தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு

செப்டம்பர் 25 புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘பாலைவனத்திற்கு தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு – தீய ஆவியை எதிர்த்து போராடுவதில் நமக்கு நண்பர் தூய ஆவியார் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 25 புதன்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’  என்ற தொடர் மறைக்கல்வி உரையின் ஏழாம் பகுதியாக, பாலைவனத்திற்கு தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்ட இயேசு – தீய ஆவியை எதிர்த்து போராடுவதில் நமக்கு நண்பர் தூய ஆவியார் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியில் கோடைகாலம் முடிந்து குளிர்காலம் தொடங்க உள்ள நிலையில் கடந்த நாள்களில் பெய்து வந்த மழையின் காரணமாக இதமான தென்றல் காற்றுடன் குளிர்காற்றும் வீசி வத்திக்கான் வளாகத்தில் உள்ள மக்களுக்கு மகிழ்வூட்டியது. இலேசான காய்ச்சல் காரணமாக திங்கள்கிழமை தனிப்பட்ட குழுக்களுடனான சந்திப்புக்களைத் தவிர்த்து ஓய்வெடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைக்க வத்திக்கான் வளாகத்தை வந்தடைந்தார். திருப்பயணிகளிடையே திறந்த காரில் வலம்வந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வழக்கமாக மறைக்கல்வி உரையை வழங்கும் இடத்தை வந்தடைந்ததும், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கிவைத்தார். அதன்பின் லூக்கா நற்செய்தியில் உள்ள இயேசு சோதிக்கப்படுதல், கலிலேயப் பணியின் தொடக்கம் என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

லூக்கா 4: 1,2, 13,14

இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு யோர்தான் ஆற்றை விட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது. பின்பு, இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது புதன் மறைக்கல்வி உரைக் கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே காலை வணக்கம்,

யோர்தானில் திருமுழுக்கு பெற்ற உடனேயே, இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காக தூயஆவியாரால் பாலைவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். இது அலகையின் முன்முயற்சியினால் ஏற்பட்டதல்ல மாறாக இறைத்தந்தையால் ஏற்பட்டது. பாலைவனத்திற்கு தூய ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செல்வதன் வழியாக இயேசு தூய ஆவியாரின் தூண்டுதலுக்குக் கீழ்ப்படிகின்றார், தீய ஆவி என்னும் எதிரியின் வலைக்குள் விழவில்லை என்பது புலனாகிறது. அலகையின் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து வெற்றி பெற்றவுடன் தூய ஆவியின் வல்லமை உடையவராய் கலிலேயாவுக்குச் சென்றார் என்று நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

இயேசு பாலைவனத்தில் அலகையை வென்றார். அலகையிடமிருந்து பிறரை விடுவிப்பதற்கான ஆற்றலைப் பெற்றார். இதனைத்தான் நற்செய்தியாளர்கள் பல்வேறு இடங்களில், தீய ஆவியினால் ஆள்கொள்ளப்பட்டிருந்தவர்களை இயேசு விடுவித்தார், குணமாக்கினார் என்று எடுத்துரைத்து அவர் பெற்ற தூய ஆவியின் ஒளியினை சுட்டிக்காட்டுகின்றனர். நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது. என்று தன்னை எதிர்ப்பவர்களிடம் இயேசு கூறுகின்றார்.      

அலகையின் வித்தியாசமான தோற்றத்திற்கு இன்று நாம் சாட்சிகளாகின்றோம். குறிப்பிட்ட கலாச்சார நிலையில், அலகை என்ற ஒன்று இல்லை என்று எளிமையாக நம்பப்படுகின்றது. தெளிவற்ற கூட்டுநிலை, அந்நியப்படுத்துதல், உருவகம் போன்றவற்றின் அடையாளமாக அலகை இருக்கின்றது. அலகையின் மிகப்பெரிய சூழ்ச்சியே அது இல்லை என்று மக்களை நம்ப வைப்பதாகும் என்று எழுதியுள்ளார் சார்லஸ் பௌதலெர். ஆயினும்கூட, நமது தொழில்நுட்ப, மதச்சார்பற்ற உலகமானது, மாயாஜாலம், ஜோதிடம், மந்திரங்கள் மற்றும் தாயத்துக்களை விற்பவர்கள் போன்ற   வகைப்படுத்தப்பட்ட அலகையின் பிரிவுகளால் நிரம்பியுள்ளது. வாசல் வழியாக நுழையும் அலகையை நாம் விரட்டி அடித்தாலும். அந்த அலகையானது மீண்டும் ஜன்னல் வழியாக நுழைந்துவிடுகின்றது. நம்பிக்கையினால் வெளியே துரத்தியடிக்கப்பட்டாலும் மூட நம்பிக்கையுடன் மீண்டும் நம்மில் நுழைகின்றது. மூட நம்பிக்கை நம்மில் இருக்கும்போது அலகை நாம் அறியாமலேயே நமக்குள் நுழைந்துவிடுகின்றது. நம்மோடு உரையாடல் செய்கின்றது. அலகையுடன் ஒருபோதும் உரையாடல் செய்யக்கூடாது.    

அலகை தனது முழுமையான இருப்பினை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பது பாவிகளிடமோ அல்லது பற்றுக்கொண்டவர்களிடமோ அல்ல மாறாக புனிதர்களிடம். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. உண்மையாகவே அலகையானது நம்மைச் சுற்றி நாம் காண்கின்ற தீய துன்மார்க்கத்தின் சில தீவிர மற்றும் "மனிதாபிமானமற்ற" வடிவங்களில் செயல்படுகின்றது. இவ்வழிகளில் அதனை நாம் கண்டறிவது இயலாதது. ஏனென்றால் தீய ஆவியின் செயல் எங்கு முடிகிறது? அதன் தீமை எங்கு தொடங்குகிறது என்பதை நாம் துல்லியமாக அறிய முடியாது.

இயேசு பாலைவனத்தில் தீய ஆவிக்கு எதிரான போரில் வென்றது போல் நாமும் வெல்ல முயல்வோம். இயேசு அலகையுடன் ஒருபோதும் உரையாடல் செய்யவில்லை ஒன்ரு அதனை விரட்டுகின்றார் அல்லது அதனை அடக்கி ஆள்கின்றார். பாலைவனத்தில் அலகையால் சோதிக்கப்பட்டபோதுகூட தனது வார்த்தைகளால் அல்ல மாறாக மறைநூலில் சொல்லப்பட்டுள்ள இறைவார்த்தைகள் கொண்டே பதிலளிக்கின்றார். மூன்று முறை அலகையின் கேள்விகளுக்குப் பதிலளித்த இயேசு போல நாமும் அலகைக்கு பதிலளிக்க முயல்வோம். உரையாடல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் தூண்டப்படும்போது விழிப்புணர்வுடன் இருப்போம். இதயத்தை இறைவனை நோக்கி உயர்த்துவோம். அன்னை மரியின் அருள்துணையினை நாடுவோம் அலகையை விரட்டி அடிப்போம். இயேசு நமக்கு கற்ற்க்கொடுத்தது போல அலகையை வென்றிடுவோம்.     

இயேசுவிற்கு அலகையின் தீச்செயலிலிருந்து விலகியிருக்கும் விழிப்புணர்வு தேவையில்லை. ஏனெனில் அவர் இறைமகன் ஆனால் நமக்கு அலகையின் செயல்பாட்டில் விழிப்புணர்வு தேவை என்று வலியுறுத்தி,  “அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது” என்ற திருத்தூதர் பேதுருவின் பரிந்துரைக்கு ஏற்ப வாழ்வோம். “அலகைக்கு இடம் கொடாதீர்கள்” என்ற திருத்தூதர் பவுலின் அறிவுரைக்கு ஏற்ப வாழ்வோம்.

அலகை என்பது சங்கிலியால் கட்டப்பட்ட நாய் போன்றது. அதனருகில் சென்று அதற்கு ஆபத்து விளைவிக்காதவரை யாரையும் கடிக்க அதனால் முடியாது. குரைக்கும் ஆனால் கடிக்காது என்று திருஅவையின் தந்தை ஒருவர் அலகையைக் குறித்து இவ்வாறு கூறுவார்.

நவீன தொழில்நுட்பமானது, ஊக்கப்படுத்தப்பட வேண்டிய பல நேர்மறையான அடிப்படை செயல்களுக்கு கொடுக்கும் வாய்ப்புக்களுக்கும் அதிகமாக அலகைக்கான எண்ணற்ற வழிகளை வழங்குகிறது. இதனால் பலர் அந்த வழியில் விழுகிறார்கள். இணையத்தில் உலவும் ஆபாச காணொளிகளால் பல செழிப்பான வியாபாரங்கள் நடைபெறுகின்றன. மிகவும் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இது குறித்து கிறிஸ்தவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடுமையாக இதனை நிராகரிக்க வேண்டும்.

அலகையின் செயலானது நம்மை ஒருபோதும் ஊக்கப்படுத்தக் கூடாது. நமது இறுதி எண்ணமானது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பில் ஒன்றாக இருக்க வேண்டும். கிறிஸ்து அலகையை முறியடித்து, அவருடைய வெற்றியை நம்முடையதாக மாற்ற தூய ஆவியை நமக்கு அளித்துள்ளார். கடவுளின் உதவியோடு நாம் அதை நமது மாற்றத்திற்கென  பயன்படுத்தினால் அலகையின் சூழ்ச்சியிலிருந்து விடுபடலாம்.  இதற்கான அருளை தூய ஆவியிடம் கேட்போம்.

தூய ஆவியே அலகையே எம்மை விட்டு அகன்று போகச்செய்யும், அமைதியை எங்களுக்கு விரைவில் தாரும். எங்களை வழிநடத்தும் உம்மோடு இணைந்து நாங்கள் அலகையின் தீய ஆற்றலை முறியடிப்போமாக. என்ற இந்த செபத்தின் வழியாக அருளை நாம் கேட்போம். அலகை சூழ்ச்சி மிக்கது கிறிஸ்தவர்களாகிய நாம் அதனிடத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் அலகையை விட கிறிஸ்தவர்களாகிய நாம் புத்திசாலிகள் என்பதை நிருபிப்போம்.  

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், மிலான் மறைமாவட்ட அருள்பணியாளர்கள், பரேத்தே, மொந்தேசோலி பங்குத்தளமக்கள், தொரினோ, பொனாரியா இயக்கத்தைச் சார்ந்தவர்கள், அனைவரையும் வாழ்த்தி கடவுளின் பராமரிப்பும், அன்னை மரியின் தொடர்ச்சியான பாதுகாப்பும் திருஅவை மற்றும் சமுதாயத்தின் நலனுக்காக பணியாற்றும் ஒவ்வொஉருவருக்கும் கிடைக்கப்பெற செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Forlì-Bertinoro மறைமாவட்டத்திலிருந்து ஆயர் Livio Corazza அவர்களுடன் வந்திருந்த உறுதிப்பூசுதல் அருளடையாளம் பெற உள்ள சிறார்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், தூய ஆவியின்  ஆற்றலுடன் உடன்  வாழ்பவர்கள் மத்தியில் நற்செய்தியின் துணிவுள்ள சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றும், வாழ்கின்ற சூழலில் அமைதி மற்றும் உடன்பிறந்த உறவின் மாந்தர்களாக இருப்பதில் சோர்வடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அண்மையில் லெபனோனில் ஏற்பட்ட குண்டெவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆன்மிக உடனிருப்பையும் வழங்குவதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போரினால் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் போன்ற நாடுகளில் உள்ள மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், எப்பொழுதும் நற்செய்தி இலட்சியத்திற்கு உண்மையாக இருங்கள், அன்றாட நடவடிக்கைகளில் அதை உணர்ந்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளும் இறைவனின் அருளினால் உங்களை நம்புங்கள். என்றும் கூறினார்.

இவ்வாறு தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இ லத்தீன் மொழியில் பாடி செபிக்கப்பட்டதைத் தொடர்ந்து தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2024, 08:44

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >