தேடுதல்

புதன் மறைக்கல்வி உரை - திருஅவையின் நம்பிக்கையில் தூய ஆவியார்

அக்டோபர் 16 புதன்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தொடர் மறைக்கல்வி உரையின் ஒன்பதாம் பகுதியாக “ திருஅவையின் நம்பிக்கையில் தூய ஆவியார்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 16 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பின், ஒன்பதாம் பகுதியாக “தூய ஆவியில் நம்பிக்கை வைக்கின்றேன். திருஅவையின் நம்பிக்கையில் தூய ஆவியார்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதமான குளிரும் இனிமையான தென்றல் காற்றும் வீசுகின்ற இரம்மியமான காலைப்பொழுதில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகள் திருத்தந்தையின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆயன் தன் மந்தையைத் தேடி வருவது போல, திருத்தந்தை தன் மக்களை தேடி அவர்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வர, ஆயனைக் கண்ட ஆடுகளாய் மக்கள் வெள்ளம் அவரைச் சூழ்ந்து மகிழ்வொலி எழுப்பியது. மக்கள் அனைவரையும் வாழ்த்தியபடி புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து மறைக்கல்வி உரைக் கூட்டத்தை துவக்கி வைத்தார். யோவான் நற்செய்தியில் உள்ள இயேசு சீடர்களுக்குத் தூய ஆவி குறித்து எடுத்துரைத்த இறைவார்த்தையானது, இத்தாலியம், ஆங்கிலம், அரபு, இஸ்பானியம், பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், லித்துவானியம் என பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.

யோவான் 14: 15-17

நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். “உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் நம்பிக்கையில் தூய ஆவியார் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

மறைநூல்களில் நமக்கு வெளிப்படுத்தப்பட்டதிலிருந்து திருஅவை மற்றும் கிறிஸ்தவர்களின் வாழ்வில் தூய ஆவியார் எவ்வாறு செயல்படுகின்றார் உடன் இருக்கின்றார் என்பதைக் குறித்து இன்றைய நம் மறைக்கல்வியில் நாம் காணலாம்.

முதல் மூன்று நூற்றாண்டுகளில், திருஅவை தூய ஆவியின் மீதான நம்பிக்கையின் வெளிப்படையான வடிவத்தை கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை. எடுத்துக்காட்டாக, திருஅவையின் தொடக்ககால நம்பிக்கையில், அப்போஸ்தலர்களின் நம்பிக்கை அறிக்கையில் தூய ஆவியை நம்புகின்றேன் என்ற வரிகள் இடம்பெறவில்லை. விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல கடவுளை, மனிதராகப் பிறந்து, இறந்து விண்ணகத்திற்கு ஏறிச்சென்ற இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன் என்ற கூறப்பட்டு வந்த நிலையில் தூய ஆவியை நம்புகின்றேன் என்ற வரிகள் பின்னர் சேர்க்கப்பட்டன.

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித அத்தனாசியஸ் அவர்களின், தூய ஆவியானவரின் புனிதப்படுத்தும் மற்றும் தெய்வீகப்படுத்தும் செயலைப் பற்றிய அனுபவமே திருஅவையை தூய ஆவியின் முழு தெய்வீகத்தின் உறுதிப்பாட்டிற்கு இட்டுச் சென்றது. இது 381 ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபில் காலத்தில் தூய ஆவியின் இறை இயல்பு பற்றிய பொதுச்சங்கத்தில் உருவாக்கப்பட்ட நம்பிக்கை அறிக்கையில் தந்தையிடமிருந்து புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியையும் நம்புகிறோம். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மகிமையும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. என்று இடம்பெற்றிருந்தது.

தூய ஆவியாரை ஆண்டவர் என்று குறிப்பிடுவது இறைத்தன்மையைக் கடவுளோடு பகிர்ந்து கொள்பவராக அவர் இருக்கின்றார். படைப்பாளரின் உலகில் அவருடன் இருப்பவராக இருக்கின்றார். இறைத்தந்தைக்கும் மகனுக்கும் நேராக சமமான மகிமையையும் ஆராதனையையும் பெறுபவராக இருக்கின்றார். தூய  பெரிய பசிலியோ என்பவரின் கூற்றான தூய ஆவி ஆண்டவர் அவரே கடவுள் என்பது சிறப்பினை நமக்கு அளிக்கின்றது.

தூய ஆவியானவரின் தெய்வீகத்தன்மையின் வெளிப்படையான உறுதிமொழியைத் தடுக்கும் வரலாற்றுக் காரணங்களைச் சமாளித்து,  திருஅவையின் வழிபாடு மற்றும் அதன் இறையியலில் அமைதியாக எடுத்துரைக்கப்படுகின்றது தூய ஆவியின் செயல்பாடுகள். நஷியான்சோவின் தூய கிரிகோரி, பொதுச்சங்கத்திற்குப் பின் எந்த கவலையுமின்றி, தூய ஆவியார் கடவுளா? ஆம் அவர் உண்மையில் கடவுள் என்று தெளிவுபடுத்துகின்றார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், “தூய ஆவியானவரை நம்புகிறேன்” என்று நாம் அறிவிக்கும் நம்பிக்கை அறிக்கையானது நமக்கு என்ன சொல்கிறது? தூய ஆவியார் தந்தைக்கடவுளிடமிருந்து வருகின்றார் இறைமகன் இயேசுவிடமிருந்து வருகின்றார் என்று பல வித்தியாசமான கருத்துக்கள் தொடக்கக் காலத்தில் கூறப்பட்டு வந்தன. எது எப்படி இருப்பினும் திருஅவைக்குள் உரையாடல் சூழலில், கடந்த காலத்தின் கசப்பை விடுத்து, இன்று ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் நம்பிக்கையை அனுமதிக்க தூய ஆவி நம்மை அழைக்கின்றார். கிறிஸ்தவர்களிடையே பல வேறுபாடுகள் இருப்பினும் அந்த வேறுபாடுகள் அனைத்தும் அன்பினாலும் ஒன்றிணைந்து பயணிப்பதாலும் இணக்கமாக மாறவேண்டும்.

வாழ்வு தரும் தூய ஆவியார். தூய ஆவியார் நமக்கு வாழ்வு தருகின்றாரா? தொடக்கத்தில் படைக்கப்பட்ட ஆதாம் ஏவாளுக்கு கடவுளின் மூச்சுக்காற்று  புது வாழ்வை அளிக்கின்றது. மண்ணால் உருவாக்கப்பட்ட அவர்கள் புதிய உயிரினமாக மாறுகின்றனர். புதிய படைப்பில் தூய ஆவியார் நம் அனைவருக்கும் புதிய வாழ்க்கையை, கிறிஸ்துவின் வாழ்க்கையை, இயற்கைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை, கடவுளின் குழந்தைகளாகும் வாழ்க்கையைக் கொடுக்கிறார். எனவே தான் திருத்தூதர் பவுல்,  கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு வாழ்வு தரும் தூய ஆவியின் சட்டம் பாவம், சாவு என்பவற்றுக்கு உள்ளாக்கும் சட்டத்தினின்று என்னை விடுவித்துவிட்டது என்று கூறுகின்றார்.

தூய ஆவியார் நமக்கு தந்த வாழ்வு நிலையான வாழ்வு. நமது நம்பிக்கையானது நம்மை  மீளவே முடியாத இவ்வுலக துன்பத்திலிருந்து விடுவிக்கின்றது. இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். என்ற வார்த்தைகள் வழியாக அது உறுதிப்படுத்தப்படுகின்றது.

தங்களுடைய தவறுகள் எதுவும் இல்லாமல், நம்பிக்கையைக் குறைத்து, வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்காக செபிப்போம். தூய ஆவியில் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள அவர்களுக்காக செபிப்போம். தூய ஆவியார் நம்மில் வாழ்கின்றார். நமக்குள் வாழ்கின்றார். தன்னுடைய மரணத்தின் வழியாக இந்த விலைமதிப்பற்ற பரிசை நமக்குப் பெற்றுத் தந்த இயேசுவிற்கு நன்றி சொல்ல நாம் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறு தனது மறைக்கல்வு உரையினை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள் கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார்.

இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை அன்புடன் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உலக வானொலி மரியா மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவரும் திருஅவையின் வாழ்க்கையை எதிரொலிக்கும் உடன்பிறந்த உறவு, மற்றும் ஒற்றுமையின் விழுமியங்களைப் பரப்பும்படி கேட்டுக்கொண்டார்.

ரொசெட்டோ வால்ஃபோர்டே மற்றும் பொல்லா திருப்பயணிகள், காவலர்கள் மாநாட்டில் பங்கேற்பவர்கள், Faenza-Modigliana மறைமாவட்ட ஆயர் Mario Toso அவர்களுடன் வந்திருக்கும் உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெறுபவர்கள் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார். இளைஞர்கள் அனைவரும் நற்செய்தியின் துணிவுள்ள சாட்சிகளாக இருக்க வேண்டும் என்றும் தூய ஆவியின் தூண்டுதலுக்கு தங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அக்டோபர் 17 வியாழனன்று திருஅவை நினைவு கூரும் அந்தியோகியாவின் புனித இஞ்ஞாசியார் பற்றி எடுத்துரைத்து, கிறிஸ்துவின் மீது கொண்ட பற்றி எரியும் அன்பினைக் கொண்டவர் அவர் என்றும், அவரின் நினைவு நாளானது ஒரு கிறிஸ்தவராக இருப்பதன் மகிழ்ச்சியை மீண்டும் கண்டறிய அவரது முன்மாதிரியான வாழ்க்கை அனைவருக்கும் உதவட்டும் என்றும் கூறினார்.

மேலும் போரினால் துன்புறும் நாடுகளை நாம் மறந்து விடக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உக்ரைன், பாலஸ்தீன், இஸ்ரயேல், மியான்மார் ஆகிய நாடுகளில் உள்ள மக்களுக்காக செபிப்போம். போர் எப்போதும், தோல்விதான் என்பதை மறந்துவிடாமல் அமைதிக்காக செபிப்போம், போராடுவோம் என்று கூறி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார். அதன்பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடலாகப் பாடப்பட்டதைத் தொடர்ந்து கூடியிருந்த திருப்பயணிகளுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 October 2024, 09:27

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >