தேடுதல்

எதிர்நோக்கைக் கொண்ட அன்னையின் இதயம்

அன்னை மரியின் இதயம் எதிர்நோக்கை இதயத்துடிப்பாகக் கொண்டிருந்தது. இத்தகைய மீட்பின் எதிர்நோக்கானது ஒவ்வொரு படைப்பின் மீட்பை தன்னுள்ளத்தில் கொண்டிருந்தது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அன்னை மரியா பாடலுடன் புத்தாண்டு திருப்பலி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழக்கமாக மூவேளை செப உரை வழங்கும் இடத்திலிருந்து தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் மூவேளை செப உரைக் கருத்துக்கள்.

லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இடையர்களும் வானதூதர்களும் என்ற தலைப்பின் கீழ் உள்ள நற்செய்தி வாசகம் குறித்த கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் இடையர்கள் கண்டார்கள். மீட்பர் கிறிஸ்து ஆண்டவர் என்று பாலன் இயேசுவைப் புகழ்ந்தார்கள் என்றும் கூறினார்.

பெத்லகேமில் இடையர்கள் மாட்டுத்தொழுவத்தில் கண்ட  குழந்தை இயேசு, எல்லாவற்றையும் மனதில் வைத்து சிந்தித்து தியானித்த மரியாவின் இதயம் ஆகியவற்றைக் குறித்து சிந்திப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக மீட்பரான இயேசுவை குறித்து சிந்திப்போம். கடவுள் மனிதராகப் பிறந்து நமக்கு வாழ்வளிப்பதற்காக தனது வாழ்வை நமக்குக் கொடையாகக் கொடுப்பதற்காக வந்தார். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளாக இருந்தாலும் நாம் யாரும் நமது பிறப்பை தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால் இறைமைந்தனாகிய இயேசு மனித பிறப்பைத் தேர்ந்தெடுத்தார். கடவுளது அன்பின் வெளிப்பாடாக பிறந்தார். அமைதியை உலகிற்குக் கொண்டு வந்தார்.

பாலன் மெசியா, இறைத்தந்தையின் இரக்கத்தையும் பதிலளிக்கும் அன்னை மரியாவின்  இதயத்தையும் ஒத்ததாக வெளிப்படுகின்றது. அன்னை மரியின் இந்த இதயம் வானதூதரின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும் செவியாக, யோசேப்பை மணக்க அளித்த கரமாக, முதிர்வயதினரான எலிசபெத்தை அரவணைக்கும் கரங்களாக இருந்தது. அன்னை மரியின் இதயம் எதிர்நோக்கை இதயத்துடிப்பாகக் கொண்டிருந்தது. இத்தகைய மீட்பின் எதிர்நோக்கானது ஒவ்வொரு படைப்பின் மீட்பை தன்னுள்ளத்தில் கொண்டிருந்தது.

அன்னையர்கள் தங்களது பிள்ளைகளுக்கான இதயத்தை எப்போதும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆண்டின் முதல் நாளாகிய இன்று உலக அமைதிக்காக அர்ப்பணிக்கப்படுகின்றது. எனவே இந்நாளில் உலகில் இருக்கும் அனைத்து அன்னையர்களுக்காகவும் செபிப்போம். போர், வன்முறை, துன்பம், முறைகேடுகள், வெறுப்பு என பலவகையான மாறுபட்ட சூழல்களில் வாழும் மக்கள் அனைவருக்காகவும் செபிப்போம். அன்னையரின் இதயங்களை உடைக்கும் போர் எவ்வளவு மனிதாபிமானமற்றது!

      

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 January 2025, 16:34

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >