வத்திக்கானில் குருத்து ஞாயிறு வழிபாடு
மெரினா ராஜ் – வத்திக்கான்
மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் குருத்து ஞாயிறு வழிபாடானது நடைபெற்றது.
சூரியனின் ஒளியும், மேகக்கூட்டங்களின் அணிவகுப்பும் மாறி மாறி வந்து இயற்கைச் சூழலுக்கு இனிமையைக் கொடுத்துக் கொண்டிருந்த வத்திக்கான் வளாகத்தில் ஏறக்குறைய 60000 திருப்பயணிகள் குழுமியிருந்தனர். ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ,சிறார், முதியோர் என வத்திக்கான் வளாகத்தில் அனைவரும் குழுமியிருக்க வளாகத்தின் நடுப்பகுதியில் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் என ஏறக்குறைய 400 பேர் கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி பவனி வந்தனர்.
திருப்பலி பீடத்தருகில் இருந்தபடியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குருத்தோலைகளை புனித நீர் கொண்டு ஆசீர்அளித்தார். திருத்தந்தை இவ்வாறு ஆசீர்அளித்து செபித்து இத்தாலிய மொழியில் வழிபாட்டினைத் துவக்கி வைத்தார். அதன்பின் பாரம்பரியமான குருத்தோலை வழிபாட்டுப்பாடல்கள் இலத்தீன் மொழியிலும் இத்தாலிய மொழியிலும் பாடப்பட்டன. திருச்சிலுவை, மெழுகுதிரிகள் ஏந்திய பீடப்பணியாளர்களைத் தொடர்ந்து, குருத்தோலை ஏந்திய கர்தினால்கள் மற்றும் ஆயர்களுடன் ஏனையோர் திருப்பலி பீடம் நோக்கி பவனி வந்தனர்.
இறைவாக்கினர் எசாயா நூலில் உள்ள இறைவார்த்தைகளைக் கொண்ட முதல் வாசகமானது இஸ்பானிய மொழியில் வாசித்தளிக்கப்பட்டது.
என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்? என்ற 22ஆவது திருப்பாடல் வரிகள் பதிலுரைப்பாடலாக இத்தாலிய மொழியில் சிஸ்டைன் சிற்றாலயப் பாடகர் குழுவினரால் பாடப்பட்டது. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் உள்ள இறைவார்த்தைகள் ஆங்கில மொழியில் வாசித்தளிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இயேசுவின் பாடுகள் பற்றிய குருத்து ஞாயிறுக்கான நீண்ட நற்செய்தி வாசகத்தை அருள்பணியாளர்கள் பலர் இணைந்து வாசித்தளித்தனர்.
இறைவார்த்தைகளுக்கு திருப்பயணிகள் அனைவரும் செவிசாய்க்க சிறிது நேர அமைதியில் அனைவரும் இறைவார்த்தைகளை தியானித்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திருப்பலியின்போது மறையுரை எதுவும் வழங்கவில்லை. நம்பிக்கையாளர் மன்றாட்டுக்களானது சீனம், பிரெஞ்சு, போலந்து, ஜெர்மானியம், யோருபா ஆகிய மொழிகளில் வாசித்தளிக்கப்பட்டன. காணிக்கைப்பவனியின்போது மூன்று குடும்பத்தார் திருப்பலிக்கானக் காணிக்கைப் பொருள்களை திருத்தந்தையிடம் அளித்து ஆசீர்பெற்றனர்.
கீழை வழிபாட்டு முறை திருஅவைகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Claudio Gugerotti அவர்கள் நற்கருணை வழிபாட்டு செபங்களை எடுத்துரைத்து திருப்பலியைத் தொடர்ந்து வழிநடத்தினார்.
திருப்பலியின் திருவிருந்து சடங்குப் பகுதியைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழக்கமாக வழங்கும் ஞாயிறு மூவேளை செப உரையினை திருப்பலி பீடத்தின் அருகில் இருந்தபடியே இறைமக்களுக்கு வழங்கினார். போர், இயற்கைச்சூழல் போன்றவற்றினால் பாதிக்கப்படும் மக்கள் ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சிறப்பு ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார். திருப்பலியின் நிறைவில் திறந்த காரில் வலம்வந்தபடியே இறைமக்கள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்