தேடுதல்

அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதுமே உண்மையான செல்வம்

ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் செல்வருக்கு மனம் திருப்தி அடையவில்லை. அமைதியின்றி வாழ்ந்து வந்த அவர் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இயேசுவிடம் ஓடி வந்தார் - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உண்மையான செல்வம் என்பது இந்த உலகத்தில் உள்ள பொருள் அல்ல, மாறாக உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும், அவர்களின் குரலுக்கு செவிகொடுப்பவர்களாகவும் நாம் இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

பொதுக்காலத்தின் 28ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர் பற்றிய நற்செய்திக் கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், செல்வரின் செயல்களான ஓடி வந்து வணங்குதல் முகவாடி வருத்தத்தோடு திரும்பி செல்லுதல் என்னும் இரண்டு நிலைகள் பற்றி சிந்திக்க வலியுறுத்தினார்.

“நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இயேசுவைக் கேட்ட செல்வரிடம், உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு என்று இயேசு கூறியதும் முகவாட்டத்துடன் திரும்பி சென்று விட்டார் என்றும், தன்னிடம் இருந்த ஏராளமான சொத்துக்களை வேண்டாம் என்று மற்றவர்களுக்குக் கொடுத்துவிட அவருக்கு மனமில்லை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

முதலில் இயேசுவைக் கண்டதும் அவரது இதயத்தால் தூண்டப்பட்டு அவரைக் காண ஓடி வந்த செல்வர், அவர் முன் முழந்தாள்படியிடுகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஏராளமான சொத்துக்கள் இருந்தாலும் செல்வருக்கு மனம் திருப்தி அடையவில்லை என்றும், அமைதியின்றி வாழ்ந்து வந்த அவர் நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக இயேசுவிடம் ஓடி வந்தார் என்றும் கூறினார்.  

செல்வராக இருந்தாலும் இயேசுவின் காலடியில் விழுந்து, தனது மனநலம் குணமடைய வேண்டுகின்றார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், செல்வரின் மனநோய்க்கு சிகிச்சையாக, மருந்தாக உனக்கு ஒன்று குறைவுபடுகின்றது உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்று இயேசு கூறியதையும் நினைவுகூர்ந்தார்.

இயேசுவின் இத்தகைய பதிலை சற்றும் எதிர்பார்க்காத செல்வர் மிகுந்த மனவருத்தத்துடன் அங்கிருந்து சென்றுவிடுகின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், முதலில் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புடன் ஓடி வந்த அவரின் செயல் மிகவும் தளர்ந்து போய், வாடி வதங்கி வருத்தத்துடன் செல்வதாக முடிவடைந்தது என்றும் கூறினார்.

எல்லையற்ற மகிழ்ச்சிக்கான தேவையையும் அர்த்தமுள்ள வாழ்க்கையையும் நம் இதயங்களில் சுமந்து செல்லும் நாம், இவ்வுலகப் பொருள்கள் மற்றும் பூமிக்குரிய செல்வங்களை வைத்திருப்பதில் தான் வாழ்க்கையின் கேள்விக்கான பதில் இருக்கிறது என்று நினைக்கும் மாயையில் விழ நேரிடும் என்றும் விளக்கமளித்தார் திருத்தந்தை.

நாம் விரும்பும் நன்மை கடவுளே, நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பும், நம்மை அன்பு செய்யும் அவரும் மட்டுமே நாம் அடையவேண்டிய நிலைவாழ்வு என்பதை நாம் கண்டறிய வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார் என எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உண்மையான செல்வம் என்பது ஆண்டவரால் அன்புடன் பார்க்கப்படுவதே என்று கூறினார்.

நமது வாழ்க்கையை மற்றவர்களுக்குக் கொடையாக மாற்றி ஒருவரையொருவர் அன்பு செய்யவே இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், ஏழைகளை அன்பு செய்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று இயேசு வலியுறுத்துவதை சுட்டிக்காட்டினார்.

நமது பொருள்களை மட்டுமல்லாது, நாம் என்னவாக இருக்கிறோமோ அப்படியே நம்மையும், நமது திறமைகள், நட்புறவு, நேரம் என எல்லாவற்றையும் பிறருடன் பகிர்ந்துகொள்ள வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நமது வாழ்க்கை, பணம் மற்றும் செல்வத்துடன் இணைந்துள்ளதா? அல்லது அன்புடன் இணைந்துள்ளதா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2024, 14:39

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >