உண்மையான ஆற்றல் என்பது அதிகாரத்தில் இல்லை

ஆற்றலற்ற மனிதர்களுக்கு நாம் உதவிகள் செய்து, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது, வாழ்க்கை அவர்களுக்கு எவ்வளவு தேவை, முக்கியமானது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் என்ற இறைவார்த்தையால் இயேசு நமது வாழ்வைப் புதுப்பிக்கின்றார் என்றும், உண்மையான ஆற்றல் என்பது அதிகாரத்தில் இல்லை, மாறாக எளியவர்களைப் பராமரிப்பதில் இருக்கின்றது அதுவே நம்மை ஆற்றலுடையவர்களாக மாற்றுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தனது பாடுகளை முன்னறிவித்த நற்செய்திப் பகுதி பற்றியக் கருத்துக்களை திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார்.    

மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று இயேசு கூறியதை சீடர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று இயேசு கேட்ட கேள்விக்கு பதிலளிக்காது சீடர்கள் பேசாதிருந்தார்கள் என்று கூறி அந்த அமைதியை பற்றி சிந்திக்க வலியுறுத்தினார்.

தங்களில் யார் பெரியவர்? என்று வாதாடிக்கொண்டிருந்ததாலும், அதை இயேசுவிடம் எடுத்துச்சொல்ல முடியாமல் இருந்ததாலும், அவமானத்தால் சீடர்கள் அமைதியாக இருந்தார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், தனது இறப்பை முன்னறிவித்த இயேசுவின் வார்த்தைகளுடன், தங்களுள் யார் பெரியவர் என்று வாதாடிய சீடர்களின் வார்த்தைகள் முற்றிலும் முரண்பாடாக இருந்தன என்றும் கூறினார்.

பெருமிதம் சீடர்களின் இதயத்தை மூடி வைத்திருந்த நிலையில், அவமானம் தற்போது அவர்களின் வாயை அடைத்துவிட்டது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், இருப்பினும் மறைவாக அவர்கள் பேசிய கருத்துக்களுக்கு இயேசு வெளிப்படையாக பதிலளிக்கின்றார் என்றும் எடுத்துரைத்தார்.

பலவீனமானவர்களைக் கவனித்துக்கொள்ளும்போதே நாம் ஆற்றலுடையவர்களாக மாறுகின்றோம் என்ற காரணத்தினால் தான், இயேசு குழந்தையை நடுவில் நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்று கூறினார் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

சிறு குழந்தைகளால் தானாக எதையும் செய்ய இயலாது, அத்தகைய ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்றும், குழந்தை எப்போதும் அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும், எனவே இத்தகைய ஆற்றலற்ற மனிதர்களுக்கு நாம் உதவிகள் செய்து,  அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யும்போது, வாழ்க்கை அவர்களுக்கு எவ்வளவு தேவை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

நாம் அனைவரும் வாழ்கிறோம், ஏனெனில் நாம்  பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றோம் வரவேற்கப்படுகிறோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள்,  இந்த ஆற்றலானது அந்த உண்மையை பல நேரங்களில் மறக்க வைக்கிறது, இதனால் தான் நாம், பணியாளர்களாக அல்ல ஆட்சியாளர்களாகவும், ஏழைகள், பலவீனமானவர்கள் மற்றும் சிறியவர்களை பாதிக்கச் செய்பவர்களாகவும் மாறுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.

அதிகாரப் போட்டியால் எத்தனை பேர் துன்புற்று இறக்கின்றார்கள் என்பதை நினைவுகூர்வோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  இயேசுவை புறக்கணித்தது போன்று ஏழை எளிய மக்களையும் பிறர் புறக்கணிக்கின்றார்கள், அதனால் அவர்கள் இறக்கின்றார்கள் என்றும், கூறினார்.

இயேசு மனிதர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டபோது அவர் அரவணைப்பை அல்ல மாறாக சிலுவையை மட்டுமே பெற்றுக்கொண்டார், இருப்பினும் நற்செய்தியானது, உயிருள்ள வார்த்தையாக, நம்பிக்கை நிறைந்த வார்த்தையாக இருக்கின்றது, நிராகரிக்கப்பட்டு இறந்து உயிர்த்த இயேசு ஆண்டவரைப் பற்றி எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

சிறு குழந்தைகளில் இயேசுவின் முகத்தை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்று நமக்குத் தெரியுமா? அருகில் வாழும் வீட்டாரை நாம் கவனித்துக்கொள்கின்றோமா?  மேலும் நம்மைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நன்றி சொல்கின்றோமா? என்று சிந்தித்துப்பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், அன்னை மரியாவைப் போல வீண்பெருமையிலிருந்து விடுபட்டு, பணியாற்றுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2024, 12:53

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >