தேடுதல்

பொதுநலனைத் தேடுவதில் ஒற்றுமை உணர்வோடு வாழ..

உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மற்றும் சூடானில், போரினால் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம். போரினால் பல காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான சிரியாவை மறந்து விடவேண்டாம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அனைத்து அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது சுய விருப்பத்தை விட்டுவிட்டு, பொதுநலனைத் தேடுவதில் ஒற்றுமை உணர்வோடு தங்களை அர்ப்பணித்து வாழவும், பன்னாட்டு சமூகத்தின் உதவியுடன் நாட்டின் அமைதியான மாற்றத்திற்கு ஆதரவளித்து, மக்களிடையே ஒழுங்கையும் அமைதியையும் திரும்பக் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவர்களாக வாழவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் இவ்வாறுக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹெய்டியில் கடத்தப்பட்ட அருள்சகோதரர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டதையும் தெரிவித்தார்.

ஹெய்ட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் 23 அன்று கடத்தப்பட்ட திருஇருதயசபை (Frères du Sacré-Cœur) அருள்சகோதரர்கள் ஆறுபேரில் நால்வரும், ஓர் ஆசிரியரும் விடுவிக்கப்பட்டுள்ளதை அறிந்ததாகவும். மீதமுள்ள இரு சகோதரர்களும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் வலியுறுத்துவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மற்றும் சூடானில், போரினால் துன்புறுத்தப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும், போரினால் பல காலமாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடான சிரியாவை மறந்து விடவேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்தத் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், இஸ்பெயினின் "கேம்ப்ளஸ்" பல்கலைக்கழக மாணவர்கள், மாட்ரிட், பெஸ்காரா, கியேத்தி, லோகோரோதோண்தோ மற்றும் உரோமில் உள்ள தூய ஜொவான்னி லியோனார்டி பங்குத்தள மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

கோமோவின் தூய யோசேப்பு சமூக கூட்டுறவு சங்கத்தார், பெருஜியா சிறார், போலோஞ்னா இளைஞர்கள், பவியா, ஐலோ தி பிராதோ மற்றும் கேவியன் வெரோனீஸ் மறைமாவட்டத்தைசார்ந்த உறுதிப்பூசுதல் அருளடையாளம் பெற உள்ளவர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

விளையாட்டு மற்றும் உடன்பிறந்த உணர்வைப் பாரம்பரியமாகக் கொண்டு நடைபெறும் உரோம் மாரத்தானில் பங்கேற்பவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற திருத்தந்தை அவர்கள், இந்த ஆண்டும், வத்திக்கான் விளையாட்டமைப்பின் முயற்சியால் ஏராளமான விளையாட்டு வீரர்கள் "ஒற்றுமைத் தொடர் ஓட்டங்களில்" ஈடுபட்டு, பகிர்வின் சாட்சிகளாக மாறி வருகின்றனர் என்றும் கூறினார்.

இவ்வாறு தனது விண்ணப்பங்களையும் வாழ்த்துக்களையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை அவர்கள், தனக்காக செபிக்க மறக்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு தனது ஞாயிறு மூவேளை செப உரையினை நிறைவுசெய்தார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 March 2024, 12:20

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >