தலைநிமிர்ந்து நில்லுங்கள் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது
மெரினா ராஜ் - வத்திக்கான்
திருவருகைக்காலத்தின் முதல் வாரம் அண்டத்தின் எழுச்சி மற்றும் மனித குலத்தின் கவலை மற்றும் பயம் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், அத்தகைய நேரத்தில் இயேசு தனது சீடர்களிடம் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது என்ற எதிர்நோக்கின் வார்த்தைகளை எடுத்துரைக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருவருகைக் காலத்தின் முதல் வாரமும் முதல் நாளுமாகிய டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தலைநிமிர்ந்து மேல்நோக்கிப் பார்க்கவும், உள்ளங்களை விழிப்புணர்வு மற்றும் இலகுவானதாகக் கொண்டிருக்கவும் இயேசு அழைப்பு விடுக்கின்றார் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் கவலை தனது சீடர்களின் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு இறைமகனின் வருகைக்காக விழிப்புடன் காத்திருக்கவேண்டும் என்பதே என எடுத்துரைத்தார்.
இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்களில் பலர் தங்களைச் சுற்றி நடக்கும் துன்புறுத்தல்கள், மோதல்கள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சந்திக்கும்போது உலகத்தின் முடிவு வரப்போகிறது என்றே எண்ணினார்கள் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அம்மக்களில் உள்ளங்கள் பயத்தால் கனமானதாக மாறின என்றும் கூறினார்.
அவர்களின் தற்போதைய கவலைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளில் இருந்து அவர்களை இயேசு விடுவிக்க விரும்பினார் என்றும், அவர்கள் உள்ளங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், கடவுளின் திருவுளத்தை அறிந்து செயல்படுவதற்கேற்ற இளகிய மனதினைப் பெறவும் அதன் வழியாக வரலாற்றின் வியத்தகு நிகழ்வுகளுக்குள் மீட்பு செயலாற்றுகின்றது என்பதை அறியவும் வழிகாட்டினார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்ற வார்த்தையின் வழியாக விண்ணகத்தை நோக்கியே எப்போதும் நமது பார்வை இருக்கவேண்டும் என்று வலியுறுத்தும் இயேசு தேவையற்ற வீண் கவலைகளினால் நமது உள்ளம் மந்தம் ஆகாதவாறு கவனமாகச் செயல்பட வலியுறுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
நமது உள்ளத்தை எப்படி இலகுவானதாக, விழிப்புணர்வுள்ளதாக, விடுதலையடைந்ததாக வைத்திருப்பது? சோகம் நமது உள்ளத்தை நசுக்க விடலாமா என்பன போன்ற கேள்விகளை நாம் நமது வாழ்க்கையின் பல நேரங்களில் எழுப்புகின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சோகம் என்பது மிகவும் மோசமானது என்றும் எடுத்துரைத்தார்.
நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கவலைகள், அச்சங்கள் அல்லது உலகில் இன்றும் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய கவலைகள், கற்பாறைகளைப் போல நம்மைக் கடினப்படுத்துகின்றன நம்மை சோர்வடையச் செய்கின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கவலைகள் நம் உள்ளங்களைக் கனமானதாக்கி, நமக்குள் நாமே நம்மை மூடிக்கொள்ளும் சூழலை உருவாக்குகின்றன என்றும் அதற்கு மாறாக இயேசு அச்சூழலில் நம்மை தலைநிமிர்ந்து மீட்பை எதிர்நோக்கி பார்க்க அழைக்கின்றார் என்றும் கூறினார்.
நம்மை இக்கட்டான சூழலில் இருந்து காக்க விரும்பும் இறைவன் நமது எல்லாச் சூழலிலும் நம் அருகில் இருக்கின்றார், அவருடைய அன்பில் நம்பிக்கை வைக்க அழைக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நம்முடன் தனது உடனிருப்பை வெளிப்படுத்தும் இறைவன், நமது உள்ளத்தில் அவருக்கு இடமளித்து எதிர்நோக்கை மீண்டும் கண்டறிய அழைக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.
பயம், துன்பங்கள், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் ஆகியவற்றால் என் இதயம் கனமானதாகின்றதா? அன்றாட நிகழ்வுகளையும் வரலாற்றின் மாற்றங்களையும் கடவுளின் கண்களால், செபத்தில் பரந்துபட்ட எல்லையுடன் பார்ப்பது எப்படி என்று அறிந்துள்ளோமா அல்லது விரக்தியில் சிக்கிக் கொள்ள நம்மை நாம் அனுமதிக்கின்றோமா என்பன போன்ற கேள்விகளை நமக்குள் கேட்டு சிந்தித்துப் பார்க்க அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் பிறப்பிற்காக நம்மைத் தயாரிக்கும் இத்திருவருகைக் காலமானது, நமது இதயங்களை ஒளிரச் செய்யவும், நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மைத் தாங்கி நிற்கும் அவரை நோக்கி நம் பார்வையை உயர்த்தவும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையட்டும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், சோதனைக் காலங்களிலும் கடவுளின் திட்டத்தை ஏற்கத் தயாராக இருந்த கன்னி மரியாவை நமது வாழ்வின் துணையாக அழைப்போம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்