தேடுதல்

நல்லுறவுகளுக்குத் தடையாக இருக்கும் முன்தீர்மானங்கள்

முன்தீர்மானங்கள் மற்றும் அனுமானங்கள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

மெரினா ராஜ் – வத்திக்கான்

முன்தீர்மானங்களும் அனுமானங்களும் நேர்மறையான உரையாடலைத் தடுக்கின்றன, சகோதரர்களிடையேயான நல்லுறவுகளுக்குத் தடையாக இருக்கின்றன என்றும், நமது உண்மையான செபம் மற்றும் நம்பிக்கை, நம் எண்ணத்தையும் இதயத்தையும் கடவுளை நோக்கித் திறக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு என்று இயேசு கூறிய நற்செய்தி வாசகத்தின் கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்ட யூதர்கள் அவரை நம்பவில்லை, மாறாக ஏளனம் செய்தார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசு தச்சரின் மகன் மரியாவின் மகன் நம்மோடு வாழும் சக மனிதர் என்று கூறி அவரை முன்தீர்மானத்துடன் பார்த்தார்கள் என்றும் கூறினார்.

முன்தீர்மானங்கள் மற்றும் அனுமானங்கள் குறித்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவிடமிருந்து யூதர்கள் எதையும் கற்றுக்கொள்ளாத வகையில் அவர்களது இதயமும் எண்ணமும் முன்தீர்மானங்கள் என்னும் தீமையால் அடைக்கப்பட்டு இருந்தது என்றும் எடுத்துரைத்தார்.

சட்டங்களைக் கடைபிடிப்பவர்கள், காணிக்கையளிப்பவர்கள், ஓய்வுநாளையும் செப நேரத்தையும் சரியாகக் கடைபிடிக்கும் யூதர்கள், இயேசு தான் மெசியா என்பதை அறிந்துகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கடவுளது வார்த்தைக்கு செவிசாய்ப்பதற்காக ஆலயக்கடமைகளை அவர்கள் செய்யவில்லை மாறாக தங்களது எண்ணத்திற்கு ஏற்றவாறு செயல்படவே இவ்வாறு செய்கின்றார்கள் என்றும் கூறினார்.

இயேசுவுக்கு எதிராக முணுமுணுப்பதன் வழியாக தங்களது இதயத்தை யூதர்கள் மூடிக்கொண்டார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இத்தகைய செயல் இறைவனை நாம் சென்றடைய உதவாது, அவரது அருள் ஒளியைப் பெற உதவாது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2024, 13:25

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >