புதன் மறைக்கல்வி உரை – இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஜனவரி 8 புதன்கிழமை புதிய ஆண்டின் முதல் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்ப்பதற்காக உலகின் பல பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்தனர். கடந்த ஆண்டின் டிசம்பர் 18 அன்று யூபிலி ஆண்டினை முன்னிட்டு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கிய திருத்தந்தை அவர்கள், அதன் இரண்டாம் பகுதியாக இன்று இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் என்னும் தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.
சிலுவை அடையாளத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கூட்டத்தினை ஆரம்பிக்க லூக்கா நற்செய்தியில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு ஆசி வழங்குதல் என்னும் தலைப்பில் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
லூக்கா 18: 15 - 17
குழந்தைகளை இயேசு தொடவேண்டும் என்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர். இதைக் கண்ட சீடர் அவர்களை அதட்டினர். ஆனால், இயேசு அவர்களைத் தம்மிடம் வரழைத்து, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று சீடர்களிடம் கூறினார்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நமது எதிர்நோக்காம் இயேசுகிறிஸ்து என்னும் புதிய தொடரின் இரண்டாம் தலைப்பாக இறைத்தந்தையால் அதிகமாக அன்பு செய்யப்படுபவர்கள் என்னும் தலைப்பின்கீழ் தனது கருத்துக்களை எடுத்துரைத்த்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
இந்த மறைக்கல்வி உரைக் கருத்துக்களையும் இதற்கு அடுத்த வாரம் வரும் மறைக்கல்வி உரைக் கருத்துக்களையும் சிறு குழந்தைகளுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி சிந்திப்போம். இன்று செவ்வாய்க் கிரகம் அல்லது மின்னனு உலகங்களை நோக்கி நம் கண்களைத் திருப்புவது எப்படி என்று நமக்குத் தெரிகின்றது. ஆனால் விளிம்பில் விடப்பட்ட மற்றும் சுரண்டப்பட்டு முறைகேடுகள் செய்யப்பட்ட குழந்தையின் கண்களைப் பார்ப்பது நமக்குக் கடினமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவை உருவாக்கி, பல கிரக இருப்பை வடிவமைக்கும் இக்காலமானது, அவமானப்படுத்தப்பட்டு, சுரண்டப்பட்டு, காயமுற்று இறந்த குழந்தைப் பருவத்தின் துன்பத்தினைக் கண்டுகொள்ளவில்லை.
முதலில், குழந்தைகளைப் பற்றி திருவிவிலியம் நமக்கு என்ன செய்தியை அளிக்கிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முயல்வோம். பழைய ஏற்பாட்டில், யாவே என்னும் கடவுளின் பெயர். ஏறக்குறைய ஐயாயிரம் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டவருடைய சொத்து அவரது மகன். பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில். கடவுள் கொடுத்த கொடைகளாகிய இக்குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக, மரியாதையுடனும் மாண்புடனும் நடத்தப்படுவதில்லை. திருவிவிலியம் நம்மை மகிழ்ச்சியின் பாடல்கள் ஒலிக்கின்ற வரலாற்றின் தெருக்களுக்கு அழைத்துச் செல்கிறது. ஆனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் அழுகைகளும் எழுகின்றன. உதாரணமாக, புலம்பல் புத்தகத்தில் நாம் பார்ப்பது போல, பால்குடி மறவாத மழலைகளின் நாவு தாகத்தால் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்! பச்சிளங் குழந்தைகள் கெஞ்சுகின்ற உணவுதனை அளித்திடுவார் யாருமிலர்! என்ற வரிகள் துன்புறும் குழந்தைகளின் நிலையை எடுத்துரைக்கின்றது. மேலும் இறைவாக்கினர் நாகூம் பண்டைய நகரங்களான தீப்ஸ் மற்றும் நினிவேயில் என்ன நடந்தது என்பதை நினைவுகூர்ந்து, குழந்தைகள் தெருக்கள் தோறும் மோதியடிக்கப்பட்டனர்; என்று எடுத்துரைக்கின்றார். இன்றும் எத்தனையோ குழந்தைகள் பசி, துன்பம் மற்றும் வெடிகுண்டுகளால் சிதைக்கப்படுகின்றார்கள். இது பற்றி நாம் சற்று சிந்திப்போம்.
பிறந்த குழந்தையாகிய இயேசுவின் மீதும் ஏரோதின் வன்முறைப் புயல் வெடித்தது. இதனால் பெத்லகேமில் இருந்த பிறந்த குழந்தைகளைக் கொன்ற இந்த நிகழ்வு வரலாற்றில் மற்ற வடிவங்களில் மீண்டும் மீண்டும் நடைபெறும் ஓர் இருண்ட நாடகமாக உள்ளது. இயேசுவுக்கும் அவருடைய பெற்றோருக்கும், இன்று பலருக்கு நடப்பது போல, வேற்றுநாட்டில் அகதிகளாக மாறும் சூழல் ஏற்படுகின்றது. வன்முறைப் புயல் கடந்து சென்ற பிறகு, பழைய ஏற்பாட்டில் பெயர் கூடக் குறிப்பிடப்படாத நாசரேத் என்ற கிராமத்தில் இயேசு வளர்கிறார்; அவர் தனது சட்டப்பூர்வ தந்தையான யோசேப்பின் தச்சுத்தொழிலைக் கற்றுக்கொள்கிறார் குழந்தை இயேசுவும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்து வந்தார்.
இயேசு தன்னுடைய பொதுவாழ்க்கையில் தனது சீடர்களுடன் இணைந்து கிராமங்களில் இறையரசுப் பற்றியக் கருத்துக்களை எடுத்துரைத்து வந்தார். அப்போது ஒருநாள் ஒரு சில தாய்மார்கள் தங்களதுக் குழந்தைகளை அவரிடம் கொண்டுவந்து ஆசீர்வதிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். சீடர்களோ அவர்களை அதட்டினர். இயேசுவோ செயலற்ற பொருளாகக் குழந்தைகளை நினைக்கும் பண்டைய மரபை உடைக்க நினைத்தார் இயேசு. அவர்களைத் தம்மிடம் வரழைத்து, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள்; ஏனெனில், இறையாட்சி இத்தகையோருக்கே உரியது என்று சீடர்களிடம் கூறினார். இதன் வழியாக சிறுவர்கள் பெரியோர்களுக்கு உதாரணமாக இருக்க வலியுறுத்துகின்றார். எனவே தான், இறையாட்சியைச் சிறு பிள்ளையைப் போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று வலியுறுத்துகின்றார்.
இதேபோன்று மத்தேயு நற்செய்தியில் ஒரு பகுதியில் சிறு குழந்தை ஒன்றை சீடர்கள் நடுவில் நிறுத்தி, “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று எடுத்துரைக்கின்றார். மேலும், “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டித் தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது என்று எச்சரிக்கின்றார்.
சகோதர சகோதரிகளே, இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பவர்கள், குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதையோ, முறைகேடுகள் செய்யப்படுவதையோ, உரிமைகள் பறிக்கப்படுவதையோ, அன்பற்றவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் அவர்கள் இருப்பதையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அல்லது முறைகேடுகள் செய்யப்படுவதைத் தடுக்கவும் கடுமையாக கண்டிக்கவும் கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.
இன்றும், குறிப்பாக, பல சிறார்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் சிரிக்காத, கனவு காணாத குழந்தையால் தனது திறமைகளை அறிந்து கொள்ளவோ, அல்லது வளர்ந்து துளிர்விடவோ முடியாது. பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் வாழ்க்கையை மதிக்காத பொருளாதாரச் சுரண்டலால் பாதிக்கப்பட்டக் குழந்தைகள் உள்ளனர்; இத்தகைய பொருளாதாரம் நமது எதிர்நோக்கு அன்பு என்னும் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தை எரித்து விடுகின்றது. குழந்தைகள் கடவுளின் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளனர், மேலும் ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவிப்பவர் கடவுளிடம் கட்டாயம் கணக்குக் கொடுக்கவேண்டும்.
அன்பான சகோதர சகோதரிகளே, தங்களை கடவுளின் பிள்ளைகளாக அங்கீகரிப்பவர்கள், குறிப்பாக மற்றவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வர அனுப்பப்பட்டவர்கள், ஒருபோதும் அலட்சியமாக இருக்க முடியாது; சிறிய சகோதர, சகோதரிகளாகிய குழந்தைகள், அன்பு செய்யப்படுவதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் பதிலாக, அவர்களின் குழந்தைப் பருவம், மற்றும் கனவுகள், சுரண்டல் மற்றும் விளிம்புநிலைக்கு பலியாவதை அவர்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நம் மனதையும் இதயத்தையும் அக்கறைக்கும் மென்மைக்கும் திறக்கும்படி இறைவனிடம் வேண்டுவோம், மேலும் உலகில் உள்ள ஒவ்வொரு சிறுகுழந்தையும் வயதிலும், ஞானத்திலும், கருணையிலும் வளரவும் அன்பைப் பெறவும், கொடுக்கவும் செபிப்போம். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை நிறைவுச் செய்ததும் ஆப்ரிக்கா கலைஞர்கள் பல வண்ண நிறங்களில் உடையணிந்து நடன அசைவுகள் மற்றும் பாடல்கள் வழியாக அரங்கத்தில் இருந்த அனைவரையும் மகிழ்வித்தனர்.
கலைநிகழ்ச்சிக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலக அமைதிக்கான தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்தார். சிர்கோ என்னும் சாகச நிகழ்ச்சி அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தரக்கூடியது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள் கலைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்தார்.
இத்தாலிய மொழி பேசும் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அட்ரியா மற்றும் ஆல்பா அட்ரியாட்டிகா திருப்பயணிகள், அனைவரும் அவரவர் தலத்திரு அவைகளில், தங்களது நம்பிக்கைப் பயணத்தை முழுமையாக வாழ ஊக்கப்படுத்தினார்.
ஓரியானியின் ஃபென்ஸா நிறுவன மாணவர்கள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உடன் வாழ்பவர்கள் மத்தியில் கிறிஸ்துவைப் பற்றிய விழிப்புணர்வூட்டும் சாட்சிகளாக இருக்க அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கர்தினால் கம்பெத்தி அவர்களின் 25 ஆவது ஆண்டு குருத்துவ வாழ்வை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளையும் நினைவுகூர்ந்து வாழ்த்தி செபித்தார். திருக்காட்சிப் பெருவிழாவிற்குப் பின்வரும் இந்நாட்களில், எல்லா மக்களுக்கும் கிறிஸ்துவாக விளங்கும் இயேசுவைப் பற்றி ஆழமாகத் தொடர்ந்து தியானிப்போம் என்றும் கூறினார். திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற ஒவ்வொருவரும், வார்த்தை மனு உருவானவரின் மகிமை ஒளியை தங்களது சொந்த வாழ்க்கையில் பிரதிபலிக்க திருஅவை அழைக்கிறது.
மேலும் அமைதிக்காக ஜெபிக்க மறக்க வேண்டாம், போரினால் துன்புறும் உக்ரைன், இஸ்ரயேல், நாசரேத் பகுதி மக்களுக்காக செபிக்க மறக்கக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிப்போம், போர் எப்போதும் தோல்விதான் இதனை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது செப விண்ணப்பங்களை நிறைவுசெய்ததும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்