புதன் மறைக்கல்வி உரை - தூய ஆவியால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள்

அக்டோபர் 9 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தொடர் மறைக்கல்வி உரையின் எட்டாம் பகுதியாக “ தூயஆவியாரால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 9 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தொடர் மறைக்கல்வி உரையின் எட்டாம் பகுதியாக “தூயஆவியாரால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் அதிகாலை பெய்த சிறு மழைப்பொழிவினால் வத்திக்கான் வளாகம் குளிர்ச்சியாக இருக்க, கதிரவன் மேகக்கூட்டங்களுக்கு நடுவில் தனது ஒளிக்கதிரை மெல்ல மெல்ல பரப்பினான். ஏறக்குறைய 25000 மக்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் திருந்தந்தையின் மறைக்கல்வி உரையினைக் கேட்க வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்தனர். அவர்கள் மத்தியில் திறந்த காரில் வலம் வந்து சிறுகுழந்தைகளைத் தொட்டு ஆசீரளித்து மறைக்கல்வி உரை வழங்கும் இடத்தினை வந்தடைந்தார் திருத்தந்தை. சிலுவை அடையாளத்துடன் கூட்டமானது ஆரம்பமானது. திருத்தூதர் பணிகள் நூலிருந்து இறைவார்த்தைகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன.  

திருத்தூதர் பணிகள் : 11: 15 - 17

பேதுரு, “நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்தது போல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது. அப்போது, “யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால், நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப்பெறுவீர்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நான் நினைவு கூர்ந்தேன். இப்போதும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?” என்றார்.

இறைவார்த்தைகள் வாசித்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘தூய ஆவியாரும் மணமகளும். நம் நம்பிக்கையாம் இயேசுவை நோக்கி இறைமக்களை வழிநடத்தும் தூய ஆவியார்’ என்ற தொடர் மறைக்கல்வி உரையின் எட்டாம் பகுதியாக “தூயஆவியாரால் நிரப்பப்பட்ட திருத்தூதர்கள்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

தூய ஆவியானவர் மற்றும் திருஅவை பற்றிய நமது தொடர் மறைக்கல்வியில் திருத்தூதர் பணிகள் நூலில் இடம்பெற்றுள்ள தூய ஆவி குறித்த கருத்துக்களை இன்று நாம் காண்போம்.

பெந்தக்கோஸ்து நாளில் தூய ஆவியின் வருகையானது இடியுடன் கூடிய காற்று, நெருப்பு போன்ற பிளவுற்ற நாக்குகள் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டு அனைவரும் தூய ஆவியால் நிரப்பப்பட்டனர் என்ற கூற்றின் வழியாக திருத்தூதரகள் தூய ஆவியால் உறுதிப்படுத்தப்பட்டதைக் காண்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலை எழுதிய நற்செய்தியாளர் புனித லூக்கா, திருஅவையின் உலகளாவிய தன்மையையும் ஒற்றுமையையும் உறுதி செய்பவர் தூயஆவியார் என்பதை எடுத்துக்காட்டுகிறார். "தூய ஆவியினால் நிரப்பப்பட்டதன்" உடனடி விளைவு திருத்தூதர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினர், இயேசு கிறிஸ்துவை மக்களுக்கு அறிவிக்க தாங்கள் தங்கியிருந்த மேல் அறையை விட்டு வெளியே சென்றனர்.

அவ்வாறு செய்வதன் வழியாக, அனைத்து மக்களிடையேயும் ஒரு புதிய ஒற்றுமையின் அடையாளமாக திருஅவையின் உலகளாவிய பணியை வலியுறுத்த லூக்கா விரும்பினார். இரண்டு வழிகளில் ஆவியானவர் ஒற்றுமைக்காக பணியாற்றுவதைப் பார்க்கிறோம். ஒருபுறம், திருஅவையில் மேலும் நபர்களையும் மக்களையும் வரவேற்பதற்காக அதனை வெளிப்புறம் நோக்கித் தள்ளுகிறார். மறுபுறம், அது அடைந்த ஒற்றுமையை ஒருங்கிணைக்க அவர் அதை தன்னுள் திரட்டுகிறார். தன்னை உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும், ஒற்றுமையுடன் தன்னைத் திரட்டவும் கற்றுக்கொடுக்கின்றார். உலகளாவியம் ஒற்றுமை இவை இரண்டும் திருஅவையின் மறைபொருளாக விளங்குகின்றன.

தூய ஆவியின்செயல்பாடுகளுல் ஒன்றான உலகளாவியம்

உலகளாவியம் இதனை திருத்தூதர் பணிகள் நூலின் 10ஆம் அதிகாரத்தில் உள்ள கொர்னேலியுவின் மனமாற்றத்தில் நாம் காண்கின்றோம். பெந்தக்கோஸ்து நாளில், திருத்தூதர்கள் எல்லா யூதர்களுக்கும், சட்டங்களைக் கடைப்பிடிப்பவர்களுக்கும், எல்லாவிதமான மக்களுக்கும் கிறிஸ்துவை அறிவித்தனர். முதல் பெந்தக்கோஸ்து போன்று நூற்றுவர் தலைவனாகிய கொர்னேலியுவின் வீட்டில் மற்றொரு பெந்தக்கோஸ்து நடைபெறுகின்றது. திருத்தூதர்கள் தங்கள் இறைவார்த்தை அறிவிப்பதற்கான எல்லையை விரிவுபடுத்தவும், யூதர்களுக்கும் புறவினத்தாருக்கும் இடையிலான கடைசித் தடையை வீழ்த்தவும் தூண்டப்படுகின்றனர்.

இந்த எல்லை விரிவுபடுத்தும் பணியில் புவியியல் விரிவாக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. திருத்தூதர் பவுல் சிறிய ஆசியாவில் இறைவார்த்தையை அறிவிக்க விரும்பினார், ஆனால் தூய ஆவியார் அவரை அங்கு இறைவார்த்தையை அறிவிக்க விடாமல் தடுத்தார் என்று திருத்தூதர் பணிகள் நூலில் எழுதப்பட்டுள்ளது. மேலும் அவர் பித்தினியாவுக்குச் செல்ல விரும்பினார் "ஆனால் இயேசுவின் ஆவியார் அவர்களை அங்குப் போகவிடாமல் செய்தது. தூய ஆவியின் இந்த ஆச்சரியமான தடைகளுக்கான காரணம் உடனடியாக அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. மறுநாள் இரவு திருத்தூதர் பவுல் மாசிதோனியாவுக்குச் செல்லும்படி கனவில் கட்டளையிடப்படுகின்றார். இவ்வாறு நற்செய்தி தனது தாயகத்தை விட்டு வெளியேறி ஐரோப்பாவிற்குள் நுழைந்தது.

தூய ஆவியின் இரண்டாவது செயல்பாடு ஒற்றுமை

தூய ஆவி உருவாக்கும் இந்த ஒற்றுமையை திருத்தூதர் பணிகள் நூலின் 15ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்படும் எருசலேம் சங்கத்தில் நாம் காணலாம். தூய ஆவியார் பெந்தக்கோஸ்து நாளில் செய்ததுபோல், அதிசயங்கள், தீர்க்கமான தலையீடுகள், நெருப்புபோன்ற பிளவுற்ற நாக்குகள் ஒளிவெள்ளங்கள்  போன்றவற்றின் வழியாக எப்போதும் செயல்படுவதில்லை. பெரும்பாலான நேரங்களில், அறிவாற்றலுள்ள பணிகள், காலங்கள் மற்றும் வேறுபாடுகளை மதிக்கிறார். மக்கள் மற்றும் நிறுவனங்கள், செபம் மற்றும் மோதல்களிந் வழியாகக் கடந்து செல்கிறார். இதனையே நாம் ஒரு வகையில், இன்று சினோடல் என்று கூறுகின்றோம்.

தூய அகுஸ்தீன் தூய ஆவியின் ஒற்றுமையை ஓர் உருவத்துடன் விளக்குகிறார். மிக உன்னதமான வரிகளாக "மனித உடலுக்கு ஆன்மாவைப்போல, தூய ஆவி கிறிஸ்து மற்றும் திருஅவையின் உடலாக விளங்குகின்றார் என்று குறிப்பிட்டுள்ளார். இது முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. தூய ஆவியார் வெளியில் இருந்து மட்டும் திருஅவையின் ஒற்றுமைக்கு பணியாற்றவில்லை, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மட்டும் அவர் கட்டளையிடவில்லை. மாறாக அவரே "ஒற்றுமையின் பிணைப்பாக செயல்பட்டு திருஅவையில் ஒற்றுமையை உருவாக்குகிறார்.

திருஅவையின் ஒற்றுமை என்பது மக்களிடையே ஒற்றுமை. அது மேஜையில் உணரப்படுவது அல்ல மாறாக வாழ்க்கையில் உணரப்படுகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையை விரும்புகிறோம், நம் இதயத்தின் ஆழத்தில் இருந்து அதை விரும்புகிறோம். திருமணம் மற்றும் குடும்பத்திற்குள்ளும் கூட, ஒற்றுமை,இணக்கம் ஆகியவற்றை அடைவதும், பராமரிப்பதும் மிகவும் கடினமானதாக இருக்கின்றது.

ஒற்றுமையை நம்மில் உருவாக்குவது ஏன் கடினமாக இருக்கின்றது எனில் ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்கின்றோம். எதிரில் இருப்பவரின் கண்ணோட்டத்தில் நிலையில் எல்லாவற்றையும் பார்க்க முயலும்போது ஒற்றுமை நம்மில் உருவாகும். வாழ்க்கையின் ஒற்றுமை, பெந்தெகொஸ்தேவின் ஒற்றுமை என்பது நம்மை அல்ல, மாறாக, கடவுளை நம் வாழ்வின் மையமாக வைக்க முயற்சிக்கும் போது அடையப்படுகிறது. கிறிஸ்துவை நோக்கி ஒன்றாகச் செல்வதன் வழியாக கிறிஸ்தவ ஒற்றுமை கட்டமைக்கப்படுகிறது. ஒற்றுமை மற்றும் அமைதியின் கருவிகளாக இருக்க உதவும்படி தூய ஆவியானவரை வேண்டுவோம். அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள், கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.

இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், ருமேனியாவில் இருந்து வந்திருந்த சலேசிய சபை மறைப்பணியாளர்கள் மற்றும் அருள்பணியாளர்கள், பெட்ராலியாவின் Opera di San Michele Arcangelo பணியாளர்கள், ரோமின் Benedetta Cambiagio பள்ளியைச் சார்ந்தவர்கள், Cervia பகுதி பிரதிநிதிகள் ஆகியோரை வாழ்த்தினார்.

இளைஞர்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளை நினைவுகூர்ந்து வாழ்த்தி செபித்த திருத்தந்தை அவர்கள், புனித செபமாலை அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த அக்டோபர் மாதமானது, அன்னைக்கு செலுத்தப்படும் இந்த பாரம்பரியமான வழிபாட்டையும் செபத்தையும் மேம்படுத்த ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக அமையட்டும் என்று கூறினார். நம்பிக்கையுடன் அன்னை மரியாவின் கைகளில் நம்மை ஒப்படைத்து, ஒவ்வொரு நாளும் செபமாலை ஜெபிக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், அறிவற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக துன்புறுத்தப்பட்ட உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார், சூடான் போன்ற மக்களின் துன்பங்களையும், அமைதிக்கான அவர்களின் விருப்பத்தையும் அக்கறையுள்ள தாய் மரியிடம் ஒப்படைத்து செபிப்போம் என்றும் கூறினார்.

இவ்வாறு உலக அமைதிக்கான தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்களுக்கு விண்ணகத் தந்தையை நோக்கிய செபத்திற்குப் பின் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2024, 08:52

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >