தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை- 45ஆவது திருத்தூதுப்பயண அனுபவம்

செப்டம்பர் 2 முதல் 13 வரை ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து அண்மையில் உரோம் திரும்பியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழக்கம்போல் திருப்பயணிகளுக்கு புதன் மறைக்கல்வி உரையினை இன்று வழங்கினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 2 முதல் 13 வரை ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப்பயணத்தை நிறைவு செய்து அண்மையில் உரோம் திரும்பியிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழக்கம்போல் திருப்பயணிகளுக்கு புதன் மறைக்கல்வி உரையினை வழங்கினார். கோடைகாலத்தின் நிறைவும் குளிர்காலத்தின் துவக்கமுமாகிய செப்டம்பர் 18 புதன்கிழமையன்று இதமான குளிரும் இனிமையான தென்றலும் நிறைந்த காலைப்பொழுதில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தனது 45ஆவது திருத்தூதுப்பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பயணிகள் முன் திறந்த காரில் வலம்வந்தபடி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். புதன் மறைக்கல்வி உரையை வழங்கும் இடத்தை வந்தடைந்தவுடன் சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார் திருத்தந்தை. அதன்பின் மத்தேயு நற்செய்தியில் உள்ள உயிர்த்த இயேசு சீடர்களுக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல் என்ற தலைப்பில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

மத்தேயு 28 : 16,18 - 20

பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். இயேசு அவர்களை அணுகி, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 45ஆவது திருத்தூதுப்பயண அனுபவங்களை திருப்பயணிகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் முன் வத்திக்கான் வானொலி மற்றும் செய்திப்பிரிவுகளில்  பணியாற்றும் ஊழியர்கள் இருவர் வருகின்ற சனிக்கிழமை திருமணம் என்னும் அருளடையாளம் வழியாக இணைய இருப்பதை எடுத்துரைத்து கரவொலி எழுப்பி அவர்களுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

செப்டம்பர் மாத துவக்கத்தில் நான் மேற்கொண்ட ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான 45ஆவது திருத்தூதுப் பயணம் பற்றியக் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது சுற்றுலாப் பயணம் அல்ல ஒரு திருத்தூதுப் பயணம். கடவுளையும் கடவுள் மக்களின் ஆன்மாவையும் கண்டறிவதற்கான ஓர் அழகான திருத்தூதுப்பயணம்.  

1970 ஆம் ஆண்டில், திருத்தந்தை ஆறாம் பவுல் தான், பிலிப்பீன்ஸ், ஆஸ்திரேலியா, பல ஆசிய நாடுகள் மற்றும் சமோவா தீவுகளை நோக்கி மிக நீண்ட பயணங்களை மேற்கொண்டு திருத்தூதுப்பயணம் செய்தவர். அவருக்கு முன்பாக திருத்தந்தை புனித 23ஆம் யோவான் இரயிலில் அசிசி சென்றார். எனது இந்த திருத்தூதுப் பயணம் மறக்க முடியாத பயணம்! இதிலும் நான் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற முயற்சித்தேன், ஆனால், அவரை விட சில ஆண்டுகள் அதிகமான நான் இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி, கிழக்கு திமோர், சிங்கப்பூர் ஆகிய நான்கு நாடுகளுக்குள் என் பயணத்தினை சுருக்கிக்கொண்டேன். ஓர் இளம் இயேசு சபை அருள்பணியாளராக இருந்த போது நான் மறைப்பணியாளராக அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததை வயதான நிலையில் ஒரு திருத்தந்தையாக திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ள இறைவன் வாய்ப்பளித்ததற்காக நான் நன்றி கூறுகின்றேன்.

இந்தத் திருத்தூதுப்பயணத்திற்குப் பிறகு இயல்பாக வரும் முதல் பிரதிபலிப்பு என்னவென்றால், திருஅவையைப் பற்றிய சிந்தனையில் நாம் இன்னும் ஐரோப்பிய மையமாக இருக்கிறோம் அல்லது அவர்கள் சொல்வது போல் "மேற்கத்தியமாக இருக்கின்றோம். உண்மையில், அங்குள்ள தலத்திருஅவை மிகவும் பெரியது உரோம் மற்றும் ஐரோப்பிய தலத்திருஅவையை விட பெரியது, உயிருள்ளது. அத்தகைய உயிருள்ள சமூகங்களைச் சந்தித்து, அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், எளிய மக்கள், மறைப்பணியாளர்கள் குறிப்பாக நற்செய்தியை எளிய மக்களுக்கு எடுத்துரைப்பதில் முனைப்புடன் செயல்படும் மறைக்கல்வியாளர்களின் அனுபவச்சான்றுகளைக் கேட்டு உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டேன். மறைந்த திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் கூறியது போல, திருஅவை மதமாற்றத்தால் அல்ல மாறாக ஈர்க்கக்கூடிய செயல்களினால் வளர்கின்றது என்பதை அறிந்துகொண்டேன்.

இந்தோனேசியாவில், கிறிஸ்தவர்கள் 10 விழுக்காடும், கத்தோலிக்கர்கள் 3 விழுக்காடும் உள்ளனர். மிகக்குறைந்த அளவில் உள்ள அவர்களில் நான் ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, நற்செய்தியை வாழ்கின்ற, பழங்கால கலாச்சாரங்கள் உள்ள மக்களுக்கு அதை எடுத்துச்செல்கின்ற தலத்திருஅவையைக் கண்டேன். மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை, பன்முகத்தன்மையை ஒத்திசைக்க விரும்புகின்ற அத்தலத்திருஅவை உள்ள இடத்தில், உலகில் அதிகமான முஸ்லிம்களின் எண்ணிக்கை உள்ளது. இத்தகையச் சூழலில், மீட்பராகிய கிறிஸ்துவைக் காணவும், அதே சமயம் பெரிய மத மற்றும் கலாச்சார மரபுகளைச் சந்திக்கவும் கிறிஸ்தவர்கள் நடக்கக்கூடிய மற்றும் நடக்க வேண்டிய பாதை இரக்கம் என்பதை நான் அவர்களுக்கு உறுதிப்படுத்தினேன். உடனிருப்பு, இறைஇரக்கம், அன்பு என்பவையே கடவுளின் செயல்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கடவுள் நம்மோடு உடன் இருக்கின்றார். நம்மை அளவற்ற விதமாக அன்பு செய்கின்றார். இரக்கம் இல்லாத கிறிஸ்தவன் எந்த சேவையையும் ஆற்ற முடியாது. "நம்பிக்கை, சகோதரத்துவம், பரிவிரக்கம்" என்பது இந்தோனேசியா திருத்தூதுப்பயணத்தின் குறிக்கோள். இந்த வார்த்தைகளின் அடிப்படையில் நற்செய்தி ஒவ்வொரு நாளும், உறுதியான அந்த மக்களின் வாழ்க்கையில் நுழைந்து, அவர்களை வரவேற்று, இறந்து உயிர்த்தெழுந்த இயேசுவின் அருளை அவர்களுக்கு அளிக்கிறது. இந்த வார்த்தைகள் ஜகார்த்தா கதீட்ரலை ஆசியாவிலேயே மிகப்பெரிய மசூதியுடன் இணைக்கும் அடிநிலப்பாதை போன்ற பாலம் போன்றது. உடன்பிறந்த உறவே எதிர்காலம், அநாகரீகத்திற்கு எதிரானது, வெறுப்பு மற்றும் போரின் கொடூரமான செயல்களுக்கு அதுவே பதில் என்பதையும் அங்கு நான் கண்டேன்.

பாப்புவா நியூ கினியில் மறைப்பணிக்கான தலத்திருஅவையின் அழகை நான் கண்டேன், பசிபிக் பெருங்கடலின் பிரம்மாண்டமான ஒரு தீவுக்கூட்டமாகிய இவ்விடத்தில் பல்வேறு இனக்குழுக்கள் எண்ணூறுக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுகின்றன. அன்பின் செய்தியை மொழிகளின் கூட்டிசையில் ஒலிக்க விரும்பும் தூயஆவியாருக்கு ஏற்ற சூழலை அங்குக் கண்டேன். அங்கு, ஒரு சிறப்பு வழியில், மறைப்பணியாளர்களும் மறைக்கல்வியாளர்களும் முக்கியமான நபர்களாக இருக்கின்றார்கள். இக்கால மறைப்பணியாளர்கள் மற்றும் மறைக்கல்வியாளர்களுடன் சிறிது நேரம் செலவழிக்க முடிந்தது, என் இதயத்தை மகிழ்வித்தது. இளைஞர்களின் பாடல்கள் மற்றும் இசைக்கு உணர்வுப்பூர்வமாக செவிமடுத்தேன். பழங்குடியின வன்முறை இன்றி, முன்சார்பு எண்ணங்கள் இன்றி, பொருளாதார, கருத்தியல் காலனித்துவம் இல்லாத ஒரு புதிய எதிர்காலத்தைக் அவர்களில் நான் கண்டேன். அற்புதமான இயற்கை சூழல், உடன்பிறந்த உறவு மற்றும் அக்கறையுடன் கூடிய எதிர்காலத்தை அவர்களிடத்தில் கண்டேன். பாப்புவா நியூ கினி, நற்செய்தியின் "புளிகாரத்தினால் மாற்றியமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சியின் மாதிரி ஆய்வகமாக இருக்கின்றது. வனிமோ மறைமாவட்ட மறைப்பணியாளர்களை இங்கு நினைவுகூர்கின்றேன். காடுகளுக்கும் கடலுக்கும் மத்தியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு அவர்கள் பணியாற்றுகின்றார்கள். கிறிஸ்தவத்தின் செய்தி, மனித மற்றும் சமூக ஊக்குவிப்பு ஆற்றல் கிழக்கு திமோரின் வரலாற்றில் ஒரு சிறப்பு வழியில் நிற்கிறது. அங்கு தலத்திருஅவையானது சுதந்திரத்தின் செயல்முறையை, எப்போதும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய செயல்முறையை அனைத்து மக்களுடனும் பகிர்ந்து கொள்கின்றது. இது நம்பிக்கையின் கோட்பாடு அல்ல, மாறாக நம்பிக்கைதான் கலாச்சாரமாக மாறுகிறது, அறிவூட்டுகிறது, தூய்மைப்படுத்துகிறது, உயர்த்துகிறது. அதனால்தான் திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் தனது திருத்தூதுப் பயணத்தில் ஏற்கனவே கவனம் செலுத்திய நம்பிக்கைக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலான பயனுள்ள உறவை நான் புதுப்பித்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக நான் அந்த மக்களின் அழகைக் கண்டு வியந்தேன். மக்கள் மகிழ்ச்சியானவர்கள், துன்பத்திலும் அறிவுக்கூர்மையுடன் செயல்படுபவர்கள். பல குழந்தைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அக்குழந்தைகள் புன்னகைக்கவும் கற்றுக்கொடுக்கும் மக்கள். எதிர்காலத்தின் உறுதியான இக்குழந்தைகளில் கிழக்கு திமோர் தலத்திருஅவையின் இளமையைக் கண்டேன்: குடும்பங்கள், குழந்தைகள், இளைஞர்கள், அருள்பணித்துவ மாணவர்கள் புகுநிலை துறவறத்தார் என அனைவரையும் சந்தித்ததில் வசந்த காலத்தின் காற்றை நான் அங்கு சுவாசித்தேன்.

இத்திருத்தூதுப் பயணத்தின் கடைசி பகுதியாக நான் சென்றது சிங்கப்பூர். மற்ற மூன்று நாடுகளில் இருந்து மிகவும் வேறுபட்ட நாடு. ஒரு நகர-மாநிலமாக, மிகவும் நவீனமானதாக,  ஆசியா மற்றும் அதற்கு அப்பாலும் பொருளாதார மற்றும் நிதி மையமாகவும் சிங்கப்பூர் விளங்குகின்றது. கிறிஸ்தவர்கள் அங்கு சிறுபான்மையினராக உள்ளனர், ஆனால் அவர்கள் இன்னும் வாழும் தலத்திருஅவையை உருவாக்குகிறார்கள், வெவ்வேறு இனக்குழுக்கள், கலாச்சாரங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் உடன்பிறந்த உறவையும் உருவாக்க உறுதிபூண்டுள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் கூட, நற்செய்தியைப் பின்பற்றி உப்பாகவும் வெளிச்சமாகவும் சிறுபான்மையினர் மாறுகின்றனர். பொருளாதார ஆதாயங்கள் உறுதியளிக்கக்கூடிய நம்பிக்கையை விட மேலான நம்பிக்கைக்கு சாட்சியாக அவர்கள் உள்ளனர்.

இந்தத் திருத்தூதுப் பயணம் என்னும் கொடைக்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்! மேலும் என்னை உற்சாகத்துடனும் அன்புடனும் வரவேற்ற மக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் தலத்திருஅவையைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் சந்தித்த மக்களை கடவுள் ஆசீர்வதித்து அவர்களை அமைதி மற்றும் உடன்பிறந்த உறவின் பாதையில் வழிநடத்தட்டும்! அனைவருக்கும் நன்றி.  

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.  

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், குறிப்பாக ஆஸ்திரியா, ருமேனியா, செக் குடியரசு,  போலந்து ஆகிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள் சந்திக்கும் துயரங்கள் குறித்தும் தனது வருத்தத்தை எடுத்துரைத்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக செபிப்பதாகவும் உள்ளூர் கத்தோலிக்க சமூகங்கள் மற்றும் பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் உதவி மற்றும் நிவாரணங்களுக்காக நன்றி தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

செப்டம்பர் 21, சனிக்கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் உலக அல்சைமர் தினம் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்த நோய் சிகிச்சைக்கான வாய்ப்புகள் மருத்துவ அறிவியலால் விரைவில் வழங்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவாக செயல்பட செபிப்போம் என்றும் கூறினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள்  பெனடிக்டைன் கூட்டமைப்பின் துறவிகளையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் பெனடிக்டைன் உணர்வை இன்னும் பொருத்தமானதாக மாற்றுவதற்கு பிறரன்புப்பணிகள் மற்றும் மறைப்பணி ஆர்வத்துடன் உழைக்கத் தங்களை அர்ப்பணிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். மேலும், கார்மலேட் சபையார் நற்செய்தியின் புளிக்காரமாக இருக்கவேண்டுமென்றும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை சென்றடையும் தலத்திருஅவையின் அடையாளமாக இருக்கவும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

மண்டை ஓடு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஐரோப்பிய சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்பவர்கள், பாஸ்டியா அம்ப்ராவிலிருந்து வந்திருந்த பாலியோ புனித மிக்கேல் குழுவினர், டிரானி மற்றும் ரோம்-செச்சிக்னோலாவிலிருந்து வந்திருந்த மார்க்கே இராணுவ வீரர்கள், இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

ஒரு புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில், மாணவர்கள் அனைவரும் பொது நன்மைக்காக ஆண்டவர் தங்களிடம் ஒப்படைத்துள்ள திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாக, படிப்பினைக் கருதவும், அதற்காகத் தங்களையே அர்ப்பணித்து வாழவும் வலியுறுத்தினார். சில நாட்களுக்கு முன்பு திருஅவை சிறப்பித்த தூய வியாகுல அன்னையின் விழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளிகள், முதியோர்கள்,  மற்றும் உடன்வாழும் சகோதர சகோதரிகளின் மீட்பிற்காக உழைக்கவும், துன்பத்தை ஏற்கவும் வியாகுல மரியா உதவட்டும் என்று கூறினார்.

இறுதியாக போரினால் துன்புறும் உக்ரைன் பாலஸ்தீனம் புனித பூமி, மியான்மார் மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2024, 09:08

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >