தேடுதல்

இயேசுவை அறிந்து கொள்பவர்களாக வாழ முயல்வோம்

இயேசுவை நாம் தனியாக நேருக்கு நேர் சந்திக்காவிடில் அவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது. இயேசுவுடான தனிப்பட்ட சந்திப்பை விரும்புகின்றவர்கள் தங்களது வாழ்வை மாற்றிக் கொள்கின்றார்கள். - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசுவை அறிந்து கொள்ளுதல் என்பது அவரைப் பற்றிய சில விடயங்களை தெரிந்துகொள்வது மட்டுமல்ல, மாறாக அவரைப் பின்பற்றுவதும், நம்மை அவர் தொடுவதற்கும் அவரது நற்செய்தி நம்மை மாற்றுவதற்கும் கையளிப்பதே ஆகும் என்று கூறினார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 15 பொதுக்காலத்தின் 24ஆம் ஞாயிற்றுக் கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

மாற்கு நற்செய்தியில் இடம்பெறும், இயேசு மெசியா என்னும் அறிக்கை என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் குறித்த விளக்கங்களை திருப்பயணிகளுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?”  என்று கேட்ட கேள்விக்கு மக்களுள் “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்”  என்று சீடர்கள் பதிலளித்தனர். ஆனால் பேதுரு நீர் மெசியா என்று எடுத்துரைத்தார் என்றும் கூறினார் திருத்தந்தை.

சீடர்கள் குழுவின் சார்பாக இயேசுவை மெசியா என்று அறிக்கையிட்ட பேதுரு இயேசு தனது பாடுகள் பற்றி எடுத்துரைக்கையில் அவரைத் தனியே அழைத்து கடிந்து கொண்டார் என்றும், அவரை இயேசு என் கண்முன் நில்லாதே சாத்தானே என்று கடிந்துகொண்டார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசுவை நாம் தனியாக நேருக்கு நேர் சந்திக்காவிடில் அவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது என்றும், இயேசுவுடான தனிப்பட்ட சந்திப்பை விரும்புகின்றவர்கள் தங்களது வாழ்வை மாற்றிக் கொள்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

தங்களது வாழ்வை மட்டுமன்றி தங்களது எண்ணம், சிந்தனை, சொல், செயல், எதிர்காலவாழ்க்கை என எல்லாமே இயேசுவுடனான சந்திப்பிற்குப் பிறகு மாற்றமடைகின்றது என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நமது உடன் சகோதர சகோதரிகளுடனான உறவிலும் மாற்றம் காண முடிகின்றது என்றும் கூறினார்.

பிறரை ஏற்றுக்கொள்வதற்கும் மன்னிப்பதற்கும் தன்னையே அர்ப்பணிக்கக் கூடியவர்களாகவும், வாழ்வில் எடுக்கக்கூடிய தேர்வுகளிலும் மாற்றம் காண்பவர்களாகவும்  நாம் மாறிவிடுகின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவுடனான சந்திப்பு நமது வாழ்க்கை முழுவதையும் மாற்றி விடுகின்றது என்று எடுத்துரைத்தார்.

நாசிசத்தால் பாதிக்கப்பட்டவரும் லூத்தரன் இறையியலாளரும் போதகருமான போன்ஹோஃபர் அவர்களின் வார்த்தைகளான, “கிறிஸ்தவம் என்பது இன்று நமக்கு என்ன? கிறிஸ்து நமக்கு யார்? என்பதே என்னை ஒருபோதும் அமைதியாக இருக்க விடாத பிரச்சனை” என்ற வரிகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், பலர் இத்தகைய கேள்விக்கு இடம்கொடாமல் நிம்மதியாக உறங்கி, கடவுளை விட்டு விலகி இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இயேசு எனக்கு யார்? எனது வாழ்வில் எத்தகைய இடத்தை அவர் பெற்றுள்ளார்? என்ற கேள்விகளை நமக்குள் கேட்டு அதற்கேற்றவாறு வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயேசுவை முழுவதுமாக அறிந்த அன்னை மரியா இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் வாழ நமக்கு உதவுவாராக என்று கூறி மூவேளை செப உரையைத் தொடர்ந்த தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2024, 13:13

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >