புதன் மறைக்கல்வி உரை - உறுதிப்பூசுதல் திருவருளடையாளத்தில் தூயஆவி
மெரினா ராஜ் - வத்திக்கான்
அக்டோபர் 30 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவி குறித்த தனது தொடர் மறைக்கல்வி உரையின் 11 ஆவது பகுதியாக தூய ஆவியார் உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் வழியாக நமக்கு ஆசீரை அருளினார் அவரது முத்திரையை நம்மீது பதித்தார் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு வழங்க திறந்த காரில் வலம் வந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சிறு குழந்தைகளுக்கு ஆசீர் அளித்தும் திருப்பயணிகளைக் கையசைத்து வாழ்த்தியும் புதன் மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தை வந்தடைந்த திருத்தந்தை அவர்கள், சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தை துவக்கினார். அதன்பின் திருத்தூதர் பணிகள் நூலிலுள்ள இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.
திருத்தூதர் பணிகள் 8: 14 -17
சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள். ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு, பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளுக்கு உறுதிப்பூசுதல் திருவருளடையாளத்தில் தூய ஆவியார் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!
திருஅவையின் வாழ்வில் தூயஆவியின் உடனிருப்பு மற்றும் செயலைப் பற்றிய நமது சிந்தனைகளை இன்றைய நம் மறைக்கல்வியில் நாம் தொடர்வோம். தூய ஆவியாரின் தூயசெயல் கடவுளின் வார்த்தை மற்றும் திருவருளடையாளங்கள் என்னும் இரண்டு வழிகளில் நம்மை வந்தடைகின்றது. அனைத்து திருவருளடையாளங்களிலும் தூய ஆவியாரின் செயல் இருப்பினும் உறுதிப்பூசுதல் என்னும் திருவருளடையாளத்தில் சிறப்பான விதமாக செயல்படுகின்றது.
புதிய ஏற்பாட்டில், தண்ணீரால் திருமுழுக்கு பெற்றதைத் தவிர, பெந்தேகோஸ்து நாளில் திருத்தூதர்கள் செய்ததைப் போன்று கைகளை தலைமீது வைத்து ஆசீரளிக்கும் மற்றொரு செயலும் வலியுறுத்தப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையில் சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள் என்றும், அதுவரை ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்த அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை என்பதை அறிந்து பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து தூய ஆவியைப் பெற செபித்தார்கள் என்றும் கூறுகின்றது.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமடலில் திருத்தூதர் பவுல், கடவுளே எங்களை உங்களோடு சேர்த்துள்ளார்; கிறிஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர் உறுதிப்படுத்தி, அருள்பொழிவு செய்து, நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து, நம்மீது தம் முத்திரையைப் பதித்தார் என்று குறிப்பிடுகின்றார். இங்கு முத்திரை என்பது அழிக்க முடியாத தூய ஆவியின் தன்மை" என்ற கோட்பாட்டின் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருஅவையின் பல்வேறு காலங்கள் மற்றும் அருளடையாளங்களில் ஏற்பட்ட வெவ்வேறு வடிவங்கள் மற்றும் உள்ளடக்கங்களை எடுத்துக் கொண்டு, தூய ஆவியைப்பெறும் செயல் புதுவடிவம் பெற்றது. உறுதிப்படுத்துதல் என்பது ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் பெந்தேகோஸ்து அனுபவம் பெற்ற முழு திருஅவைக்கும் இருந்தது. இது கிறிஸ்துவில், திருஅவையில் திருமுழுக்கு அருளடையாளம், இறைவாக்குரைத்தல், அரச மற்றும் அருள்பணியாளர் பணிக்கான அர்ப்பணத்தை பலப்படுத்துகிறது. இது தூயஆவியின் வரங்களின் மிகுதியை தெரிவிக்கிறது என இத்தாலிய ஆயர்கள் பேரவை எளிமையாகவும் தெளிவாகவும் தூய ஆவியின் செயல் குறித்து விவரிக்கிறது.
திருமுழுக்கு என்பது பிறப்பின் அருளடையாளம் என்றால், உறுதிப்பூசுதல் என்பது வளர்ச்சியின் அருளடையாளம், சான்று வாழ்வின் அருளடையாளம், முதிர்ச்சியான கிறிஸ்தவத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள ஒன்று.
ஒருமுறை உறுதிப்பூசுதல் திருவருளடையாளத்தைப் பெறுபவர் அதன் பின் ஆலயத்திற்கு வருவதில்லை இறுதியாக திருமணம் அருளடையாளாத்தின்போதே ஆலயத்திற்கு வருகின்றார் என்பது நம்மிடையே ஒரு பிரச்சனையாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய கிறிஸ்துவை தனிப்பட்ட முறையில் சந்தித்த மற்றும் தூயஆவியின் உண்மையான அனுபவத்தைப் பெற்ற நம்பிக்கையாளர்கள் உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெறுபவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், உறுதிப்பூசுதல் பெறுபவர்கள் தூய ஆவியின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வது மிக எளிதாக இருக்கும். எதிர்காலத்தில் உறுதிப்பூசுதல் திருவருளடையாளம் பெறுபவர்களுக்கு உதவியாக இருக்கும் இச்செயல், ஏற்கனவே இவ்வருளடையாளத்தின் வழியாக முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் அந்த அருளின் இனிமையை சுவைக்க அழைப்புவிடுக்கின்றது. நாம் பெற்றுக்கொண்ட முதல் கொடையாம் தூய ஆவியின் தன்மையை சுவைப்பதற்காகவும் அதனை வாழ்வில் செயல்படுத்துவதற்காகவும் பயன்படுத்த வேண்டும். மாறாக நாம் பெற்றுக்கொண்ட தாலந்துகளை மண்ணில் இட்டு புதைக்கக் கூடாது.
புனித பவுல் தனது சீடரான தீமோத்தேயுவிடம், உன் மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன் என்று வலியுறுத்துகின்றார். (2 தீமோ 1:6), இதில் தூண்டி எழுப்புமாறு என்னும் வினைச்சொல் ஒரு சுடரை மீண்டும் எரியவிடச் செய்வதற்காக நெருப்பை ஊதுபவர்களின் உருவத்தை குறிக்கிறது. யூபிலி ஆண்டிற்கான சிறந்த இலக்கு இதுவே. நமது பழக்க வழக்கங்கள், விலகல்கள் ஆகியவற்றின் சாம்பலை அகற்றவும், ஒலிம்பிக் விளையாட்டில் ஒளி ஏந்தி செல்பவர்களைப் போல தூய ஆவியின் சுடரைத் தாங்குபவர்களாக மாறவும் அருள் வேண்டுவோம். இவ்வழியில் நாம் முன்னேறிச் செல்வதற்கான முயற்சிகளை எடுக்க தூயஆவியார் நமக்கு உதவுவாராக!
இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த திருப்பயணிகளை வாழ்த்தினார்.
இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், நவம்பர் 1 திருஅவை சிறப்பிக்க இருக்கும் அனைத்து புனிதர்களின் பெருவிழாவை எடுத்துரைத்து திருஅவை நமது வாழ்வின் எதார்த்தத்தை இவ்விழாவில் எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார்.
நமக்கு முன் வாழ்ந்த நம் சகோதர சகோதரிகள் புனிதர்களாக நிலைத்து நமது வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறைத்தந்தையின் பிரசன்னத்தையும் நமக்காகக் காத்திருக்கும் வாழ்க்கைப் பயணத்தின் இலக்கை அடைவதற்கும் உதவுகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களது உடனிருப்பு நம்மில் ஒன்றிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் கூறினார்.
அமைதிக்காக செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் நாளுக்கு நாள் வளர்கிறது. போரினால் பல நாடுகள் துன்புறுகின்றன குறிப்பாக உக்ரைன், இஸ்ரயேல், பாலஸ்தீனம், மியான்மார், வடக்கு கீவ் பகுதிகளில் வாழும் மக்களை நினைவுகூர்வோம். போர் எப்போதும் தோல்விதான் அதனால் யாரும் வெற்றியடைவதில்லை, மாறாக அனைத்தையும் இழக்கவே செய்கின்றார்கள் எனவே அமைதிக்காக செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை நேற்றைய தினம் 150 அப்பாவி மக்கள் இயந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததை எடுத்துரைத்து குழந்தைகளும் குடும்பத்தில் உள்ளவர்களும் போரினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கூறினார்.
இவ்வாறு தனது செப விண்ணப்பங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ததும் விண்ணகத்தந்தையை நோக்கிய செபமானது இலத்தீன் மொழியில் பாடப்பட்டது. அதன்பின் கூடியிருந்த மக்களுக்கு தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்