புதன் மறைக்கல்வி உரை - நமக்காகப் பரிந்து பேசும் தூய ஆவியார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்க்க உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான திருப்பயணிகள் வந்திருந்தனர். வளாகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளை வாழ்த்தியபடி மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை அடைந்தார். மறைக்கல்வி உரை வழங்கும் மேடையில் வைக்கப்பட்டிருந்த இஸ்பெயினின் வலேன்சியா பாதுகாவலரான (Virgen de los Desamparados) அன்னை மரியாவின் திருஉருவச்சிலைமுன் நின்று சிறிது நேரம் அமைதியில் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெள்ளை நிற ரோஜா மலர் ஒன்றை காணிக்கையாக அளித்தார். மறைக்கல்வி உரைக் கூட்டத்தைத் தொடங்குவதற்கு வழங்குவதற்கு முன்பு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வலேன்சியா மக்களுக்காக செபிக்க வலியுறுத்தினார்.
வலேன்சியாவின் பாதுகாவலரான அன்னை மரியா ஏழைகளை பாதுகாக்கட்டும், பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்பெயினின் வலேன்சியா பகுதி மற்றும் ஸ்பெயினின் பிற பகுதி மக்களுக்காகவும் செபிக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளத்துடன் கூட்டத்தைத் துவக்கினார். அதன்பின் திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் உள்ள வரப்போகும் இறைமாட்சி என்ற தலைப்பில் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
உரோமையர் 8 : 26-27
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பின் 12ஆம் பகுதியாக நமக்காகப் பரிந்து பேசும் தூய ஆவியார் – தூய ஆவியாரும் கிறிஸ்தவ செபமும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
தூய ஆவியின் புனிதமான செயல் கடவுளின் வார்த்தை மற்றும் திருவருளடையாளங்கள் மட்டுமன்றி செபத்திலும் வெளிப்படுகின்றது. கிறிஸ்தவ செபத்தின் எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் தூய ஆவி இருக்கின்றார். அதாவது செபத்தை கொடுத்தவரும் அவரே செபத்தினால் கொடுக்கப்படுபவரும் அவரே. தூய ஆவியை பெறுவதற்காக தூய ஆவியிடம் நாம் செபிக்கின்றோம். அடிமைகளாக மாறாக கடவுளின் பிள்ளைகள் போன்று செபிக்கின்றோம். கடவுளின் பிள்ளைகள் போன்று செபிப்பது என்பது உள்மன விடுதலை உணர்வுடன் செபிப்பது. இதற்காக செபிக்க வேண்டும் இப்படி செபிக்கவேண்டும் இல்லாவிட்டால் நரகத்திற்கு செல்வோம் என்று செபிக்காமல் முழுமன விடுதலையுடன் செபிக்க வேண்டும். செபிப்பதற்கு ஏன் என் மனம் விரும்புவதில்லை? செபிக்காவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்விகளை நமக்குள் நாம் கேட்கவேண்டும். தூய ஆவி நாம் எதற்காக செபிக்க வேண்டும்? எப்படி செபிக்க வேண்டும் என்று நம் இதயத்திற்கு எடுத்துரைப்பார். நமக்குள் இருந்து தானாக எழும்பும் வார்த்தைகள் கொண்டு செபிக்கவேண்டும். இதுவே கடவுளின் பிள்ளைகள் செபிக்கும் முறையாகும்.
தூய ஆவியைப் பெற நாம் செபிக்க வேண்டும். தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!” என்ற நற்செய்தியின் வார்த்தைகள் நமக்கு இதனை வலுப்படுத்துகின்றன. புதிய ஏற்பாட்டில் தூயஆவி எப்போதும் செபத்தின்போதே இறங்கி வருவதாக நாம் பார்க்கின்றோம். இயேசுவின் திருமுழுக்கின்போது வந்த தூயஆவி அவர் செபித்துக் கொண்டிருக்கும்போதே அவரிடம் வருகின்றார். அதேபோல் பெந்தேகோஸ்து நாளின்போதும் சீடர்கள் செபித்துக்கொண்டிருக்கும்போதே அவர்களிடம் வந்தார்.
தூய ஆவி நம்மீது பொழியப்பட்டிருக்கும் ஒரே ஆற்றல். பழைய ஏற்பாட்டில் பாகாலை வழிபடும் பொய் இறைவாக்கினர்கள் தங்கள் பலிப்பொருள்மீது நெருப்பை வரவழைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் இயலவில்லை. ஆனால் எலியாவின் செபம் கேட்கப்பட்டு நெருப்பினால் அவரது பலிப்பொருள் எற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே தான் திருஅவையிலும் வாரும் தூய ஆவியே வாரும் என்று செபிக்கப்படுகின்றது. குறிப்பாக திருப்பலியின்போது நமது காணிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்பொருட்டு செபிக்கின்றோம்.
தூய ஆவி நமக்கு ஆற்றல் தருகின்றார். உண்மையான செபத்தை நமக்குத் தருகின்றார். நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
உண்மையில் எப்படி செபிக்க வேண்டும் என்று நமக்குத் தெரியாது. நமது செபமானது பழைய உணர்வுகளின் அடைப்படையில் மூன்று விதமாக வெளிப்படுகின்றது. mali, mala, male petimus”, என்று இதனை இலத்தீன் மொழியில் கூறுவார்கள். தீயவர்களாக, தீயவற்றை, தீய மனநிலையுடன் நாம் கேட்கின்றோம். எனவே தான் இயேசு, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள், அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். என்று கூறுகின்றார். ஆனால் நாம் நமது சொந்த நலன்களை மட்டுமே நாடுகின்றோம். இறைவனின் ஆட்சிக்குரியதை மறந்துவிடுகின்றோம்.
தூய ஆவி பலவீனத்திலிருந்து நம்மை மீட்டெடுக்க வருகின்றார் நாம் கடவுளின் குழந்தைகள் என்பதற்கு உறுதியளிக்கின்றார். அப்பா தந்தையே என அவரை செபத்தில் அழைக்க வலியுறுத்துகின்றார். தொலைபேசியில் உரையாடுவது போலல்ல, மாறாக கடவுள் நம்மில் இருக்கின்றார் அவர் வழியாக அவரிடம் நாம் செபிக்கின்றோம் என்பதை உணர வைக்கின்றார்.
நமது பாதுகாவலரும் காப்பாளருமான தூய ஆவி இறைவன் முன்னிலையில் நமக்காகப் பரிந்து பேசுகின்றார். பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார். நாம் பாவிகள் என்ற உண்மையை அவர் நம்மை நம்ப வைக்கிறார் இறைத்தந்தையின் இரக்கத்தின் மகிழ்ச்சியை ருசிக்கச் செய்வதற்காக அவர் அவ்வாறு செய்கிறார். குற்ற உணர்ச்சிகளால் நம்மை அழிப்பதற்காக அல்ல. நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். ஏனெனில், கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.
தூய ஆவியார் நமக்காக பரிந்து பேசுகிறார், ஆனால் அவர் நம் சகோதர சகோதரிகளுக்காக பரிந்துபேசவும் கற்றுக்கொடுக்கிறார்; பரிந்து பேசும் செபத்தை அவர் நமக்குக் கற்பிக்கிறார். இந்த செபம் கடவுளுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஏனெனில் இது மிகவும் இலவசமானது மற்றும் தன்னலமற்றது. ஒவ்வொருவரும் எல்லோருக்காகவும் செபிக்கும்போது, அது நடக்கும்,” என்று புனித அம்புரோஸ் இவ்வாறு கூறுகின்றார். ”எல்லோரும் எல்லோருக்காகவும் செபிக்கிறார்கள்; செபம் அதிகரிக்கின்றது. திருஅவையில் மிகவும் விலையுயர்ந்த மற்றும் அவசியமான ஒரு பணி இங்கே உள்ளது, குறிப்பாக யூபிலிக்கு தயாராகும் இந்த நேரத்தில்: "கடவுளின் திட்டங்களின்படி தூயவர்களின் பரிந்துபேசுதலின்படி தூய ஆவியுடன் நம்மை ஒன்றிணைப்பது மிக அவசியம். தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து இயேசுவை நோக்கி, “வருக! வருக!” என்கிறார்கள். நமது செபமானது கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லும் செபமாக இல்லாமல் மனதிற்குள்ளிருந்து எழும் செபமாக இருக்கவேண்டும். விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்தை செபிக்கும் போது பொருளுணர்ந்து அப்பா தந்தையே என அழைத்து செபிப்போம். இறைவா நீரே என் தந்தை உம்மை நான் அன்பு செய்கின்றேன் என்று செபிப்போம். நமது இந்த செபத்தில் நமது தேவையில் தூய ஆவியார் நமக்கு உதவுவாராக. நன்றி
இவ்வாறு தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த மக்கள் அனைவரையும்ம் வாழ்த்தினார். திருச்சிலுவை திருப்பீடப் பல்கலைக்கழகத்தார், அர்ஜெண்டினாவின் தூய மாற்கு அர்ஜென்டானோ-ஸ்கேலியா மறைமாவட்டத்தின் அருள்பணித்துவ மாணவர்கள் என அனைவரையும் வாழ்த்தினார். இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து செபித்த திருத்தந்தை அவர்கள், நம்பிக்கையில் நிலைத்திருக்கும் நற்செய்திக்கு சான்றாக தங்களது அன்றாட வாழ்வை வாழ அனைவரையும் ஊக்கப்படுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும் அமைதிக்காக பிரார்த்திப்போம். துன்புறும் உக்ரைன், காசா, இஸ்ரயேல், மியான்மார் மக்களுக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், வலென்சியா ஸ்பெயின் மக்களுக்காக செபிப்போம் என்று கூறி அருள் நிறைந்த மரியே செபத்தை அனைவரும் இணைந்து செபிக்க கேட்டுக்கொண்டு அனைவரோடும் இணைந்து செபித்தார். அதன் பின் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்