மீட்பையும் நிலைவாழ்வையும் வாக்குறுதியாக அளிக்கும் நற்செய்தி

விண்ணும் மண்ணும் ஒழிந்து போனாலும் கூட என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்ற இறைவார்த்தைகள் வழியாக நிலைத்து நிற்பது இறைவார்த்தை மட்டுமே என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்

மெரினா ரஜ் - வத்திக்கான்

நாம் சந்திக்கும் துன்பங்களானது வாழ்க்கையின் முடிவு, அழகானவைகள் எல்லாம் மறைந்து போதல் போன்றவற்றை வெளிப்படுத்துகின்றன என்றும், மீட்பையும் நிலைவாழ்வையும் நமக்கு வாக்குறுதியாக அளிக்கின்ற நிலைத்து நிற்கின்ற இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ள நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பொதுக்காலத்தின் 33ஆம் ஞாயிறு நற்செய்தி வாசகமான மானிடமகன் வருகை என்ற தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பற்றி விளக்கமளித்தார்.

இன்னல்கள், நெருக்கடிகள், தோல்விகள் போன்றவற்றில் கூட, இயேசுவின் நற்செய்தியானது, இறுதியில் எல்லாவற்றையும் இழந்துவிடுவோம் என்ற பயமின்றியும், மகிழ்ச்சியில் நிலைத்திருப்போம் என்ற நம்பிக்கையிலும், வாழ்க்கை மற்றும் வரலாற்றைப் பார்க்க நம்மை அழைக்கின்றது என்றும், கடவுள் நமது எதிர்கால மகிழ்ச்சியையும் வாழ்க்கையையும் தயார் செய்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது என்று வாழ்வின் வேதனைகளை எடுத்துரைக்கும் இயேசு, இந்த துன்பங்களை எதிர்கொள்ளும்போது, ​​பலர் உலகின் முடிவைப் பற்றி நினைக்கும் நிலையில், விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால், என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.” என்ற இறைவார்த்தைகள் வழியாக நம்பிக்கையையும் புதிய வாய்ப்பையும் வழங்குகின்றார் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை.

வாழ்வில் எது நிலைத்திருக்கும்? எது கடந்து போகும்? என்ற இரு நிலைகளில் தனது கருத்துக்களை திருப்பயணிகளிடம் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், வாழ்வின் சூழலில் நாம் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள், தோல்விகள், போர், வன்முறை, இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் துன்பங்கள், வாழ்வின் முடிவையும், அழகானவைகள் எல்லாம் மறைந்து போவதைப் போலவும் தோற்றமளிக்கின்றன என்றும் கூறினார்.

இத்தகைய துன்பங்கள் எல்லாம் மிக முக்கியமானவைகள், ஏனெனில், அவை நமக்கு உலகத்தின் எதார்த்தங்கள் நம்மை விட்டுக் கடந்து செல்பவை, நிலைத்து நிற்பவையல்ல என்ற உணர்வையும், இதயத்திற்கு அதிக நெருக்கமாக அது இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.

விண்ணும் மண்ணும் ஒழிந்து போனாலும் கூட கடவுளின் வார்த்தைகள் ஒழியவே மாட்டா என்ற இறைவார்த்தைகள் வழியாக நிலைத்து நிற்பது இறைவார்த்தை மட்டுமே என்பதை இயேசு வலியுறுத்துகின்றார் என்றும், மீட்பையும் நிலைவாழ்வையும் நமக்கு வாக்குறுதியாக அளிக்கும் இறைவார்த்தையில் நம்பிக்கை கொள்ள நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

உயிர்ப்பின் வாக்குறுதி ஒளியில், ஒவ்வொரு உண்மையும் ஒரு புதிய அர்த்தத்தைப் பெறுகிறது என்றும், எல்லாம் இறந்துவிடும், நாமும் ஒரு நாள் இறந்துவிடுவோம், ஆனால் நாம் கட்டியெழுப்பியவற்றில் அன்புசெய்தவற்றில் நாம் எதையும் இழக்க மாட்டோம், ஏனெனில் இறப்பு ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

விரைவாக கடந்து செல்லும் இவ்வுலகம் சார்ந்தவற்றிலா அல்லது நிலைவாழ்வை நோக்கி நம்மை வழிநடத்தும் இறைவார்த்தை சார்ந்தவற்றிலா எதில் நாம் இணைந்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தைக்காகத் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்த அன்னை மரியா இறைவனிடம் நமக்காகப் பரிந்துபேசட்டும் என்றும் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2024, 13:19

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >