கடவுளுக்கும் அயலாருக்கும் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழ முயல்வோம்

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்ற யூதர்களின் உண்மையைத் தேடும் கேள்வியானது நமது வாழ்க்கைக்கும் நம்பிக்கைப் பயணத்திற்கும் மிக முக்கியமானது - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரம் அன்பு, கடவுளை மனிதரிடமிருந்து பிரிக்கக்கூடாது என்றும், கடவுளுக்கும் அயலாருக்கும் திறந்த மனமும் அன்பும் கொண்டவர்களாய் நாம் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையாகிய 3ஆம் நாள் வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாற்கு நற்செய்தியில் உள்ள முதன்மையான கட்டளை என்ற பகுதி குறித்த கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.

யூதர்கள் அடிப்படையான முதன்மையான கட்டளை எது எனத் தேடும் விவாதத்தில் இருந்தனர் என்றும், மிகவும் ஆரோக்கியமான இந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர்கள் உண்மையை நோக்கிய தேடலில் இருந்தனர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? என்ற யூதர்களின் உண்மையைத் தேடும் கேள்வியானது நமது வாழ்க்கைக்கும் நம்பிக்கைப் பயணத்திற்கும் மிக முக்கியமானது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், பல விதங்களில் தடுமாறும் நாமும் சில நேரங்களில் இத்தகைய கேள்வியினை நமக்குள் கேட்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’, ‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்ற இயேசுவின் வார்த்தைகள் நமது இதயத்தின் மையமாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நமது வாழ்வு மற்றும் நம்பிக்கையின் இதயத்திற்கு நாம் திரும்பிச்செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இதயமே நமது ஆற்றல் மற்றும் உறுதியின் அடிப்படை வேர் என்றும் சுட்டிக்காட்டினார்.

நம்மால் பல காரியங்களைச் செய்ய முடிந்தாலும் அவற்றை நமக்காகவும் அன்பில்லாமலும் மட்டுமே செய்ய முடியும் அது நல்லதல்ல என்று கூறிய திருத்தந்தை அவர்கள் பிளவுபட்ட இதயம் மூடிய இதயத்தோடு செய்யப்படும் செயல்கள் நல்லதல்ல மாறாக செயல்கள் அனைத்தும் அன்புடன் செய்யப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

கடவுள் நம் ஒவ்வொருவரிடமும் நீ எப்படி அன்பு செய்தாய் என்று கேட்பார் எனவே கடவுளை அன்புசெய் அயலாரை அன்பு செய் என்ற அவரது கட்டளைகளை நாம் நமது இதயத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒவ்வொரு நாளும் ஆன்ம ஆய்வில் கடவுளை அன்புசெய்வதும் அயலாரை அன்பு செய்வதும் எனது வாழ்வில் மையமாக இருக்கின்றதா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்தார்.

எனது செபமானது என்னை அயலாரை அன்பு செய்வதை நோக்கிக் கொண்டு செல்கின்றதா? பிறரில் இறைவனைக் கண்டுகொள்கின்றேனா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், இறைவனின் திருச்சட்டத்தை தனது மாசற்ற இதயத்தில் பதித்துள்ள கன்னி மரியா, ஆண்டவரிடமும் நமது சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த நமக்கு உதவுவாராக என்று கூறி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 November 2024, 14:23

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >