சமமான மாண்புள்ளவர்களாக பெண்ணும் ஆணும் படைக்கப்பட்டவர்கள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கடவுளின் படைப்பில் பெண்ணும் ஆணும் சமமான மாண்புள்ளவர்களாக, பன்முகத்தன்மையால் நிரப்பப்பட்டவர்களாக, ஒருவருக்கொருவர் உதவி மற்றும் தோழமையுடன் இருக்க படைக்கப்பட்டவர்கள் என்றும், வளர்ச்சியில் தூண்டுதலாகவும் சவாலாகவும் இருக்கவே கடவுள் அவர்களை சமத்துவத்துடன் படைத்தார் என்பதையும் இயேசு பரிசேயர்களுக்கு நினைவூட்டுவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அக்டோபர் 6 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுக்காலத்தின் 27 ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான மணவிலக்கு என்பது குறித்து திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.
திருமண அன்பைப் பற்றி எடுத்துரைக்கும் இயேசுவிடம் மனைவியை விலக்கிவிடுதல் பற்றி கேள்வி கேட்டு அவரை சிக்கலுக்கு உள்ளாக்க நினைத்த பரிசேயர்களின் வலைக்குள் சிக்காமல், ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையிலான அன்பின் மதிப்பை முக்கியத்துவப்படுத்துகின்றார் இயேசு என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் காலத்தில், திருமணத்தில் பெண்ணின் நிலை ஆணுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமாக இருந்தது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், கணவன் சிறிய எளிய காரணங்களுக்காக மனைவியை விலக்கிவிடலாம் என்பது சட்டமாக இருந்தது என்றும், அதனாலேயே இயேசு அன்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் என்றும் கூறினார்.
திருமணத்தின் வழியாக கொடையாக ஆணும் பெண்ணும் பெற்றுக்கொண்ட அன்பு முழுமையானதாக, புதிய வாழ்வின் தொடக்கமாக இருக்கவேண்டும் என்றும், ஒரே உடலாக ஒற்றுமையாக தங்களது விருப்பு வெறுப்புக்களைக் கடந்து வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
இப்படி வாழ்வது என்பது எளிதானது அல்ல, ஆழமான நம்பிக்கையானது, சோதனை மற்றும் கவலையான நேரங்களிலும் அதற்கு தேவை, மரியாதை நேர்மை எளிமை என்னும் பண்புகள் தேவை, மோதல்-உரையாடல் போன்றவற்றில், மன்னிப்பு, மற்றும் நல்லிணக்கத்திற்கு எப்போதும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
கணவன் மனைவியர் தங்களுக்குள் எவ்வளவு பிரச்சனைகள், சண்டைகள், மனவருத்தங்கள் வந்தாலும் அன்றைய நாள் முடிவதற்குள் சமாதானம் ஆகிவிட வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒரு நாள் தொடங்கிய சாதாரணமான சண்டையானது அடுத்தநாள் பெரிய தீங்கை விளைவிக்கும் என்றும், ஓர் எளிய அன்பான தொடுதல் மற்றும் அரவணைப்பின் வழியாக சமாதானம் ஆகி விடலாம் என்றும் கூறினார்.
வாழ்க்கை மற்றும் குழந்தைகளின் கொடை, அன்பின் பலன், கடவுளின் ஆசீர், ஒவ்வோர் இல்லம் மற்றும் சமூகத்தின், மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஆதாரம் போன்றவற்றிற்கு திருமணமானவர்கள் எப்போதும் தங்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அன்பு அழகானது, அது நம்மில் செயல்பட அனுமதிக்கும்போது அதன் உண்மையான மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கின்றோம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நமது அன்பு எத்தகையது? அது நம்பிக்கையானதா? தாராளமானதா? படைப்பாற்றல் மிக்கதா என்று நமக்குள் கேள்வி கேட்க அழைப்புவிடுத்தார்.
அன்னை மரியா கிறிஸ்தவ தம்பதியருக்கு உதவுவாராக என்று கூறிய திருத்தந்தை அவர்கள், புனித ஜெபமாலை அன்னைக்கு சிறப்பு வணக்கம் செலுத்தும் பொம்பே அன்னை மரியா திருத்தலத்தில் இருப்பவர்களின் செபத்துடன் நமது செபத்தையும் இணைத்துக் கொள்வோம் என்று கூறி கூடியிருந்தவர்களுக்கு மூவேளை செப உரையைத் தொடர்ந்த தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்