தேடுதல்

வாழ்க்கை, மகிழ்ச்சி மற்றும் அன்பிற்கான தாகம்

இயேசு போதிப்பதையும், அவர் செய்த அருளடையாளங்களையும் சீடர்கள் கண்டனர், சில சிறப்பான பொது நிகழ்வுகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் அவருடன் இருந்து அவரை நெருக்கமாகப் பின்பற்றினர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பல போதகர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்தபோதும், பேதுருவும் பிற சீடர்களும் இயேசுவை மட்டுமே தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டனர் என்றும், வாழ்க்கைக்கான தாகம், மகிழ்ச்சிக்கான தாகம், அன்பின் தாகம் போன்றவற்றிற்கான பதிலை சீடர்கள் அவரில் கண்டுகொண்டனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 25 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான்  தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. என்ற யோவான் நற்செய்தி எடுத்துரைக்கும் திருத்தூதர் பேதுருவின் அறிக்கை குறித்து விளக்கமளித்தார்.

பேதுருவின் இத்தகைய அறிக்கையானது பேதுரு மற்றும் பிற சீடர்கள் இயேசுவுடன் கொண்டிருந்த நட்புறவின் சாட்சியாகவும், கிறிஸ்துவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் பிணைப்பை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், வானத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே என்று இயேசு கூறிய நிகழ்வைத் தொடர்ந்து இது நடைபெறுகின்றது என்றும், இதனை ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமானதாக சிலருக்கு இருந்தது என்றும் கூறினார்.

இயேசுவின் இத்தகைய மொழி மிகவும் கடினமானது, மக்கள் மட்டுமன்றி அவரைப் பின்தொடர்ந்த சீடர்களுக்கும் இது ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத  கடினமான மொழியாக இருந்ததால் பலர் அவரை விட்டு விலகினர் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பன்னிரு சீடர்கள் மட்டும் இயேசுவோடு தங்கியிருந்து நிலைவாழ்வு தரும் வார்த்தைகளைக் கேட்டுகொண்டனர் என்றும் எடுத்துரைத்தார்.

இயேசு போதிப்பதையும், அவர் செய்த அருளடையாளங்களையும் சீடர்கள் கண்டனர், சில சிறப்பான பொது நிகழ்வுகளிலும் அன்றாட வாழ்க்கையிலும் அவருடன் இருந்து அவரை நெருக்கமாகப் பின்பற்றினர் என்றும் கூறினார் திருத்தந்தை.

தலைவராகிய இயேசு கூறியவற்றையும், செய்தவற்றையும் சீடர்கள் எப்போதும் புரிந்துகொள்ளவில்லை, சில நேரங்களில் அவரது அன்பின் பரிமாணங்களையும், அதிகப்படியான இரக்கத்தின் நீட்சிகளையும், தன்னையே பிறருக்கு அளிக்கும் அவரது அடிப்படையான பண்பையும் சீடர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

இயேசுவைப் பின்பற்றுவது என்பது எளிதல்ல, ஏனெனில் அவரது தெரிவுகள் பெரும்பாலும் பொதுவான மனநிலை, மதம், சமயம், நிறுவனம் அதன் பாரம்பரியம் போன்றவற்றிற்கு அப்பாற்பட்டது என்றும், சில சமயங்களில் பிறருக்கு சங்கடமான சூழ்நிலைகளையும் கோபத்தையும் உருவாக்கும் அளவிற்கு செல்கின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இறைவனைப் பின்பற்றுவது, அவருடைய செயல் முறையைப் புரிந்துகொள்வது, அவருடைய அளவுகோல்களையும் அவருடைய உதாரணங்களையும் நமக்கே சொந்தமாக்கிக் கொள்வது என்பது எளிதல்ல என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இயேசுவை மிக நெருங்கிச் சென்றாலும் நற்செய்தியை அதிகமாகக் கடைபிடித்தாலும், செபத்தின் வழியாக அவரது அருளைப் பெற்று வாழ்ந்தாலும், அன்பு, தாழ்ச்சி, நட்புறவு கொண்டு வாழ்ந்தாலும், அவரிடமே நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகள் இருக்கின்றன என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

எனது வாழ்க்கையில் இயேசு எவ்வளவு பிரசன்னமாக இருக்கிறார்? அவருடைய வார்த்தைகளால் என்னைத் தொடுவதற்கும் தூண்டுவதற்கும் நான் என்னை எவ்வளவு அனுமதிக்கிறேன்? அவைகள் எனக்கு "நிலைவாழ்வளிக்கும் உயிருள்ள வார்த்தைகள்" என்று என்னால் சொல்ல முடியுமா? என்ற கேள்விகளை நமக்குள் கேட்டு சிந்திக்க வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவின் வார்த்தைகள் எனக்கானதா? எனக்கும் நிலைவாழ்வளிக்கும் வார்த்தைகளாக அவை இருக்கின்றனவா? என்று சிந்தித்துப் பார்க்கவும் கேட்டுக்கொண்டார்.

வார்த்தையாகிய இறைமகன் இயேசுவைத் தன் உடலில் ஏற்றுக்கொண்ட அன்னை மரியா, இயேசு சொல்வதைக் கேட்கவும், அவரை விட்டு விலகாமல் இருக்கவும் நமக்கு உதவுவாராக என்று கூறி மூவேளை செப உரைக்குபின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரைக் கூடியிருந்த மக்களுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2024, 14:28

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >