தேடுதல்

மறைக்கல்வியுரை - போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நாள்

சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள எண்ணற்ற இளையோரின் வாழ்வுக்கு எவ்வளவு பெரிய தீமையை ஆற்றியுள்ளார்கள் என்பதை போதைபொருள் வியாபாரிகள் எண்ணிப்பார்க்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தலைப்பில், ஒரு புதிய மறைக்கல்வித் தொடரைத் துவக்கி கடந்த நான்கு வாரங்களாக வழங்கிவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் புதனன்று, அதாவது ஜூன் மாதம் 26ஆம் தேதி, அதற்கு ஓர் இடைவெளிவிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து தன் கருத்துக்களை அந்நாளில் பகிர்ந்துகொண்டார். ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 26ஆம் தேதி, “போதைப்பொருள் தவறாக பயன்படுத்தப்படல், மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான அனைத்துலக நாள்” உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படுவதையொட்டி திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வியுரை இருந்தது. முதலில் புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் இருந்து ஒரு பகுதி பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டது.

“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு”; ஆனால், எல்லாம் நன்மை தரக்கூடியவையல்ல. “எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால், எதற்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். “வயிற்றுக்கென்றே உணவு, உணவுக்கென்றே வயிறு.” இவை இரண்டையுமே கடவுள் அழித்து விடுவார். உடல் பரத்தைமைக்கு அல்ல, ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர். ஆண்டவரை உயிர்த்தெழச் செய்த கடவுள் தம் வல்லமையால் நம்மையும் உயிர்த்தெழச் செய்வார் (1 கொரி 6:12-14).

இப்பகுதி வாசித்தளிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வுகள் இடம்பெற்றன.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, காலை வணக்கம்.

1987ஆம் ஆண்டு ஐ.நா. அவையால் உருவாக்கப்பட்ட, “போதைப்பொருள் தவறாக பயன்படுத்தப்படல், மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான அனைத்துலக நாள்”  இன்று நினைவுகூரப்படுகிறது. “ஆதாரங்கள் தெளிவாக உள்ளன : தடுப்பு நடவடிக்கைகளில் முதலீடுச் செய்வோம்” என்பது இவ்வாண்டின் இந்நாளுக்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.  புனித திருத்தந்தை ஜான் பால் அவர்கள் வலியுறுத்துவதுபோல், “போதைப்பொருள் பயன்பாடு என்பது, அதை பயன்படுத்தும் ஒவ்வொரு சமூகத்தையும் வறுமைக்கு உள்ளாக்குகிறது. இது மனிதகுல வலிமையையும், தார்மீகத் திறனையும் குறைக்கிறது. இது உயர் மதிப்பீடுகளைக் குறைத்து மதிப்பிடுகின்றது. வாழ்வதற்கும், நல்சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இருக்கும் விருப்பார்வத்தை இது அழித்து ஒழிக்கின்றது”. அதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையாயிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கதை உள்ளது. அதற்கு செவிமடுக்கவும், அதனைப் புரிந்துகொள்ளவும், அவர்களை அன்புகூரவும், முடிந்தவரையில் குணப்படுத்தி  தூய்மையாக்கவும் நாம் முன்வர வேண்டும். ஏனெனில், அவர்கள் ஒவ்வொருவரும், எக்காலத்திலும், தற்போதும், கடவுளின் குழந்தைகளுக்குரிய மாண்பைக் கொண்டுள்ளனர்.

இருப்பினும் நாம் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் கடத்துவோரின் தீய எண்ணங்களையும் தீச்செயல்களையும் புறந்தள்ளிவிட முடியாது. திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், நோயாற்றும் குழு ஒன்றை சந்திக்கச் சென்றபோது பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளை இப்போது நினைவு கூர்வோம். “சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள எண்ணற்ற இளையோர் மற்றும் வயதுவந்தோரின் வாழ்வுக்கு எவ்வளவு பெரிய தீமையை ஆற்றியுள்ளார்கள் என்பதை போதைபொருள் வியாபாரிகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என அவர்களை விண்ணப்பிக்கின்றேன். உங்களின் செயல்களுக்கு கடவுள் முன் நீங்கள் பதிலுரைக்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்வது போன்ற வழிகளில் மனித மாண்பு ஒரு நாளும் மிதிபடக் கூடாது” என்றார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட். போதைப்பொருள் பயன்பாடு மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவதன் வழியாக போதைப்பொருள் அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற பரிந்துரையாலோ, அல்லது சிலநாடுகளில் அக்கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாலோ இப்பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியாது.  போதைப்பொருளுக்கு அடிமையானோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் துயரக் கதைகளைக் கேட்கும்போது, இந்த அபாயகரமான பொருளின் உற்பத்தி மற்றும் கடத்தலைத் தடுக்க வேண்டியது நமது ஒழுக்கரீதி சார்ந்த கடமை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

எவ்வகையிலும் பணத்தையும் அதிகாரத்தையும் கைக்கொள்ளவேண்டும் என்ற முயற்சியில் போதைப்பொருள் கடத்தலில் எத்தனையோ மரணங்கள் இடம்பெற்றுள்ளன. வன்முறைகளை உருவாக்கி, துன்பங்களையும் மரணத்தையும் விதைக்கும் இந்த பெரும் நோய் அகற்றப்பட, சமூகம் முழுமையின் மனவுறுதி தேவைப்படுகின்றது. போதைப்பொருள் தயாரிப்பும் கடத்தலும் நம் பொது இல்லமாகிய பூமியின் மீது பெரும் பாதிப்பைக் கொண்டுள்ளன. இது இன்றைய காலங்களில் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக, அமேசான் காட்டையொட்டியப் பகுதிகளில்.

போதைப்பொருட்களை எதிர்த்துப் போராடுவது என்பது, தடுப்பு நடவடிக்கைகள் வழி இயலும். அதாவது, நீதியான வழிகளை ஊக்குவித்தல், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வைக் கட்டியெழுப்பும் மதிப்பீடுகளில் இளையோருக்கு கல்வி கற்பித்தல், உதவித் தேவைப்படுவோருக்கு உடனிருந்து உதவுதல், வருங்காலத்திற்கான நம்பிக்கையை ஊட்டுதல் போன்றவைகள் வழியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.

என்னுடைய திருத்தூதுப்பயணங்களின்போது, நற்செய்தியால் தூண்டப்பட்ட பல மீட்பு சமூகங்களைச் சென்று சந்தித்துள்ளேன். இவை, நல்ல சமாரியர் உவமையை அருள்பணியாளர்களாலும், ஆண்-பெண் துறவறத்தாராலும் நடைமுறைக்குக் கொணர்ந்த உறுதியான, மற்றும் நம்பிக்கையின் சான்றுகளாக உள்ளன. அதேபோல், இப்பெருநோயை நிறுத்துவதற்கும், போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு சிகிச்சை வழங்கவும் அரசுகள் நீதியான சட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க வேண்டும் என ஆயர் பேரவைகள் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் நான் ஆறுதல் அடைந்துள்ளேன்.

எடுத்துக்காட்டாக, PLAPA என்ற, போதைப்பொருள் பயன்படுத்தலை தடுத்தல் மற்றும் அவர்களோடு உடனிருத்தலுக்கான இலத்தீன் அமெரிக்க மேய்ப்புப்பணி அவையின் செயல்பாடுகளை குறிப்பிட விரும்புகிறேன். மதுவுக்கு அடிமையாதல், பாலின இழிபொருள் இலக்கியத்திற்கு அடிமையாதல் உட்பட பல்வேறு போதை அடிமைத்தனங்கள் என்ற பிரச்சனை அனைவரையும் பாதிக்கிறது. அது, நிலப்பரப்பு, சமூகம், கலாச்சாரம், மதம், வயது வித்தியாசம் என்ற பாகுபாடுகள் இன்றி அனைவரையும் பாதிக்கின்றது. வேறுபாடுகள் இருப்பினும், நாம் ஒரே சமூகமாக இணைந்து அனுபவங்கள், பணி ஆர்வங்கள், சிரமங்கள் ஆகியவைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

நான் இங்கு தென்மண்டல ஆப்ரிக்க ஆயர்களின் முயற்சிகளையும் எடுத்துக்காட்டாக முன்வைக்க விரும்புகிறேன். இவர்கள் கடந்த ஆண்டு நவம்பரில் அமைதி மற்றும் நம்பிக்கையின் கருவிகளாக இளையோருக்கு அதிகாரமளித்தல்என்பதை தங்கள் கூட்டத்தின் தலைப்பாக கொண்டிருந்தனர். இக்கூட்டம் அப்பகுதி முழுவதும் உள்ள இளையோருக்கு ஆரோக்கியமான மற்றும் செயல்பாடுடைய ஊக்கத்தைக் கொடுத்த ஒரு மைல்கல் என்பதை இளையோரும் கண்டுகொண்டனர். போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக தாங்கள் தூதுவர்களாகவும், வாதாடுபவர்களாகவும் செயல்படுவோம் என்ற உறுதிமொழியையும் இளையோர் அக்கூட்டத்தில் எடுத்துக்கொண்டனர். மேலும், எல்லா காலத்திலும் ஒருவர் ஒருவர் மீது அக்கறையுடையவர்களாக அனைத்து இளையோரும் செயல்படவேண்டும் என்ற விண்ணப்பதையும் இளையோர் அன்று விடுத்தனர்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உலகம் முழுவதும் பல இலட்சக்கணக்கான மக்கள் போதைப்பொருள் அடிமைத்தனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையையும், போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் என்ற  பெரும் தவற்றையும் பார்க்கும் நாம் இது குறித்து பாராமுகமாய் இருக்க முடியாது. நமதாண்டவர் இயேசு நின்று, அருகில் சென்று, காயங்களைக் குணப்படுத்தியதைப் பார்க்கின்றோம். அவரின் அந்த நெருக்கத்தைக் காணும் நாமும், அவரைப்போல் இந்த துயரங்களின் முன் நின்று, தனிமை மற்றும் துயர்களின் குரலுக்கு செவிமடுக்கக் கற்று, போதைப்பொருளுக்கு அடிமையானோரை குனிந்து தூக்கி வாழ்வுக்குக் கொணர்வோம்.

இந்த நோக்கத்திற்காக கிறிஸ்தவர்களும் திருஅவை சமூகங்களும், இந்த உலக போதைப்பொருள் தடுப்பு தினத்தில் செபிப்பதுடன், இதற்கான நம் அர்ப்பணங்களையும் புதுப்பிப்போம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2024, 11:03

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >