தேடுதல்

தூய்மையான வாழ்க்கை வாழ நாம் அழைக்கப்படுகின்றோம்

செபத்திலும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் தன்மையாக நடந்துகொள்வதிலும், பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களை மரியாதையாக நடத்துவதிலும் நமது தூய்மையான வாழ்க்கையை நாம் வெளிப்படுத்த வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

தூய்மையான, மென்மையான, அன்பான வாழ்க்கைக்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம் என்றும், தூய்மை என்பது வெளிப்புறச் சடங்குகளுடன் தொடர்புடையது அல்ல மாறாக உள்புற மனநிலையுடன் தொடர்புடையது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 01 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்கு நற்செய்தி எடுத்துரைக்கும் மூதாதையர் மரபு குறித்த இறைவார்த்தைகள் பற்றி விளக்கமளித்தார்.

தீட்டு, தூய்மை ஆகிய இரண்டும் அக்காலத்தில் வாழ்ந்த மதத்தலைவர்கள் கடுமையாகக் கடைபிடித்த விடயமாக இருந்தது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அதனாலேயே இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உண்பதைக் குற்றமாகச் சாட்டினார்கள் என்றும், அத்தகையவர்களிடம் இயேசு தூய்மை குறித்த கருத்துக்களை எடுத்துரைத்தார் என்றும் கூறினார்.

தூய்மை என்பது வெளிப்புற சடங்குகளுடன் தொடர்புடையது அல்ல, முதலில் உள்புற மனநிலையுடன் தொடர்புடையது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தூய்மையாக இருக்க நினைக்கும் ஒருவர் தனது இதயத்தில் பேராசை, பொறாமை, செருக்கு போன்ற தீய உணர்வுகளையோ, வஞ்சகம், களவு, காமவெறி, பழிப்புரை போன்ற தீய எண்ணங்களையோ வைத்திருந்தால், மீண்டும் மீண்டும் கைகளைக் கழுவுவதனால் ஒருபயனும் இல்லை என்றும் கூறினார்.

இத்தகைய வழக்கமான தீய எண்ணங்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் இயேசுவின் செயல் இருக்கின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இத்தகைய தீச்செயல் ஒருவரை நன்மையில் வளரச் செய்யாது; மாறாக, தன்னையும் பிறரையும் புறக்கணிக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ வழிவகுக்கும் என்றும் கூறினார்.

மேலும், அறத்திற்கு முரணானவைகளாகவும், ஆன்மாவைக் காயப்படுத்துபவைகளாகவும், இதயத்தை மூடுகின்றவைகளாகவும் இத்தீச்செயல்களின் அணுகுமுறைகள் இருக்கும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இத்தகைய தீய எண்ணங்களுடன் திருப்பலிக்குச் சென்று பங்கெடுத்து ஆலயத்திலிருந்து வெளிவரும் மனிதர் எத்தகைய மாற்றத்தையும் பெறுவதில்லை, மாறாக பிறரைப் பற்றிய இரக்கமற்ற கொடிய அவதூறுகளையும், தொடர்ந்து செய்கின்றார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கு மாறாக செபத்திலும், வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களிடம் தன்மையாக நடந்துகொள்வதிலும், பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களை மரியாதையாக நடத்துவதிலும் நமது தூய்மையான வாழ்க்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எனது நம்பிக்கையை நான் தொடர்ந்து வாழ்கின்றேனா? தூய ஆவியின் துணையால் எனது வெளியுலக வாழ்விலும் செயல்பட முயற்சிக்கின்றேனா? என் உணர்வுகள், வார்த்தைகள் மற்றும் படைப்புகளால், என் சகோதர சகோதரிகளுடனான என் நெருக்கத்தையும் மரியாதையையும் உறுதிப்படுத்துகிறேனா? என்பன போன்ற கேள்விகளை நமக்குள் கேட்டு சிந்திக்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

தூய கன்னி மரியா உணர்வுப்பூர்வமான மற்றும் செயல்படுத்தப்பட்ட அன்பினால் நமது வாழ்வு கடவுளுக்கு மிக விருப்பமான ஒரு வழிபாடாக மாற உதவுவாராக என்று கூறி, கூடியிருந்த அனைவருக்கும் மூவேளை செப உரைக்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2024, 13:33

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >