தேடுதல்

முன்னோக்கிச் செல்வதற்கான முதல் அடியினை எடுக்கத் தயங்காதீர்

நமது பாதையைத் தெளிவாகவும், பாதுகாப்பானதாகவும், அனைவருக்கும் உறுதியானதாகவும் மாற்ற நாம் எடுக்க வேண்டிய பல முதல் படி, துன்பப்படுபவர்களுடன் நெருக்கம், மன்னிப்பு, இரக்கம், நல்லிணக்கம் கொண்ட பரந்த ஒளி நிறைந்த ஜன்னல்களை திறப்பது – திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இன்றைய உலகில் பல சவால்கள் மற்றும் முரண்பாடுகளை நாம் எதிர்கொண்டாலும் கடவுள் நம்மை அடைவதற்கான வழிகளை ஒருபோதும் நிறுத்த மாட்டார் என்றும், முன்னோக்கிச் செல்வதற்கான முதல் அடியினை எடுக்க நாம் ஒருபோதும் தயங்க வேண்டாம், அஞ்சவேண்டாம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 5 ஞாயிற்றுக்கிழமை புதிய ஆண்டின் முதல் வாரத்தில் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய நற்செய்தி வாசகமான யோவான் நற்செய்தியின், வாக்கு மனிதராதல் என்னும் பகுதி குறித்தக் கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

வாக்கு என்னும் கடவுளிடம் வாழ்வு இருந்தது, அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது, அந்த ஒளி இருளில் மிளிர்ந்தது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், அந்த ஒளியின் மேல் இருள் வெற்றி கொள்ளவில்லை என்பது பல்வேறு தடைகள், நிராகரிப்புக்கள் இருந்தாலும் நம் பாதையில் தொடர்ந்து நாம் பயணிக்க, கடவுளின் அன்பு நம் பாதையை ஒளிரச்செய்கின்றது என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.

நமது பாதையை ஒளிரச்செய்வதன் வழியாகக் கடவுளின் அன்பு, எத்தனை வல்லமை மிக்கது என்பதைக் கடவுள் வெளிப்படுத்துகின்றார் என்றும், பல்வேறு தடைகள் மற்றும் எதிர்ப்பின் சுவர்களை உடைத்து மனிதனாகக் கடவுளின் மகன் பிறந்த கிறிஸ்து பிறப்பு பெருவிழாவானது இத்தகையக் கடவுளின் அன்பை நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவின் பிறப்பினால் உள்ளம் கலங்கிய ஏரோது மன்னன் பாலன் இயேசுவைக் கொலை செய்ய தேடியபோது மரியாவும் யோசேப்பும் தங்களது எளிமை மற்றும் தாழ்ச்சியுணர்வால் இயேசுவைக் காப்பாற்றினார்கள், எகிப்துக்கு தப்பி ஓடினார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவுடன் அவரது பெற்றோர்கள் தங்களது வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்கள் என்றும், அன்பு, தாழ்ச்சி மற்றும் எளிய மனம் கொண்டவராக அவரை வளர்த்தார்கள் என்றும் கூறினார்.

கடுமையான வாழ்க்கை முறை, சமூகத்தின் அவமதிப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளும் இதயம் கொண்ட இடையர்கள் தன்னைச் சந்திக்க வந்தபோது இயேசு, பலவீனமானவராக உதவியற்றவராக சிறுகுழந்தையாக தன்னை வெளிப்படுத்துகின்றார் என்றும், அதே போல இயேசுவைக் காணும் ஆவலுடன் பல மைல்தூரம் பயணம் செய்துவந்த ஞானிகளுக்கு சாதாரண எளிய குடிலில், வறுமை நிலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது என்ற எசாயா இறைவாக்கினரின் வார்த்தைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், இந்த இறைவார்த்தைகள் கடினமான இவ்வுலகச் சூழலில் நமக்கு துணிவையும், ஆறுதலையும், ஒளி, அமைதி எதிர்நோக்கு ஆகியவற்றையும் உறுதியளிக்கின்றன என்றும் கூறினார்.  

சிக்கலான சூழ்நிலைகளை உருவாக்கும் உலகத்திலிருந்து வெளியேறுவது சாத்தியமில்லை என்று நமக்குத் தோன்றினாலும், குடும்பம், சமூகம், பன்னாட்டு சூழல் என எல்லாச் சூழலிலும், யாரைச் சந்தித்தாலும், எங்கிருந்தாலும், அன்பின் கடவுளைப் பின்பற்றி, ஒளியின் கதிர்களை பரப்பும்படி கடவுளின் வார்த்தைகள் நம்மை அழைக்கின்றன என்றும், முன்னோக்கிச் செல்வதற்கான அடியை எடுத்து வைக்கத் தயங்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

நமது பாதையைத் தெளிவாகவும், பாதுகாப்பானதாகவும், அனைவருக்கும் உறுதியானதாகவும் மாற்ற நாம் எடுக்க வேண்டிய பல முதல் படி, துன்பப்படுபவர்களுடன் நெருக்கம், மன்னிப்பு, இரக்கம், நல்லிணக்கம் கொண்ட பரந்த ஒளி நிறைந்த ஜன்னல்களை திறப்பது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இதுவே இந்த யூபிலி ஆண்டில் எதிர்நோக்கின் தூதுவர்களாக நாம் இருப்பதற்கான ஒரே வழி, வாழ்விற்கு ஆம் என்று பதிலளித்து முக்தி பெற ஒரே வழி என்றும் எடுத்துரைத்தார்.

நமது வாழ்க்கைச் சூழலிலும், உறவுகளிலும் ஒளியின் ஜன்னல்களை எவ்வாறு திறப்பது? கடவுளின் அன்பை அனுமதிக்கும் ஒரு ஒளி ஊடுருவும் பகுதியாக எங்கே இருக்க முடியும்? அதற்கு இன்று நாம் எடுக்க வேண்டிய முதல் படி என்ன? என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவை நோக்கி நம்மை வழிநடத்தும் விண்மீனான அன்னை மரியா, தந்தையின் அன்பினைப் பிரகாசிக்கும் சாட்சிகளாக இருக்க நமக்கு உதவுவாராக என்றும் கூறி மூவேளை செபஉரையைத் தொடர்ந்த தனது ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2025, 15:47

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >