நம்பிக்கையை விதைக்கவும் அன்பைக் கட்டியெழுப்பவும்...
மெரினா ராஜ் - வத்திக்கான்
நம்பிக்கையை விதைக்கவும் அன்பைக் கட்டியெழுப்பவும் அழைக்கப்படுகின்றீர்கள் என்ற தலைப்பில் இன்றைய நாளில் சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்கான உலக நாளானது, நற்செய்திப் பணிக்கான அழைப்பாகவும், பலவிதமான குறிக்கோள்களால் வகைப்படுத்தப்படும் ஒரே திருஅவையை மீண்டும் கண்டறிவதற்கான ஓர் அரிய வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 21 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறும், நல்லாயன் ஞாயிறுமாகிய இன்று கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்காக செபிக்கும் உலக நாளை நினைவுகூர்ந்து, மூவேளை செப உரையைத் தொடர்ந்த விண்ணப்பத்தின் போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 20 சனிக்கிழமை மாலை உரோம் மறைமாவட்டத்திற்கான குருக்களாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் அருள்பொழிவுபெற்ற புதிய குருக்களை நினைவுகூர்ந்து அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அப்புதிய குருக்களுக்காக செபிப்போம் என்றும் திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் போர்ச்சூழலை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், அமைதிக்கான தனது விண்ணப்பத்தை மீண்டும் வலியுறுத்தி உரையாடலும், பேச்சுவார்த்தைக்கான பாதைகளும் விரிவடையட்டும் என்றும் கூறினார்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரயேல், நாட்டில் அமைதி நிலவ தான் தொடர்ந்து செபிப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
சோர்வடையாத மறைப்பணியாளர் என்று அழைக்கப்பட்ட அருள்பணியாளர் Matteo Pettinari விபத்தில் இறந்தது குறித்து தான் மிகவும் வருந்துவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், அவரது ஆன்மா இறைவனில் நிறையமைதி அடைய செபிப்போம் என்றும் கூறினார்.
உரோம், இத்தாலி மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், அப்போஸ்தலின் சபை அருள்சகோதரிகள், Viterbo, Brescia, Alba Adriatica மற்றும் Arezzo பகுதி திருப்பயணிகள், அனைவரையும் வாழ்த்தி தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்