விண்மீனைப் பின்தொடர்ந்த ஞானிகள் வருகை தனிச்சிறப்பு மிக்கது

பயணத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீட்பரும் அரசருமாகிய இயேசுவைக் காண ஞானிகள் வந்தார்கள் ஏனெனில், வரலாற்றில் தனிப்பெரும் இடத்தை இந்த நிகழ்வானது பெற இருக்கின்றது என்ற எதிர்நோக்கைக் கொண்டவர்களாக இருந்தார்கள்

மெரினா ராஜ் - வத்திக்கான்  

விண்மீன் ஒளியால் ஈர்க்கப்பட்டு வழிநடத்தப்பட்ட ஞானிகள் தங்களது நேரம், பொருள் போன்றவற்றை செலவழித்து தொலைதூரப் பயணம் மேற்கொள்கின்றார்கள் என்றும், பயணத்தில் ஏற்படும் பல்வேறு இடர்ப்பாடுகள் மற்றும் நிலையற்ற வாழ்க்கைக் சூழலுக்குத் தங்களை அர்ப்பணிக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 6 திங்கள் கிழமை திருக்காட்சிப் பெருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞானிகளின் வருகையானது வரலாற்றில் தனித்துவமிக்க சிறப்பினைப் பெற்றிருக்கின்றது என்றும் எடுத்துரைத்தார். 

ஞானிகள் தொலைதூரத்திலிருந்து விண்மீன் ஒளியைக் கண்டு தங்களது பயணத்தை ஆரம்பித்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அந்த ஒளியைக் கண்டுகொள்ளவில்லை என்றும், அந்த ஒளியைக் காண முயற்சி எடுக்கவில்லை ஓர் அடி கூட நகரவில்லை என்றும் கூறினார் திருத்தந்தை.

பயணத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு தடைகளையும் தாண்டி மீட்பரும் அரசருமாகிய இயேசுவைக் காண ஞானிகள் வந்தார்கள் ஏனெனில், வரலாற்றில் தனிப்பெரும் இடத்தை இந்த நிகழ்வானது பெற இருக்கின்றது என்ற எதிர்நோக்கைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்றும், அந்த நம்பிக்கையின் ஒளியில் உத்வேகத்தைப் பெற்று தங்களது பயணத்தை அவர்கள் தொடர்ந்தார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

உள்மனதில் ஏற்பட்ட தூண்டுதலை முழுமனதுடன் நம்பி ஞானிகள் விண்மீனைப் பின்பற்றினார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், எருசலேமில் இருப்பவர்கள் மீட்பர் பிறந்த செய்தி குறித்து அறிந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டிய சூழலில் அவர்கள் யாரும் அந்த மகிழ்ச்சியை அறியாது இருந்தார்கள் என்றும், தாங்கள் இருந்த இடத்தை விட்டு நகர்ந்து அச்செய்தியை அறிந்து கொள்ள அவர்கள் முயலவில்லை என்றும் கூறினார்.

மறைநூல் அறிஞர்கள், இறையியலாளர்கள் என மறைநூல்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடியவர்கள் விண்மீன் தோன்றிய காலத்தையும் நேரத்தையும் ஞானிகளிடம் கேட்டு அறிந்து கொள்கின்றனர் என்றும், அதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ளத் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர அவர்கள் விரும்பவில்லை என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. 

தேடுதலில் தங்களது வாழ்வைச் செலுத்தாதவர்கள், எருசலேமை விட்டு நகர விரும்பாதவர்களின் வாழ்வு நாம் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுக்கின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இடையர்கள் போன்றா அல்லது ஞானிகள் போன்றா யாருடைய செயல் போன்று நமது வாழ்வு இருக்கின்றது என்று சிந்தித்து பார்க்க அழைப்புவிடுத்தார்.

குளிர் நிறைந்த இரவில் இயேசுவைக் காண சென்ற இடையர்கள், உள்ளத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இறைமகனான இயேசுவைக்காண உலகின் ஓர் எல்லையிலிருந்து பயணம் செய்து வந்த ஞானிகள் என நமது வாழ்வை யாருடன் ஒப்பிடலாம் என்று சிந்தித்துப் பார்ப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உடல்ரீதியாக அவருக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், தங்கள் இதயங்கள் மற்றும் வாழ்க்கையின் கதவுகளைத் திறக்காமல், இயேசுவின் பிரசன்னத்தை மூடியவர்களாகவும் உணர்வற்றவர்களாகவும் இருக்கின்றோமா என்று சிந்திக்கவும் கேட்டுக்கொண்டார்.

வரலாற்றில் கூறப்படும் ஒரு கதையின்படி நான்காவது ஞானி மிகவும் தாமதமாக இயேசு சிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் வருகின்றார் என்றும், வரும் வழியில் அவர் தேவையில் இருந்த ஏராளமான மக்களுக்கு தான் கொண்டு வந்த விலையுயர்ந்த பரிசுப்பொருள்களின் வழியாக உதவிகள் பல செய்து வந்ததாகவும் அக்கதை குறிப்பிடுகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.    

இறுதியில் சின்னச்சிறிய என் சகோதர சகோதரிகளுக்குச் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க அவர் மக்களுக்கு செய்த உதவிகள் வழியாக இயேசுவிற்கே தனது பரிசுப்பொருள்களை வழங்கினார் என்றும், நாம் நம்முடன் இருப்பவர்களுக்கு செய்தது அனைத்தும் கடவுளுக்கே செய்தோம் என்பதை கடவுள் நன்கறிவார் என்றும் கூறினார் திருத்தந்தை.

இடையர்கள், ஞானிகளைப் பின்பற்றி, ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், சகோதர சகோதரி ஆகியோரிடம் இயேசுவை எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பதை அறிய நமக்கு கன்னி மரியா உதவ அருள்வேண்டுவோம் என்று கூறி மூவேளை செப உரையைத் தொடர்ந்த தனது ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார் திருத்தந்தை.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 January 2025, 15:36

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >