்

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஆண்டவரின் ஆவி என் மேலே - இயேசுவின் திருமுழுக்கில் தூயஆவியார்” என்ற தலைப்பின் கீழ் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

இயேசு யோர்தானில் திருமுழுக்கு பெற்றபோது இயேசுவின் மேல் வரும் தூயஆவியார் அவரிடமிருந்து அவரது உடலாகிய திருஅவைக்குள் பரவுவதைப் பற்றி இன்று நாம் சிந்திக்க இருக்கின்றோம். மாற்கு நற்செய்தியில் இயேசுவின் திருமுழுக்கு பற்றிய காட்சி பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது, “அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். 10அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. (மாற்கு 1:9-11).

யோர்தான் நதிக்கரையில் தமத்திரித்துவம் முழுமையும் ஒன்று சேர்ந்தது. விண்ணகத்தந்தை இவரே என்பார்ந்த மகன் என்ற தனது குரலின் வழியாக தன்னை அடையாளப்படுத்துகின்றார்.  தூய ஆவியார் புறா வடிவில் இயேசு மீது இறங்குகின்றார்.  விண்ணகத்தந்தை  தான் அன்பு செய்யும் ஒரே மகனாகிய இயேசுவை அறிவிக்கும் இந்நிகழ்வானது வெளிப்பாடு மற்றும் மீட்பு வரலாற்றின் மிக முக்கியமான அடிப்படையானத் தருணமாகத் திகழ்கின்றது. இந்நிகழ்வை மீண்டும் மீண்டும் வாசிக்க நம்மைத் தூண்டுகின்றது.

இயேசுவின் திருமுழுக்கின்போது நடந்தது என்ன? எல்லா நற்செய்தியாளர்களும் அதை எப்படி விவரிக்கிறார்கள்? இதற்கான பதிலை யோர்தான் நிகழ்வைப் பற்றிய தெளிவான குறிப்பை சற்று நேரம் கழித்து தொழுகைக்கூடத்தில் இயேசு கூறும் வார்த்தைகளில் நாம் காணலாம். “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்” (லூக்:4:18) என்ற இறைவார்த்தையின் வழியாக இயேசு பதிலளிக்கின்றார்.

யோர்தானில் தந்தைக் கடவுள், இயேசுவை தூய ஆவியால் அருள்பொழிவ் செய்தார், அதாவது இயேசுவை அரசராகவும், இறைவாக்கினராகவும், குருவாகவும் அருள்பொழிவு செய்கின்றார். பழைய ஏற்பாட்டில் எண்ணெய் கொண்டு அரசர்கள், இறைவாக்கினர்கள், குருக்கள் அருள்பொழிவு செய்யப்படுவார்கள். கிறிஸ்துவின் வாழ்வில், உடலில் பூசப்படும் எண்ணெய்க்குப் பதிலாக ஆன்மிக எண்ணெயாகிய தூயஆவியின் ஆற்றல் பொழியப்படுகின்றது. இதனால் அடையாளப்பொருள் எதார்த்தமாக மாறுகின்றது. இயேசு மனிதராக உருவாக ஆரம்பித்ததிலிருந்து தூயஆவியாரால் முழுவதுமாக நிரப்பப்பட்டார். இது அவர்மீது இறைத்தந்தை கொண்டிருந்த ஒரு தனிப்பட்ட இரக்கமாக வெளியிடப்பட முடியாத இரக்கமாக இருந்தது. ஆனால் திருமுழுக்கின்போது இயேசு தான் பெற்ற இந்த அருள்பொழிவை அவரது பணிக்கான தூயஆவியின் முழுமையானக் கொடையாகப் பெறுகிறார். ஒரு தலைவராக தூயஆவியைப் பெற்ற இயேசு தனது உடலாகிய திருஅவைக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அந்த ஆவியின் ஆற்றலை வழங்குகின்றார். இதனால் தான் திருஅவை, புதியஅரசாக, புதிய இறைவாக்காக, புதிய குருத்துவமாக மாறுகின்றது. எபிரேய வார்த்தையான “மெசியா” மற்றும் அதற்குரிய கிரேக்க வார்த்தையான “கிறிஸ்தோஸ், கிறிஸ்து” ஆகிய இரண்டும் அருள்பொழிவு பெற்ற இயேசுவையேக் குறிப்பிடுகின்றன. மகிழ்ச்சி மற்றும் தூயஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் இயேசு. "கிறிஸ்தவர்கள்" என்ற நமது பெயரே "கிறிஸ்துவைப் பின்பற்றி அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள்" என்ற நேரடி அர்த்தத்தில் முற்காலத் தந்தையர்களால் விளக்கப்படுகின்றது.

திருவிவிலியத்தில் உள்ள திருப்பாடல் 133ஆனது ஆரோனின் தலையில் ஊற்றப்பட்ட நறுமணத்தைலம் பற்றி பேசுகிறது (திபா.133:2). மிகவும் கவித்துவமான இந்த வரிகள் சகோதரர்களாக மக்கள் அனைவரும் கிறிஸ்துவிலும் திருஅவையிலும் ஆன்மிக மற்றும் எதார்த்த உலகிலும் ஒன்றாக இணைந்து வாழ்வதன் மகிழ்ச்சியை விவரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. கிறிஸ்துவே நமது தலைவர், நமது தலையாய குரு. தூய ஆவி என்பது நறுமணத்தைலம். கிறிஸ்துவின் உடலாகிய திருஅவையில் அது பரவுகிறது.

திருவிவிலியத்தில் தூயஆவியார்  ருவா என்நும் மூலச்சொல்லிலிருந்து உருவான காற்றினால் உருவகப்படுத்தப்படுகின்றார். ஆனால் இத்தூய ஆவி இப்போது ஏன் எண்ணெயால் அடையாளப்படுத்தப்படுகின்றார். இதிலிருந்து என்ன நடைமுறை போதனையை நாம் பெறலாம் என்பதைப் பற்றியும் சிந்திப்போம். புனித வியாழன் திருப்பலியில், "கிறிஸ்மா" என்று அழைக்கப்படும் எண்ணெயை அர்ச்சிக்கும் ஆயர் அவர்கள் திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெறுபவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  "இந்த அருள்பொழிவானது அவர்களை ஊடுருவி புனிதப்படுத்தட்டும், அதனால், அவர்களின் ஜென்ம பாவத்திலிருந்து விடுதலை பெறட்டும். திருஅவையின் மகிமைக்காக தங்களது நேரத்தை அர்ப்பணித்து புனித வாழ்வின் நறுமணத்தைப் பரப்பட்டும் என்று கூறுகின்றார்.

கொரிந்திய மக்களுக்கு எழுதும் புனித பவுலும், “மீட்புப் பெறுவோரிடையேயும் அழிவுறுவோரிடையேயும் நாங்கள் கடவுள்பால் எழும் கிறிஸ்துவின் நறுமணமாயிருக்கிறோம்” என்று கூறுகின்றார். (2 கொரி. 2:15). அருள்பொழிவு நம்மை நறுமணம் கமழச்செய்யும். மகிழ்வோடு வாழும் ஒரு மனிதரின் அருள்பொழிவானது திருஅவையை, நாம் வாழ்கின்ற சமூகத்தை, குடும்பத்தை ஆன்மிக நறுமணம் கமழச்செய்யும்.  

சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் இத்தகைய நறுமணத்தைப் பரப்புவதில்லை, மாறாக தங்கள் சொந்த பாவத்தின் துர்நாற்றத்தை பரப்புகிறார்கள் என்பதை நாம் அறிவோம். நமது பாவம் இயேசுவிடமிருந்து நம்மை விலக்குகின்றது நமது பாவம் துர்நாற்றம் வீசும் எண்ணெயாக மாறுகின்றது. அலகை நம்முள் குடியேறுகின்றது. இதனை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. எவ்வாறாயினும், உலகில் கிறிஸ்துவின் நல்ல நறுமணமாக இருக்கும் உன்னதமான பணியை, நம்மால் முடிந்தவரை, நமது சொந்த சூழலில் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த நமது உறுதிப்பாட்டிலிருந்து நம்மை திசைதிருப்பக்கூடாது. கிறிஸ்துவின் நறுமணம் "ஆவியின் கனிகளால்" கொடுக்கப்படுகிறது, அவை " அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம்" ஆகும். (கலா 5:22). இக்கனிகளைக் கொண்ட மனிதரைக் காண்பது அழகானது. அன்பானவராக, அமைதியை உருவாக்குபவர்களாக, அனைவரையும் பாகுபாடுபாராது ஏற்றுக்கொள்பவராக, நல்லவராக காண்பது சிறப்பானது. ஒரு நல்ல மனிதரை, நம்பிக்கையுள்ளவரை, உண்மையானவரைக் காண்பது சிறப்பானது.   

இத்தகைய மனிதர்களை நாம் கண்டால் நம்மில் இந்த தூய ஆவியின் நறுமணத்தை நுகரலாம். நாம் அதிக உணர்வுடன் கூடிய அருள்பொழிவு பெற்றவர்களாக தூயஆவியாரால் நிரப்பப்பட அருள்வேண்டுவோம். நன்றி

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள், அரங்கத்தில் கூடியிருந்த அனைத்து நாட்டவர்களையும் வாழ்த்தினார். இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், குறிப்பாக, குரோத்தோனேயில் உள்ள  தூய தொமேனிக்கோ திருப்பயணிகள், டோலோவில் உள்ள தூய ரோக்கோ திருப்பயணிகள், கப்ராரோலா இசைக்குழுவினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார்.

ஆகஸ்ட் 21 புதன்கிழமை திருஅவை நினைவுகூரும் புனித பத்தாம் பயஸ் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உலகின் பல பகுதிகள் இப்புனிதரின் நினைவுநாளை மறைக்கல்வி தினமாகக் கொண்டாடுகின்றனர் என்று எடுத்துரைத்து பல வேலைகளுக்கு மத்தியில் உலகின் சில பகுதிகளில், இறைநம்பிக்கையை முதலில் முன்னெடுத்துச் செல்லும் பணியாற்றும் நமது அருள்பணியாளர்கள் மற்றும் மறைக்கல்வியாளர்களை நினைவுகூர்ந்தார்.

மறைக்கல்வி ஆசிரியர்களுக்காக இன்று சிறப்பாக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைவன் அவர்களுக்குத் துணிவை அளித்து அவர்கள் தங்கள் பணியில் மென்மேலும் முன்னேறிச்செல்ல உதவட்டும் என்றும் கூறினார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், திருத்தந்தை புனித பத்தாம் பயஸ் அவர்களின் இறைபக்தியைப் பின்பற்றி கிறிஸ்துவின் வார்த்தையைக் கேட்பதன் வழியாகவும் நற்செயல்களின் சான்று வாழ்வு வழியாகவும் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்ற வலியுறுத்தினார்.

துன்புறும் உக்ரைனை மறந்து விடவேண்டாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மியான்மார், தென்சூடான், வடக்கு கிவு மற்றும் போரினால் துன்புறும் பல நாடுகளை மறந்துவிடக் கூடாது என்றும், அமைதிக்காக செபிப்போம், பாலஸ்தீனம் இஸ்ரயேல் என அனைத்து பகுதிகளிலும் அமைதி நிலவ தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறினார். இவ்வாறு தனது வாழ்த்துக்களையும் அமைதிக்கான செப விண்ணப்பங்களையும் நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2024, 14:22

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >