தேடுதல்

பரிவுள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும் - திருத்தந்தை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஒருவர் மற்றவரோடு தங்கள் நேரத்தை பகிரும் சூழல் அவர்களை குடும்ப அன்பில் வளர்க்கும். அவசர உலகில் வாழும் நிலையைத் தவிர்க்க உதவும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசு கூறும் ஓய்வு என்பது உலகத்திலிருந்து தப்பிப்பது அல்ல, மாறாக தனிப்பட்ட நல்வாழ்வுக்கான பின்வாங்கல் என்றும், ஏழை எளிய மக்களின் முகத்தில் பரிவைக் காணும் உள்ளம் கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்கு நற்செய்தியில் இடமெற்றுள்ள ஐயாயிரம் பேருக்கு உணவளித்தல் என்ற பகுதியில் உள்ள இறைவார்த்தைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இருவர் இருவராக இயேசுவால் அனுப்பப்பட்ட சீடர்கள் தங்கள் பணியிலிருந்து திரும்பி வந்தவுடன் இயேசுவைச் சுற்றிக்கூடி நின்று தாங்கள் என்ன செய்தார்கள் என்பதை எடுத்துரைத்தார்கள், அவர்களிடம் இயேசு, நீங்கள் தனியாக பாலைவனத்திற்குச் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறுகின்றார் என எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒய்வு, கடவுளின் பரிவு என்னும் இரண்டு கருத்துக்களை மையப்படுத்தி தனது மூவேளை செப உரையினை மக்களுக்கு வழங்கினார்.

சீடர்களின் உடல்சோர்வைப் பற்றி கவலைப்படும் இயேசு, நமது பணியில், வாழ்வில் இத்தகைய கொடிய சோர்வினை நாம் சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றார். உதாரணமாக நமது பணியை முன்னெடுத்துச் செல்ல மேற்கொள்வதில் உள்ள  ஆர்வம்,  நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை எப்படி செய்வது அதில் வரும் பலன்கள் என்ன என்பது பற்றிய கவலை போன்றவற்றினால், தேவையானது எது என்பதை நாம் அறியாமல் நமது ஆற்றலை வீணாக்கி உடல் மனச் சோர்வடைகின்றோம் என்றும் கூறினார்.

இது நம் வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நாம் வாழ்கின்ற சமூகம் பெரும்பாலும் அவசர உலகின் கைதிகளாக உலகிலும், திருஅவையிலும் மேய்ப்புப்பணியிலும் இருக்க வைக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

ஓய்வு, பரிவு இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதை நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இத்தகைய ஓய்வினை எடுக்கக் கற்றுக்கொண்டோமானால் பரிவினை நாம் பெற்றுகொள்ளலாம் என்றும் கூறினார்.

பரிவு கொண்டவர்களாக நாம் இருக்கும்போது, இரக்கமுள்ள பார்வை, அடுத்தவரின் தேவையை அறிந்து கொள்ளல், பணிகளை எப்படிச் செய்வது, எப்படி நிறுத்துவது என்ற கவலைகளால் நுகரப்படாத இதயம், அமைதியில் இறைவனை ஆராதித்தல், இறைவனின் அருளைப் பெறுதல் ஆகியவை நமக்கு சாத்தியமாகும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதிகப்படியான வேலைப்பளு, அவசரமான உலகத்தில் பணி போன்றவை குடும்பங்களில் நிலவுகின்றன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பெற்றோர்களைக் காலையிலும் இரவிலும் காணாமல் குழந்தைகள் வளர்கின்றார்கள் என்றும் இது சமூக அநீதி என்றும் கூறினார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்து ஒருவர் மற்றவரோடு தங்கள் நேரத்தை பகிரும் சூழல் அவர்களை குடும்ப அன்பில் வளர்க்கும் என்றும், அவசர உலகில் செய்யும் பணியை தவிர்க்க உதவும் என்றும் கூறினார் திருத்தந்தை.  

எனது அன்றாட அலுவல்களின்போது என்னை நானே ஓய்வுக்கு உட்படுத்தி இறைவனோடு உறவாட, உரையாட, நேரம் ஒதுக்கின்றேனா? அல்லது எனது பணிகளிலேயே நான் என்னை முடக்கி அவசரத்தில் வாழ்கின்றேனா? அன்றாட சத்தத்தில் நமக்குள் ஒரு பாலைவன அமைதியை எப்படிக் கண்டறிவது என தெரியுமா? என்று நம்மை நாமேக் கேள்விக்குட்படுத்தி சிந்தித்துப்பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

நமது அன்றாட வாழ்வின் செயல்களுக்கு இடையில், நாம் தூய ஆவியில் இளைப்பாறுதல் அடையவும் பிறர் மீது பரிவு காட்டவும் அன்னையாம் தூய கன்னி மரியா எப்போதும் நமக்காக தயாராக இருந்து உதவுவாராக என்று கூறி கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2024, 13:01

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >