தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை - கடலும் பாலைவனமும்

புலம்பெயர்ந்தோரை துன்புறுத்த வேண்டாம், அவனை ஒடுக்க வேண்டாம் என்ற திருவிவிலிய வரிகளை மறக்க வேண்டாம். அனாதைகள், கைம்பெண்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஏழைகள். கடவுள் எப்போதும் பாதுகாக்கும் ஏழைகள். கடவுளது பாதுகாப்பை நாடும் ஏழைகள்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

மாதத்தின் இறுதி வாரமும் தூய அகுஸ்தீன் நினைவு நாளுமாகிய ஆகஸ்ட் 28 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு கடலும் பாலைவனமும் என்ற தலைப்பில் தனது புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேகக்கூட்டங்களின் அணிவகுப்பினுள் இளஞ்சூரியன் மறைந்து மிதமான வெப்பத்தைக் கொடுக்க வசந்தகாலத்தின் இனிமையை தென்றல் காற்று வழங்க, இரம்மியமான காலைப்பொழுதாக வத்திக்கான் வளாகம் இன்று காட்சியளித்தது. கோடை வெப்பத்தின் காரணமாக இதுவரை தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்று வந்த மறைக்கல்வி உரையானது இன்று வத்திக்கான் தூய பேதுருபெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருக்க அவர்கள் முன் திறந்த வாகனத்தில் வலம்வந்தபடி திருப்பயணிகளை வாழ்த்தி மகிழ்ந்தார் திருத்தந்தை. மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த உடன் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் திருப்பாடல் 107 இல் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

திருப்பாடல் 107 1.4- 6

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;  ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பாலைநிலத்தில் பாழ் வெளியில் சிலர் அலைந்து திரிந்தனர்; குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல அவர்கள் வழி காணவில்லை; பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர். தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடலும் பாலைவனமும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.  

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்! இன்று, வழக்கமான நமது மறைக்கல்வி உரைக்குப் பதிலாக உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்தோர் குறித்து சிந்திப்போம். நாம் இங்கு இருக்கின்ற இந்த நேரத்தில் கூட கடல் மற்றும் பாலைவனங்களைக் கடந்து அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு நிலத்தை அடையும்  புலம்பெயர்ந்தோர் மக்களைப் பற்றி சிந்திக்க நான் உங்களை அழைக்கின்றேன்.

கடல் மற்றும் பாலைவனம் எனும் இவ்விரண்டு வார்த்தைகளும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களை மீட்பதில் உறுதியாக இருப்பவர்களிடமிருந்து நாம் அறிந்துகொள்ளும் பல சான்றுகளை நோக்கித் திரும்புகின்றன. இடம்பெயர்வு சூழலில் "கடல்" என்று சொல்லும்போது, தங்கள் இலக்கை அடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பல சகோதர சகோதரிகள் கடக்கின்ற, கடல், ஏரி, ஆறு, என நீர் நிறைய இருக்கக்கூடிய எல்லா நீர்நிலைகளையும் சுட்டிக்காட்டுகின்றேன். மேலும் "பாலைவனம்" என்பது மணல், குன்றுகள் அல்லது பாறைகள் மட்டுமல்லாது, மரம் அடர்ந்த காடுகள், விலங்குகள் இருக்கக்கூடிய காடுகள், புலம்பெயர்ந்தோர் தனியாக நடக்கும் இடங்கள் போன்ற அணுக முடியாத மற்றும் ஆபத்தான பகுதிகள் அனைத்தையும் பாலைவனம் என்னும் சொல் எடுத்துரைக்கின்றது.  இன்றைய இடம்பெயர்வுக்கான பாதைகள் பெரும்பாலும் கடல்கள் மற்றும் பாலைவனங்களைக் கடப்பதையே எடுத்துரைக்கின்றன. இது பலருக்கு ஆபத்தானதாகவும் அவர்களது உயிரையே எடுக்கக்கூடிய வழியாகவும் அமைகின்றன. இந்த இடம்பெயர்வு வழிகளில் சில, நமக்கு நன்றாகத் தெரியும், ஏனெனில் அவை பெரும்பாலும் நமது கவனத்தை ஈர்க்கின்ற பகுதிகளாக இருக்கின்றன; மற்றவை, பெரும்பாலானவை அதிகம் அறியப்படாதவைகளாக இருக்கின்றன.

உரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையிலும், உரோம் புலம்பெயர்ந்தோரின் அடையாளமாக இருப்பதாலும் மத்தியதரைக் கடலைப் பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். மக்கள் மற்றும் அரசு தொடர்பு கொள்ளும் இடமான நமது கடல் என்பது புலம்பெயர்ந்தோர்க்கான கல்லறையாக மாறிவிட்டது. பலரது வாழ்வில் சோகத்தை ஏற்படுத்திய இந்நிகழ்வு நடைபெறாமல் ஏராளமான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்னும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டுமானால் புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்பும் செயல்களில் ஈடுபடுவோர் இருக்கின்றனர். இதனை மனச்சான்றுடனும் பொறுப்புடைமையுடனும் செய்யும் போது மிகப்பெரிய பாவமாக மாறும் இச்செயலை அவர்கள் மிகுந்த பொறுப்புணார்வுடன் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்தோரை துன்புறுத்த வேண்டாம், அவர்களை ஒடுக்க வேண்டாம் என்ற திருவிவிலிய வரிகளை மறக்க வேண்டாம். அனாதைகள், கைம்பெண்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோர் ஏழைகள். கடவுள் எப்போதும் பாதுகாக்கும் ஏழைகள். கடவுளது பாதுகாப்பை நாடும் ஏழைகள்.

பாலைவனங்கள் கூட சில நேரங்களில் புலம்பெயர்ந்தோரின் கல்லறைகளாக மாறிவிடுகின்றன. இவர்களின் மரணங்கள் இயற்கையாக நிகழும் மரணங்கள் அல்ல. சில நேரங்களில் இப்பாலைவனங்கள் புலம்பெயர்ந்தோரை யாருமற்ற அனாதைகளாகவும், கைவிடப்பட்டவர்களாகவும் ஆக்கி இருக்கின்றன. செயற்கைக்கோள்கள் மற்றும் வான்வழி வாகனங்கள் இருக்கும் நிலையிலும், புலம்பெயர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை யாரும் பார்ப்பதில்லை. மாறாக கடவுள் மட்டுமே அவர்களைப் பார்க்கிறார், அவர்களின் அழுகையைக் கேட்கிறார்.

உண்மையில், கடலும் பாலைவனமும் திருவிவிலியத்தில் மிக முக்கியமான மதிப்பீடுகளை எடுத்துரைக்கும் இடங்களாக இருக்கின்றன. விடுதலைப்பயணத்தில் குறிப்பிடப்படும் இஸ்ரயேல் மக்கள் மோசேயால் வழிநடத்தப்பட்டு வாக்களிக்கப்பட்ட நிலத்தை அடைய பாலைவனத்தைக் கடந்த நிலை மிகவும் சிறப்பானது. அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் புலம்பெயர்ந்த மக்களின் நிலையை எடுத்துரைப்பதாக பாலைவனம் அமைகின்றது. துன்பம், பயம், விரக்தி போன்றவற்றின் இடங்களாக மட்டுமன்றி விடுதலை, மீட்பு, சுதந்திரம் மற்றும் கடவுளின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான இடங்களாகவும் பாலைவனங்கள் திகழ்கின்றன.

திருப்பாடல் 77 இல் உள்ள “கடலுக்குள் உமக்கு வழி அமைத்தீர்; வெள்ளத்திரளிடையே உமக்குப் பாதை ஏற்படுத்தினீர்;” என்ற இறைவார்த்தையும், “பாலை நிலத்தில் தம் மக்களை வழிநடத்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்; என்றும் உள்ளது அவரது பேரன்பு.” என்ற திருப்பாடல் 136 இல் உள்ள இறைவார்த்தைகளும் புலம்பெயர்ந்தோர் மேல் இறைவன் கொண்டுள்ள பேரன்பை எடுத்துரைக்கின்றன. மேலும், விடுதலைப் பாதையில் மக்களுக்குத் துணையாக இருப்பதற்காக கடவுள் தாமே மக்களை வழிநடத்துகின்றார். அவர் தூரமாக தொலைவில் இல்லை. மாறாக, அவர்களது வாழ்க்கையில் அவர்களுடன் இருக்கின்றார். அவர்களோடு இருந்து துன்பத்தில் பங்குகொள்கின்றார். அழுகை, துன்பம் வருத்தம் நம்பிக்கை என எல்லா உணர்வுகளிலும் அவர்களோடு கடவுள் இருக்கின்றார்.

சகோதர சகோதரிகளே, கொடிய கடல்களிலும் பாலைவனங்களிலும், இன்றைய புலம்பெயர்ந்தோர் இருக்கக்கூடாது என்பதில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட சட்டங்கள், எல்லைகளை இராணுவமயமாக்குதல், அல்லது  நிராகரித்தல் வழியாக அல்ல. மாறாக, போர், வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பல்வேறு பேரிடர்களில் இருந்து தப்பியோடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதன் வழியாகவும், புலம்பெயர்ந்தோருக்கான பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ அணுகல் வழிகளை விரிவுபடுத்துவதன் வழியாகவும் இதை அடைய முயல்வோம். நீதி, உடன்பிறந்த உறவு, ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெயர்வுக்கான உலகளாவிய நிர்வாகத்தை எல்லா வகையிலும் வளர்ப்பதன் வழியாக அதை அடையலாம். மனித வர்த்தகத்தை எதிர்த்துப் போராடுபவர்களை ஒன்றிணைத்து, மற்றவர்களின் துயரத்தை இரக்கமின்றி சுரண்டும் கொடிய கடத்தல்காரர்களைத் தடுக்க முயற்சிப்போம்.

அவநம்பிக்கை மற்றும் உள்மனக் காயங்களுடனும் வாழ்கின்ற கைவிடப்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்கவும், காப்பாற்றவும் தங்களால் இயன்றதைச் செய்யும் உலகின் ஐந்து கண்டங்களிலும் வாழ்கின்ற பல நல்ல சமாரியர்களின் முயற்சிகளை அங்கீகரித்து, பாராட்டுகின்றேன். இந்த துணிச்சலான ஆண்களும் பெண்களும் ஒரு மனிதகுலத்தின் அடையாளம்., அலட்சியம், நிராகரிப்பு ஆகியவற்றின் மோசமான கலாச்சாரத்தால் புலம்பெயர்ந்தோர் பாதிக்கப்படுவதை இவர்களின் செயல்கள் ஒருபோதும் அனுமதிக்காது. புலம்பெயர்ந்தோருக்கு உதவும் பணியினை முதன்மையானதாகச் செய்யும் அத்தகையோர் போல் நம்மால் இருக்க முடியவில்லை எனில் அவர்கள் பணியில் பங்கேற்க மேலும் பல வழிகள் உள்ளன. அதிலும் முதன்மையாக அவர்களுக்காக நாம் சிறப்பாக செபிக்கலாம். நாம் புலம்பெயர்ந்தோருக்காக செபிக்கின்றோமா? அவர்களை வரவேற்கின்றோமா? ஏற்றுக்கொள்கின்றோமா? அவர்களது நல்வாழ்விற்காக செபிக்கின்றோமா? என்று சிந்திப்போம்.    

அன்பான சகோதர சகோதரிகளே, கடல்களும் பாலைவனங்களும் கல்லறைகளாக இல்லாமல், விடுதலை மற்றும் சகோதரத்துவத்திற்கான கடவுள் பாதைகளைத் திறக்கும் இடங்களாக இருக்க, நம் இதயங்களையும் ஆற்றல்களையும் நாம் ஒன்றிணைப்போம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த மக்கள் அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்தார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அருள்பணித்துவ மாணவர்களுக்கான கோடைக்கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கடவுளின் வார்த்தையாலும், வாழ்வளிக்கும் உணவினாலும் ஊட்டமளிக்கப்பட்டு உருவாக்கும் பயிற்சியைத் தொடர வலியுறுத்தினார்.

ரொவாத்தோவில் உள்ள மரினெல்லா பங்னாரா கலாப்ரா பங்குத்தளமக்கள், கியாவரி மறைமாவட்டத்தில் இருந்து வந்திருந்த உறுதிப்பூசுதல் மாணவர்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உறுதிப்பூசுதல் திருஅருளடையாளம் வழியாக அவர்கள் பெற்றுக்கொண்ட தூய ஆவியின் கொடைகளால், இயேசுவுடனான நட்புறவு இன்னும் ஆழமானதாக மாறவும் திருநற்கருணையால் ஊட்டமளிக்கப்படவும் வாழ்த்தினார்.

உறுதிப்பூசுதல் அருளடையாளம் பெற்றபின் யாரும் ஆலயம் பக்கம் வருவதில்லை என்ற கூற்று நிலவுகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  அவ்வாறு இல்லாது, ஞாயிறு திருப்பலிகளில் நம்பிக்கையுடன் பங்கேற்கவும் நமது பாவங்களை மன்னித்து நல்லதைச் செய்ய நமக்கு உதவும் இயேசுவை  ஒப்புரவு, வழிபாட்டில் சந்தித்து வாழவும் அம்மாணவர்களை வலியுறுத்தினார்.

இறுதியாக போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், பாலஸ்தீனம், இஸ்ரயேல், உக்ரைன், மியான்மார், வடக்கு கீவ், போன்ற போர் நடக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டி இறைவன் அவர்களுக்கு அமைதியைப் பரிசாக அளிக்க செபிப்போம் என்றும் எடுத்துரைத்தார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இன்றைய நாளில் திருஅவை நினைவுகூரும் புனித அகுஸ்தீன்  நாளை எடுத்துரைத்து உண்மையான ஞானத்திற்காக தாகமாக இருங்கள், நிலையான அன்பின் உயிருள்ள ஆதாரமான இறைவனை இடைவிடாமல் தேடுங்கள் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார். இறுதியாக விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடி செபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2024, 11:25

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >