புதன் மறைக்கல்வி உரை - இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படும் சிறார்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜனவரி 15 புதன்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் பகுதி இரண்டு என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யூபிலி ஆண்டு 2025 ஐ முன்னிட்டு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இயேசுவின் குழந்தைப்பருவம் என்ற தலைப்பில் இப்புதிய தொடரின் முன்னுரையையும், கடந்த வார புதன்கிழமை இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் என்ற தலைப்பில் சிறு குழந்தைகள் பற்றிய தனது கருத்துக்களையும் எடுத்துரைத்தார். இன்று அதன் தொடர்ச்சியாக இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுவர்கள் குழந்தைகள் பகுதி 2 என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்தடைந்ததும் திருப்பயணிகள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களது மகிழ்வினை வெளிப்படுத்த சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் லூக்கா நற்செய்தியில் உள்ள யார் மிகப் பெரியவர்? என்னும் தலைப்பில் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
மத்தேயு 18 : 1-3, 6
அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் என்னும் தலைப்பின்கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்த்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
இன்று நாம் மீண்டும் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். கடந்த வாரத்தில், இயேசு தனது செயல் மற்றும் வார்த்தைகள் வழியாக, குழந்தைகளைப் பாதுகாத்தல், வரவேற்றல் மற்றும் அன்பு செய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தார் என்று அறிந்து கொண்டோம்.
இன்றும் உலகில், கோடிக்கணக்கான சிறார், தங்களது வயதுக்கு மேற்பட்ட பணிகளைச் செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்களில் பலர் குறிப்பாக ஆபத்தான பணிகளுக்கு ஆளாகின்றனர். அடிமைகளாக ஆண், பெண் குழந்தைகள் பாலியல் தொழில் அல்லது ஆபாசங்களுக்காகக் கடத்தப்படுகின்றனர். கட்டாயத் திருமணங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். நமது சமூகங்களில், பல குழந்தைகள் முறைகேடுகளுக்கு ஆளாக்கப்பட்டு, தவறாக நடத்தப்படுவதற்கான பல வழிகள் உள்ளன. குழந்தை முறைகேடுகளின் தன்மை எதுவாக இருந்தாலும், அது ஓர் இழிவான மற்றும் கொடூரமான செயல். இது சமூகத்தின் மீது ஏற்படும் ஒரு கொள்ளை நோயோ, ஒரு குற்றமோ மட்டுமல்ல; இது கடவுளின் கட்டளைகளை உறுதியுடன் மீறுவதாகும். எந்த குழந்தையும் முறைகேடுகளுக்கு ஆளாகக்கூடாது. ஒரு வழக்கு கூட அதிகரிக்கக்கூடாது. எனவே, நமது மனச்சான்ற எழுப்பி, முறைகேடுகளுக்கு ஆளான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடனான நெருக்கத்தையும் உறுதியான ஒற்றுமையையும் கடைப்பிடிப்பது அவசியம். அதே நேரத்தில் அவர்கள் அமைதியான முறையில் வளர வாய்ப்புக்களையும், பாதுகாப்பான இடங்களை வழங்குவதில் உறுதியாக இருப்பவர்களிடையே நம்பிக்கை மற்றும் ஒருங்கிணைப்பையும் உருவாக்குவது அவசியம். இலத்தீன் அமெரிக்காவில் அராந்தனோ என்ற சிறப்பு பழமானது பறிக்கப்பட மென்மையான கைகளை உடைய குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் அப்பணிக்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அதிகரிக்கும் வறுமை, குடும்பங்களை ஆதரிக்கப் பயன்படும் சமூக கருவிகள் இல்லாமை, ஓரங்கட்டல், வேலையின்மை, பாதுகாப்பற்ற பணி, ஆகியவை இளையோர் மற்றும் குழந்தைகளில் அதிகப்படியான சுமையை ஏற்படுத்துகின்றன. சமூகப் பிளவு, ஒழுக்கச் சீரழிவு ஆகியவற்றால் பாழாகிக் கொண்டிருக்கும் பெருநகரங்களில், போதைப்பொருள் வியாபாரத்திலும், பல்வேறு வகையான சட்டவிரோத நடவடிக்கைகளிலும் குழந்தைகள் பணியமர்த்தப்படுகிறார்கள். இக்குழந்தைகளில் பலர் தங்களது உயிரையே இழக்கின்றனர். சில நேரங்களில் அவர்கள் உடன் வாழ்பவர்களை தண்டிப்பவர்களாகவும் மாறுகின்றனர். அவர்களின் மாண்பையும், மனித நேயத்தையும் பாதிப்படையச் செய்யத் தூண்டப்படுகின்றார்கள். நமது தெருக்கள், பங்குத்தளங்களின் சுற்றுப்புறங்கள் போன்ற இடங்களில் இந்நிகழ்வுகளைக் காணும்போது நாம் அதனைப் பார்க்காமல் நமது பார்வையை கவனத்தை வேறுபக்கம் திருப்புகின்றோம். எனது ஊரில் லோஆன் ன்ற சிறுவன் கடத்தப்பட்டான். எங்கு சென்றான் என்ரு தெரியவில்லை சிலர் தங்களது உடல் உறுப்புக்கள் திருடப்பட்டு வீடு வந்துசேர்கின்றனர். மற்றும் சிலர் இறக்கின்றனர்.
ஒரே சுற்றுப்புறத்தில் அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தால், முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கைப் பாதைகளைத் தேர்ந்தெடுக்கின்றது. இது சமூக அநீதி. இயேசு நம் அனைவரையும் முழுமன சுதந்திரத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வைக்க விரும்புகிறார்; ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் தனது மகன் மற்றும் மகளாக அன்பு செய்கின்றார். தனது மென்மையான இதயத்தினால் குழந்தைகளை அன்பு செய்கின்றார். குரலற்றவர்கள், கல்வியற்றவர்கள் துன்புறுவோர்கள் ஆகியோரின் துயரங்களைக் கேட்கும்படி அவர் நம்மைக் கேட்டுக்கொள்கிறார். முறைகேடுள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளை எதிர்த்துப் போராடுவது, சமூகத்தின் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உயரிய பாதையாகும். உலகின் சில பகுதிகள் ஞானத்துடன் குழந்தைகளுக்குரிய உரிமைகளை எழுதுதியுள்ளனர். குழந்தைகளுக்கும் உரிமை உள்ளது. இணையத்தில் அவை என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்
எனவே நம்மை நாமே கேட்டுக்கொள்வோம். குழந்தை முறைகேடுகளுக்கு எதிராக நம்மால் என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம். குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க விரும்பினால், அதில் நாம் உடந்தையாக இல்லை என்பதை உறுதிசெய்வோம். உதாரணமாக, குழந்தைத் தொழிலாளர்களை வைத்து செய்யப்படும் பொருட்களை வாங்கும்போது, அந்த உணவு அல்லது அந்த ஆடைகளுக்குப் பின்னால் முறைகேடுகளுக்கு ஆளான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குப் பதிலாக வேலை செய்கிறார்கள் என்பதை அறிந்தால் அந்த உணவை நம்மால் எப்படி உண்ண முடியும், எப்படி அந்த உடையை அணிய முடியும்? இத்தகைய விழிப்புணர்வே குழந்தை முறைகேடுகளுக்கு நாம் ஆதரவாக இல்லை என்பதன் முதல் அடையாளம். தனிநபர்களாக நம்மால் அதிகம் செய்ய முடியாது என்று சிலர் கூறுவார்கள். அது உண்மைதான், ஆனால் சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொன்றும் ஒரு துளியாக இருந்தாலும் அது பல துளிகளுடன் சேர்ந்து கடலாக மாறக்கூடும். தலத்திருஅவை நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் பொறுப்பினை செயலாற்ற அழைக்கப்படுகின்றார்கள். குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தாத அல்லது அனுமதிக்காத நிறுவனங்களுக்கு தங்கள் முதலீடுகளை மாற்றுவதன் வழியாக அவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல மாநிலங்களும் பன்னாட்டு அமைப்புகளும் ஏற்கனவே குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களையும் உத்தரவுகளையும் இயற்றியுள்ளன, எனவே இன்னும் பலவற்றையும் நம்மால் செய்ய முடியும். பத்திரிகையாளர்களும் குழந்தை முறைகேடுகள் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தீர்வுகளைக் கண்டறியவும் உதவலாம். இதன் வழியாக தங்களது பங்கினை ஆற்ற அவர்களை அழைக்கின்றேன். அஞ்சாது அவர்களுக்கு எதிரான முறைகேடுகளை எதிர்த்து செயலாற்றுங்கள்.
குழந்தைகள் மிக விரைவாக பெரியவர்களாக மாறி விடுகின்றார்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அவர்களைக் குழந்தைகள் போன்று பாரமரிக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்ற இயேசுவின் இறைவார்த்தைகளை எப்போதும் நினைவில் கொள்வோம். கடவுளுடைய திராட்சைத் தோட்டத்தில் மகிழ்ச்சியான தொழிலாளியான கல்கத்தாவின் புனித தெரசா, மிகவும் பின்தங்கிய மற்றும் மறக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு தாயாக இருந்தார். அவருடைய பார்வையின் மென்மை மற்றும் அக்கறையுடன், கண்ணுக்குத் தெரியாத சிறியவர்கள் அடிமைகள் போன்றோரைப் பார்க்க அவர் நம்முடன் வருகின்றார். உலகின் அநீதிகளுக்கு நாம் அவர்களை விட்டுவிடக்கூடாது. ஏனெனில் பலவீனமானவர்களின் மகிழ்ச்சி அனைவரிலும் அமைதியையும் உருவாக்குகிறது. புனித அன்னை தெரசாவுடன் நாம் குழந்தைகளுக்கு குரல் கொடுப்போம்.
“நான் விளையாடக்கூடிய ஒரு பாதுகாப்பான இடத்தைக் கேட்கிறேன்.
அன்பு கொள்ளத் தெரிந்தவர்களிடமிருந்து. ஒரு புன்னகையைக் கேட்கிறேன்.
சிறந்த உலகத்தின் குழந்தையாக இருப்பதற்கான உரிமையை,
எதிர்நோக்குடன் இருப்பதற்கான உரிமையை நான் கேட்கிறேன்.
ஒரு மனிதராக வளர உரிமையை நான் கேட்கிறேன்.
நான் உங்களை நம்பலாமா?” (கல்கத்தாவின் புனித தெரசா)
அனைவருக்கும் நன்றி
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவுச் செய்ததும் சிர்கோ என்னும் சாகச விளையாட்டு வீர்ர்கள் தங்களது வீர விளையாட்டுக்களைத் திருத்தந்தை முன் நிகழ்த்தி காண்பித்தனர். அவர்களை வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக அமைதிக்கான தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்தார்.
அண்மையில் மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் உள்ள சுரங்கப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பலர் வீடுகளை இழந்தும், உயிரிழந்துள்ளனர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருடனும் தனது ஆழ்ந்த ஆன்மிக நெருக்கத்தை ஏற்படுத்தினார்.
இத்தாலிய திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை துன்புறுத்தப்பட்ட உக்ரைன், மியான்மர், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் போரில் ஈடுபட்டுள்ள பல நாடுகளை நாம் மறந்துவிட வேண்டாம், அமைதிக்காக ஜெபிப்போம் என்றும், போர் எப்போதும் தோல்விதான் எனவே ஆயுத உற்பத்தியாளர்களின் இதயங்களை இறைவன் மாற்ற தொடர்ந்து செபிப்போம் என்றும் கூறினார். விண்ணகத்தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்